வெளியில் இருந்து போராட்டச் செய்திகளை மட்டும் கேட்பதற்கும், வெற்றிகளை கேட்டு மகிழ்சி அடைவதற்கும் அப்பால் அந்தச் செய்திகளின் உருவாக்கத்தின் யதார்த்தம் அம்மாவை அதிகமாக சிந்திக்க வைத்தது.
விட்டுக் கொடுக்கப்பட முடியாததான இவ்விடுதலைப் போராட்டம் இத்தனை கடினமானதா? இவ்வளவு கண்ணீரை வரவழைப்பதா? இழப்புக்களை குறைத்தோ அல்லது
குறைக்கவோ ஏதாவது செய்யமுடியாதா? அம்மா அரசியல், இராணுவ வித்தகத்துடன் சிந்தித்தாவோ? இல்லையோ? அம்மாவாகச் சிந்தித்தா. எல்லாப் போராளிகளையும் தன் பிள்ளையாய் பார்த்த அம்மாவாக சிந்தித்தா.
எம் தாயகத்தில் விளைவிக்கும் ஆக்கிரமிப்பு கொடுமையின் ஒரு சிறு பங்காவது எதிரியின் கோட்டைக்குள் திருப்பிக் கொடுக்கப்படுவது அம்மா திருப்தியுடன் பார்க்கும் செய்திதான். அதுவுமல்லாது எதிரியின் பெரும் நிலைகள் அவ்வப்போது ஆங்காங்கே அழிக்கப்படுவதும் அது எதிரிக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியும் அம்மா அறிவார். அதில் எம் போராளிகள் இங்கு போல் பெரும் இழப்புக்களை சந்திப்பதில்லை என்பதும் அம்மாவுக்கு தெரியும்.
ஏற்கனவே எரிபற்று நிலையில் இருந்த அம்மாவின் மனம்தான் இந்த வழியை நாடிப்போனதோ அல்லது அம்மாவை அறிந்து சந்தித்த அந்த போராளிகள்தான் அம்மாவின் மனதில் தீயை மூட்டினரோ? என்னவோ? அம்மா இப்போது புலனாய்வுத்துறையின் ஆள், முகவராம். வெளிவேலைக்கான முகவராம்.
அம்மா இப்போது மாறி விட்டா. முன்பு குடும்பம், அயலவர் என்று எல்லா
இடமும் செய்தி சொல்லி மருத்துவமனை சென்று வருபவர். இப்போது சுருக்கமாக வேறெங்கோ தனியாகப் போய்வரத் தொடங்கிவிட்டா. மருத்துவமனை போய்வர நேரம் இருக்குதோ இல்லையோ அம்மா இப்ப அங்கை எல்லாம் போகக்கூடாதாம். மருத்துவமனை என்றில்லை. இயக்கம் இருக்கிற இடம் ஒன்றுக்கும் போய் வரவும் கூடாதாம். இயக்கத்திற்கு ஆதரவாக கதைக்கக்கூடாதாம்.
அம்மாவுக்கு தன்னையே நம்ப முடியாதபடி ஆச்சரியம் கலந்த பெருமை. சி. ஐ.ஏ. கே.ஜி.பி. மொசாட் என்று புலனாய்வு அமைப்புக்களை பட்டியலிடுவதுடன் எங்கட வேலைத்திட்டம் என்று ஏதோதோ விளக்கங்கள். அம்மாவுக்கு எதுவெது விளங்குகிறதோ? இல்லையோ? மனதுக்குள் குறுகுறுவென்று ஆர்வ முனைப்பு.
அம்மாவுக்குள் இப்போது வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அவர் இப்போது இன்னொரு ஆளாகவும் செயற்படக் கூடியவராக ஆகிவிட்டார்.
"தலைநகர் அதிர்ந்தது" "தற்கொலையாளி அடையாளம் காணப்பட்டார்" "புலிகளைத் தேடி வலைவிரிப்பு""சூத்திரதாரி தலைமறைவு" "அடையாளம் காணப்பட்டவரின் பெயர் போலியானதென பொலிசார் தெரிவிப்பு" உலகமே செய்திகளை வியப்புடன் நோக்கும். சூழ உள்ள சுற்றத்தினரும் கூட தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல செய்திகளும் கற்பனைகளுமாக கதைகதையாய் பீற்றித்திரிவார். எல்லாவற்றையும் அமைதியாக அமத்தலாக பார்த்தபடி பட்டுக்கொள்ளாமல் இருப்பா அம்மா.
ஆக, அம்மாவுக்குள் இப்போ வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.
அவ்வப்போது வந்து அன்பு மகனை பார்த்துக்கொள்வது தவிர மற்றும்படி எவ்வளவோ மாறிப்போனா அம்மா.
இதற்கிடையில் அம்மாவுடன் மகனுக்கு சரியான கோபமாம். அம்மாவின் அக்கா பெரியம்மா- மூலமாக செய்தியனுப்பியிருந்தான். "அட இவர் பெரிய மனுசனாகி இப்ப இவருக்கு கோபமும் வருமே" என செல்லமாய் சொல்லிவிட்டிருந்தா அம்மா.
இவனது போராளி நண்பனொருவன் ஊர்ப்பக்கமாய் வந்தபோது "சின்னதாய் ஒரு மூஸ் அடித்து அம்மாவிடம் போய் இவனது சுகநலன் சொல்லியுள்ளான். அவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் அனுப்பிவிட்டாவாம் அம்மா. போய்வந்தவன் குறையாக பேசவோ
இல்லை பகிடியாகவோ சொன்னானோ அல்லது அவன் சொல்லாமல் விட இவன்தான் கதைவிட்டு அறிந்தானோ என்னவோ? ஆளுக்கு சரியான கோபம்.
அம்மா வழமையில் அப்படியில்லை. எல்லோரையும் "குறிப்பாக போராளிகளை" உபசரிப்பதில் அதுவும் சக்திக்கு மீறியே உபசரிப்பதில் முன்னிப்பவர்தான். அன்று
அந்த ஏழைத்தாய்க்கு என்ன கஸ்ரமோ?
வசதிக்குறைவோ?
வீம்புக்காக அம்மாவில் கோபம் போட்டாலும் அவ்வப்போது பெரியம்மாவின் வீடு வந்து "அம்மாவில் இப்போதும் கோபம்தான்" என்று செய்தி சொல்லிப் போவான்.
மகன் பெரியம்மா வீடு வந்து. அம்மாவில் கோபம் சொல்லி நிற்பதும், அம்மாவின் சமையல் வேலிகளுக்குள்ளால் பயணித்து பெரியம்மா வீடு வந்து மகனிடம் சேர்வதும் நல்லதொரு நாடகம். அம்மாவின் கை மணம் தெரிந்தும் தெரியாதது போல நல்ல சாப்பாடு என பெரியம்மாவை புகழ்ந்துவிட்டு போகும் பிள்ளையை வேலியால் பார்த்திருப்பா அம்மா. தான் பார்ப்பது தெரிந்தால் அவருக்கு இன்னும் எழுப்பமாய்ப் போய்விடும் என அம்மா, மறைவாய் நின்று சிரிப்பது தெரியாமல் அம்மாவை தேடுவான்.
-ச. பொட்டு
No comments:
Post a Comment