அணிந்துரை.
~~~~~~~~~~~~~
தூயவனின் இன்னொரு மருத்துவப்போர் நாவலாக யுத்தகாண்டம் வெளிவருகின்றது. திருதராட்டினனுக்குக் கண்தெரியாத காரணத்தால் சஞ்சயன் தன் ஞானக்கண்ணால் பாரதப்போர் நடவடிக்கைகளைக் கண்டு கூறியது போல் தூயவன் எங்களுக்கும் போர்முகச் செயற்பாடுகளைத் தன் ஊனக்கண்ணால் கண்டு கூறுகிறார்.
யுத்த காண்டம் ஒரு படையணி நகர்வினை நுணுக்கமாகச் சித்தரிக்கும் நாவலாக அமைகின்றது. புறு நானூற்றுப் பாடலொன்று (225) படை நகர்வினைச் சிறிது உயர்வு நவிற்சியாகக் கூறுகின்றது. சோழன் நலங்கிளியினுடைய படையின் நகர்வு தொடங்கிவிட்டது. முன்னணி வீரர் பனையின் நுங்கினைக் குடித்துச் செல்கின்றனர். இடையணி வீரர் பனம் பழம் உண்டு செல்கின்றனர். இறுதியாக வரும் அணியினர் சுட்ட பனங்கிழங்கு தின்று செல்கின்றனர். இவ்வாறு சோழன் நலங்கிள்ளியின் படைப் பெருக்கத்தை ஆலத்தூர் கிழார் மிகைப்படக் கூறுகின்றார். ஆனால் தூயவனோ 32 கிலோ மீற்றர் தூரத்தினை ஒரு படையணி நடந்து நகர்ந்து செல்வதை உடன் நகர்ந்து விவரிக்கிறார். ஒரு படப்படிப்புக் கருவியைக் கையிலே கொண்டு அதன் வில்லையூடாகப் பலவற்றை தூரப் பார்வையாகவும் அண்மித்த பார்வையாகவும் எமக்கு வழங்குகிறார். இப்படையணி நகர்வினைக் காண ஆயிரம் கண்கள் வேண்டுமெனக் கூறப்படுகிறது.
"ஆண் போராளிகளும் பெண் போராளிகளும் தங்களிற்குரிய ஆயுதங்களுடன் நிமிர்ந்த நடையும் நேரிய பார்வையுமாக விரைந்து வரும் காட்சி மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகிறது" இந்தப் படையணி
புரியும் சமர், அச்சமரிலே காயமுற்ற வீர வேங்கைகளை மருத்துவப் போராளிகள் பராமரிக்கும் பக்குவம் இந்த நாவலிலே சித்திரிக்கப்படுகின்றன. தமிழீழப் போர் வரலாறு பல வியக்கத்தக்க சாதனைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது. அவற்றுள் ஒன்று காயமடையும் போராளிகளைக் காப்பாற்றும் மருத்துவ நடவடிக்கையாகும். தூயவன் ஒரு மருத்துவப் போராளி, முன்னணியிலே போர் நடக்க பின்னணியிலே காயமுற்றவரைக் காப்பாற்றும் போர். இப்போரிலே பங்கேற்ற தூயவன் அதனை மீண்டும் இந்த யுத்த காண்டத்திலே விவரிக்கிறார். தமிழீழ வானிலே மிதந்த இனிய கானங்களைப் பாடிய சிட்டு யுத்தகாண்டம் சித்தரிக்கும் களத்திலேயே மாவீரனாகிறான். பாரிய காயத்துடன் வரும் அவ்வரிப்புலிக் குயிலினைக் களமுனை விட்டு வேகமாக வெளியேற்ற முயற்சிக்கும்போது இன்னொரு எறிகணை அங்கு விழுந்து காயமடைந்த அம்மறவனை மாவீரனாக்குகின்றது. "ஆம் ஈழ விடுதலைக்காக உறுமிய புலியொன்று தன் பேச்சடங்கியது. பாடிய குயிலொன்று தன் மூச்சடங்கியது." என்று நாவலாசிரியர் கூறுகிறார். தூயவன் வியக்கத்தக்க எழுத்தாளன் மருத்துவக் கலையும் போர்க்கலையும் தூயவனிலே இணைவுற்றுள்ளன. இத்தகைய கலவை மிகவும் அரிதானது. உலகு போற்றும் எழுத்துருவினை உருவாக்க வல்லது. இவருடைய "இன்னொரு போர் முகம்", இந்த "யுத்த காண்டம் "ஆகியன தூயவனின் வியக்கத்தக்க