Thursday, 19 March 2026

பலம் - சூரியப்புதல்வர்கள்

பலம்
~~~~~
வட்டுக்கோட்டைச் சந்திக்குச் செல்லும் பாதை. ஒரு 'விடுதலைப்புலி' விரைவாகப் போய்க் கொண்டிருக்கிறான்.

சட்டைப்பையில் 'சயனைட்' புட்டி பத்திரமாக இருக்கிறது.

ஒவ்வொரு மணித்துளியும் சாவுக்குப் பக்கத்தில் இறுமாப்போடு நிமிர்ந்து நிற்கும் அந்த வீரன் போர்க்களத்தில் ஏதோ ஒரு கடமைக்காக விரைகிறான்.

எதிர்ப்புறமாக வந்த கிழவி ஒருத்தி பதட்டத்தோடு கையை நீட்டி அவனைத் தடுத்து நிறுத்துகிறாள்.

நிமிர்ந்து பார்க்கிறான்.

'தம்பி.... வட்டுக்கோட்டைச் சந்தியிலை இந்திய 'ஆமி'க்காரன்கள் படுத்துக் கிடக்கிறானுகள் மோனே.... உந்தப்பக்கம் போகாதே அப்பு..'

தளதளத்த குரல்,

கிழவி சொன்னது அவனுக்குப் புரிய வில்லை.

தொடர்ந்து அதே திசையில் விரைவாக நடக்கிறாள்...

இரண்டு அடிகள் வைக்கவில்லை. கிழவி தலையில் அடித்து 'ஓ!' என்று கதறும் ஓலம் அவன் கால்களை இழுத்து நிறுத்துகிறது.

ஏன் கிழவி அழுகிறாள்?

திரும்பி வருகிறான்.

'ஏனணை அழுறே?'

கிழவி அழுது கொண்டே ஒவ்வொரு
சொல்லாக அவனுக்கு விளங்கச் சொல்லுகிறாள்.

வட்டுக்கோட்டைச் சந்தியிலை......'

இப்போது அவனுக்குப் புரிகிறது.

'நீயெல்லாம் உயிரோட இருந்தாத்தான் மோனே உவனுகளோட போராடலாம்....'

கிழவி தொடர்ந்து அழுகிறாள்.

மேனி சிலிர்க்கிறது.

கண்களில் நீர் பனிக்க -கிழவியைக் கைகளால் அணைத்துக்கொண்டே அவன் எதிர்த்திசையில் திரும்புகிறான்.

நண்பர்களோடு பேசும்போது இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இன்றும் அந்த விடுதலைப்புலி சொல்லிக் கொள்கிறானாம்.

'இது தான் எங்கள் பலம்.'

-சூரியப்புதல்வர்கள்

No comments:

Post a Comment