இன்று அனைத்துலக மகளிர் தினம்.
உலகப் பெண்ணினத்தின் எழுச்சி தினமாகிய இப்புரட்சிநாள் தமிழீழமெங்கும் கொண்டாடப்படுவதையிட்டு நான்மகிழ்ச்சியடைகிறேன்.
எமது சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. விடுதலைப் போராக வீசிக்கொண்டிருக்கும் வரலாற்றுப் புயல், எமது மண்ணில் காலம்காலமாக நிலைத்திருந்த பழைமைவாத விருட்சங்களை வேரோடு பிடுங்கி வீழ்த்திவருகிறது. எமது மனக் குகையில் குடியிருந்த மூட நம்பிக்கைப் பேய்கள் விரட்டப்பட்டு வருகின்றன. எமது சமூகக் கருத்துலகில் புதிய பார்வை மலர்கிறது. புதிய விழிப்புணர்வு தோன்றிவருகி றது. சமூக உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எமது போராட்டத்தினுள் ஒரு போராட்டமாகப் பெண் விடுதலைப் போர் இன்று முனைப்புற்று வருகிறது. பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடு தலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.
அதன் வளர்ச்சியும் எழுச்சியும் ஒப்பில்லாத ஒரு தனிச் சரித்திரம். மண்ணின் விடிவிற்காகவும், பெண்ணின் விமோசனத்திற்காகவும் இன்று தமிழீழப் புரட்சிப் பெண் புலியாக மாறிவிட்டாள். அநீதிக்கு எதிரான ஆவேச நெருப்பாக அவள் இன்று ஆயுதமேந்தி நிற்கிறாள். இந்த வரலாற்றுத் திருப்பத்திற்கு எமது இயக்கமே வழி சமைத்துக் கொடுத்தது.
சமத்துவத்தை நோக்கிய பயணமாக பெண் உரிமைப் போராட்டம் தொடர்கிறது. பாலியல் வேறுபாட்டின் அடிப்படையில் சமத்துவமற்ற சமூக உறவுகள் உருவாக்கம் பெற்றுள்ளன. எல்லாக் காலங்களிலும்,எல்லாச் சமூகங்களிலும், எல்லாப்
பண்பாட்டு வடிவங்களிலும் இந்த சமத்துவமற்ற மனித உறவு நிலவி வருகிறது. பெண்ணைத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விட்டிருக்கும் இந்தச் சமூக அநீதியை எதிர்த்து, இன்று உலகப் பெண்ணினம் போர்க்கொடி உயர்த்தி நிற்கிறது.
பால்ரீதியான உடற்கூற்று வேறுபாடு என்பது, இயற்கையின் திருவிளையாடலாக இன விருத்திக்கு அளிக்கப்பட்ட கொடை. உயிர்ப்படைப்பிற்காகச் சிருஷ்டிக்கப்பட்ட உடற்கூற்றின் அடிப் படையில் ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தி, சமத்துவமற்ற உறவுகளைச் சமூகம் பின்னி விட்டிருக்கிறது. பாலியல் வேறுபாடும், அதன் அடிப்படையில் தோன்றிய பண்பாட்டு நியமங்களும், அவை பெண்மீது பதித்துவிட்ட படிமங்களும் பார்வைகளும் ஆண் -பெண் சமத்துவத்திற்கு முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன.
மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது. அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது. இந்த மனிதத்தின் ஆற்றல்களை உடற்கூறு நிர்ணயிப்பதல்ல.
பெண்ணிடமும் மனிதம் இருக்கிறது. அதன் அற்புதமான ஆற்றல்களையும், அலாதியான பண்புகளையும் பாலியல் அளவு கோலால் நிர்ணயிக்க முடியாது. எதையும் பெண்ணால் சாதித்து விடமுடியும் என்பதற்கு, எமது போராட்டம் ஓர் உன்னத உதா ரணமாகத் திகழ்கிறது.
பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக, ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலான, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகிறது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக்கொள்ளும் பொழுதுதான் ஆண் பெண் சமத்துவம் சாத்தியமாகும்.
அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பு இன்று நடத்தும் தமிழீழப் பெண்கள் எழுச்சி வைபவத்திற்கு, எனது நல்லாசியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"புலிகளின் தாகம் "
"தமிழீழத் தாயகம் "
மார்ச் 8 ஆம் திகதி அன்று, அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டும், அந்நாளில் எமது மகளீர் அமைப்பினால் நடாத்தப்பட்ட எழுச்சி விழாவினை வாழ்த்தியும், தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுத்த செய்தி.
-விபு இதழ் பங்குனி 1993.
No comments:
Post a Comment