Sunday, 15 March 2026

ஒற்றை முத்து மேஜர் பாரதி

ஒற்றை முத்து
~~~~~~~~~~~~~
இவர் தன் குடும்பத்துக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. தங்கள் உயிரிலும் மேலாக பெற்றோரால் நேசிக்கப்பட்டார். வறுமையின் கோரப்பிடி இவரது குடும்பத்தைப் பாதித்ததாலும் அது அவர்களது இதயத்தை பாதிக்கவில்லை.

1986ம் ஆண்டு காலப் பகுதியிலே தனது பல்கலைக்கழகப் படிப்பை நிறுத்திப் புலிகளின் போராட்டப் பாதையில் பாரதி தன்னை இணைத்துக் கொண்டார். 1987ம் ஆண்டு மகளிர் படை யணியின் இரண்டாவது பயிற்சி முகாமுக்காக பெண் போராளிகள் தெரிவு செய்யப்பட்டபோது தானும் அதில் பயிற்சி பெற முடியவில்லையே என்று பாரதி மிகவும் மன வேதனைப்பட்டார். "எல்லோரும் பயிற்சிக்கு போனால் தளத்திலே நின்று வேலைகளைக் கவனிப்பதற்கும் ஆட்கள் தேவை. நீங்கள் அப்பொறுப்பை ஏற்றுச் செய்யவேண்டும்” என்று லெப். கேணல் திலீபன் கூறியதற்கிணங்க, பாரதி தன் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார். மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக வாழ்வை மேம்படுத்தும் வேலைகளிலும் பாரதி ஈடுபட்டார். சுதந்திரப் பறவைகளின் ஒன்பதாவது இதழை பாரதி வெளியிட்டார்.

இந்திய இராணுவத்தை இம் மண்ணிலிருந்து விரட்டியடித்த துப்பாக்கி வேட்டொலிகளில் எல்லாப் போராளிகளையும் போல பாரதியின் துப்பாக்கியோடும் சேர்ந்து அவரது பேனாவுக்கும் கணிசமான பங்கு இருந்தது.

1990ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் மாணவர் இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்த காலத்தில் பாரதி ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்நேரத்தில் தான் இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்தது. பாரதி களம் சென்றார். இராணுவக் காவலரண்களை அவதானிப்பதற்காக சென்று கொண்டிருந்த வேளையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலில் காயமடைந்தார்.

மீண்டும் பெண்களின் சமூக மேம்பாட்டுக்கான வேலைத் திட்டங்களை வகுத்துச் செயற்பட்ட பாரதி விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணியின் துணைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். எந்த வேலைகள் வந்தாலும் எழுதுவதை மட்டும் பாரதி நிறுத்தவேயில்லை. பாரதியின் எழுத்துக்களில் சூரியக்குழந்தை, பூபதிக் கோள், சிதறிப்போன சிவப்பு வல்லரசு ஐ.நா.சபையே, அன்பான அம்மா போன்ற கவிதைகள் குறிப்பிடத்தக்கது.

1992இல் மேஜர் பாரதி சீதன ஆய்வு செய்வதற்காக வன்னிக்கு போயிருந்த நேரத்தில், தவறுதலாக சிறுநாவற்குளத்திலுள்ள சிறீலங்கா இராணுவத்தினரின் எல்லைக்குள் பிரவேசித்தபோது ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்தார்.

-மாலினி
சூரியப்புதல்வர்கள்

No comments:

Post a Comment