எழுத்தாற்றலை வெளிப்படுத்துகின்றன. தமிழ் மொழி கணிணிக்கு முகம், கொடுக்கின்றது. இணையத்துக்கு முகம் கொடுக்கின்றது. இங்கே தூயவனுடைய மருத்துவப் போரியலுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. எடுத்துக் காட்டாக, "எப்படியோ இரத்தம் வெளியேறி விட்டது. பலமான முறிவுக்குரிய வலி. ஆள் அதிர்ச்சிக்குப் போய்விட்டாள். நாடித்துடிப்பு விதம் அதிகமாகவும் துடிக்கும் தன்மை பலவீனமாகவும் உள்ளது. சுவாசம் ஆழமற்றதாகவும் விரைவானதாகவும் நடைபெறுகின்றது. குருதி வெளியேற வேறு காயமும் இருக்க வேண்டும். உடன் ஆடைகளைக் களைந்து பார்க்கிறார்கள். முதுகுப்புறம் ஊடுருவும் காயம் உள்ளகக் குருதிப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்படியும் காப்பாற்ற வேண்டும். உடனே திரவ ஊடகத்தை நாளத்தினூடு ஏற்றச் சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் காலை வெட்டி அகற்றும் முயற்சியில் இறங்கினார்கள்" என்னும் பகுதி கால் முறிந்து வந்த ஒரு பெண் போராளியின் மருத்துவ நிலையினைக் கூறுகின்றது. தூயவனின் மொழிப்பயன்பாடு சிறப்புற்றமைகிறது.
காவியங்களிலே யுத்த காண்டம் முடிவடைந்து விடும். அந்த யுத்தத்திலே களமாடியவர்கள் மறக்கப்பட்டு விடுவர். ஆனால் மருத்துவப் போராளியான தூயவன் என்னும் படைப்பாளியின் இச்சிறிய யுத்த காண்டம் மனிதாய உணர்வுடன் அதே வேளை யதார்த்த நிலையினை நினைவுபடுத்துவதாக முடிவடைகின்றது. "ஓ...என் தேசமே! நீ விரைவில் விடுதலையடைவாய், அப்பொழுது வீரச்சாவை தழுவியவர்கள் தவிர, விழுப்புண்ணடைந்தவர்கள், முண்ணாண் சிதைந்து இயங்க முடியாதவர்கள், அங்கங்களை இழந்தவர்கள் என கணிசமானவர்கள் உன்னில் நடமாடுவார்கள். அவர்களை சுமையாக நினைப்பாயா? இல்லை சுகமாக நினைப்பாயா?"
பரபரப்பான படையணி நகர்வினையும் போரினையும் படைத்த படைப்பாளி பாரிய விளை நிலை உண்மையினை எமக்கு முன் வைத்து விடை.
பேராசிரியர். அ. சண்முகதாஸ்
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
வெளியீட்டுரை
~~~~~~~~~~~~~~
போரும் போர் சார்ந்த சூழலும் ஒரு மனிதனை கோழையாக்கி விடுவதில்லை. மாறாய் தான் வாழும் தாயகத்தில் மாற்றானால் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகள் அவனுள் விடுதலையுணர்வையும் தேசப்பற்றையும் சுதந்திரத்திற்காய் பழுச்சுமக்கும் மனப் பக்குவத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது. அந்த மாற்றத்தினால் தூண்டப்பட்ட மனிதனே போராளியாகின்றான். அந்த மனிதர்களின் போரியல் இன்ப துன்பங்களையும் களநிலை வாழ்வையும் இங்கே படைப்பாக படைத்திருக்கிறார் தூயவன் அவர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கங்களை வெளிக்கொணர வேண்டுமெனும் பேரவாவில் உள்ள எமது தலைவரின் எதிர் பார்க்கைக்கு வடிவமிடும் முயற்சியாக எமது வெளியீட்டகத்தின் படைப்பாக இவ் நூலை பதிப்பித்து பரவல் செய்வதையிட்டு நிறைவடைகின்றோம்.
நன்றி
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்*
வெளியீட்டுப் பிரிவு.
அரசியல் துறை
தமிழீழம்
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
என்னுரை
~~~~~~~~~~~~~
தமிழரின் தேசிய பலத்தைச் சிதைக்க எதிரி எடுத்துக் கொண்ட முயற்சிகள்
பல. அவற்றில் முதன்மையானது "ஜெயசிக்குறு" இராணுவ நடவடிக்கை.
இராட்சத இராணுவ இயந்திரமாகப் புறப்பட்ட அது வன்னிமண்ணை
இரண்டறுத்து சிதைக்க முனைந்தது. அதனை முறியடிக்க முறியடிப்புச்
சமர்கள் பல நடாத்தப்பட்டன. அவற்றில் "செய் அல்லது செத்துமடி"
எனவர்ணிக்கப்பட்ட ஊடறுப்புச் சமர்கள முக்கியமானவை. அதில் மூன்றாவது சமரின் சில பக்கங்கள் இங்கு "யுத்தகாண்டம்" எனும் புத்தகமாக வெளிவருகின்றது இச்சமரில் போராளி மருத்துவனாக கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது பற்றியதாகவே நகர்கின்றது. இச்சமருக்கான
வேவுத்தகவல்களைத் திரட்டுதல், ஒத்திகை பார்த்தல், முன் கூட்டியே
உள்நுளைந்து நிலையெடுத்தல் போன்ற இன்னோரின்ன சந்தர்ப்பங்களில்,
போராளிகள் சந்தித்த சோதனைகளும், வேதனைகளும், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளும் இங்கு பதியப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. சமர்களின் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் மருத்துவ இலக்கில் மாற்றம் ஏற்படுவது அரிது. அதனைப் பதிவு செய்யச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன். எனது முன்னைய ஆக்கங்கள்
வெளிவருவதற்கு காரணமானவர்களே இதற்கும் உந்து சக்தியானார்கள்.
அவர்களுக்கும், இப்பதிப்பிற்கு முன்னுரை தந்து பெருமையுறவைத்த
பேராசிரியர்
பொறுப்பாளர்
அ.சண்முகதாஸ் அவர்களுக்கும் வெளியீட்டுப் பிரிவு
திரு .
அன்ரனி
அவர்களுக்கும், தமிழத்தாய்
வெளியீட்டகத்தினருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்
தூயவன் (சுரேஸ்குமார்)
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
நெஞ்சில் தாயக விடுதலையையும் தோளில் விடுதலையின் பாரத்தையும் என்நாளும் சுமந்தவர்களாய் களத்திடை புலியாய்ச் சீறிப்பொருதி
விழி மூடித் துயில்கின்ற மாவீரச் செல்வங்களுக்கு இதைக் காணிக்கையாக்குகின்றோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பகலவன் தன் கதிர்களின் வெம்மையைக் குறைத்து மேற்கை நோக்கிப்பயணிக்கத் தொங்கிவிட்டான். தன் பொன்னிறக்கதிர்களினால் வன்னிமண்ணைச் செந்நிறமாக்கி எழில் கூட்ட எண்ணினானோ அன்றி தன் வெம்மையை விஞ்சிய வரிப்புலிகளின் போர்த்திறனை கண்ணுற எண்ணினான் போலும்.
தன் பயணத்தை சற்று மந்தமாகவே மேற்கொள்கிறான். நீண்ட நெடும் கரும் வீதியின் குன்றும், குழியுமான நிலை இம்மண்ணின் வரலாற்றை நினைவூட்டுகின்றது. வீதியோரங்களிலும், வீதியிலும் வீழ்ந்து வெடித்திருந்த ஆட்லறி எறிகணைகளின் கந்தகநெடியும், சிதறிக்கிடந்த எறிகணை சிதறல்களும், கற்களும், முறிந்து வீழ்ந்திருந்த மரக்கொப்புகளும், பருவம் முந்தியே உதிர்ந்த பச்சை இலைகளும் சூழலின் வழமைக்குமாறான அசாதாரணநிலையை பிரசவித்திருக்கின்றன. ஆனால் கடந்த இரண்டு மாதமாக இம்மண்ணிற்கு இது ஒரு சாதாரணநிலையே. வீதியின் இருமருங்கிலும் கிட்டவாகவும், சற்று எட்டவாகவும், இறந்து அழுகி
உருக்குலைந்து கொண்டிருக்கும் நாய்களினதும், கால்நடைகளினதும் துர்நாற்றம் கந்தகநெடியுடன் கலந்து காற்றுவீசும் போது இடையிடைவந்து நாசியைத் தாக்கியதால் அச்சூழலை மேலும் விகாரமாக்கியது.
வீதியின் ஓரமாக நிற்கும் பாலைமரத்தில் ஒருகாலை மடக்கிவைத்த வண்ணம் மறுகாலை நிலத்தில் ஊன்றியவண்ணம் மரத்தில் சாய்ந்து மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டியவாறு நிற்கும் அவன் மனதில் பலவித உணர்வுகள் தலைகாட்ட முற்படுகின்றன. இம்மண்ணில் போர்புரிவதால் ஏற்பட்ட பெருமிதமா! அல்லது எம்மக்கள் படும் அல்லலை பல முறை நேரில் காண்பதால் ஏற்பட்டதாக்கமா? இல்லை தூரநிற்கும் உறவுகளை எண்ணியதால் ஏற்பட்ட ஏக்கமா? இனங்காண முடியாமல் தடுமாறுகின்றான். ஆனால் ஏற்படும் உணர்வுரேகைகள் அவன் முகத்தை குறுக்கறுத்து ஓடமுனைவதை அகக்கண்ணால் பார்க்க முடிகிறது. எதையோ எண்ணியபடி வடக்கு நோக்கித் தன் பார்வையைத் திருப்புகிறான். நீண்ட வீதியின் இருமருங்கிலும் நிற்கும் பலவித உயர்ந்த மரங்கள் வீதிக்கு நிழற்குடை
விரித்து அதன்கருமையை மேலும் அதிகரிக்க உதவுகின்றன.
சற்றுத் தொலைவில் இருந்து அவன் நிற்கும் திசையைநோக்கி வரிப்புலியுடை அணிந்த விடுதலைப்புலிகளின் வீதியின் இடப்பக்கமாக நகரத்தொடங்கியிருந்தது. வலப்பக்கமாக படையணி ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் தங்களிற்குரிய ஆயுதங்களுடன் நிமிர்ந்த நடையும், நேரிய பார்வையுமாக விரைந்து வருங் காட்சி மனதில் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
மரத்தில் முட்டுக்கொடுத்திருந்த காலை எடுத்து நிலத்தில் ஊன்றி நேராக நின்று அவர்கள் அணிவகுத்துவரும் இக்காட்சியை கண்களால் பார்க்கிறான். இக்காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டுமென எழுந்த வரிகளை இடைமறிக்கின்றது எதிரிவிடும் வரலாற்றுத் தவறின் கணபரிமாணம். இதன் விளைவுகளை பகைவன் உணரும்போது அதிலிருந்து அவனால் விடுபடமுடியாத நிலையே உருவாகும். "நீரில் நீராடுகிறேன் என இறங்கி முதலையிடம் காலை பிடிகொடுத்தால் எவ்வாறு இருக்குமோ அந்நிலை எதிரிக்கு ஏற்படும் என்பதே நிகழ்காலமாகும், எதிர்காலம் இதையே விரைவில் உணர்த்தப் போகின்றது.......
(தொடரும்)
-யுத்தகாண்டம் (தமிழீழப் போரியல் குறுநாவல்)
-ஆசிரியர் தூயவன்
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்
குறிப்பு : நூல்வடிவம் முழு உரிமைகளும் நூலாசிரியர்,பதிப்பகத்தை சார்ந்தது, காகிதவடிவத்தில் பதிவேற்ற சம்பந்தபட்டவர்களின் அனுமதி பெறவும். சமூக ஊடகத்தின் மூலம் தமிழர் சேனையின் போராட்ட வரலாறு தமிழர்கள் மத்தியில் அனைவருக்கும் தெரியவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் எனது இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு தரவும் நன்றி.
No comments:
Post a Comment