Monday, 9 March 2026

யுத்தகாண்டம் - பாகம் 5 தூயவன்

முன்னால் சென்று கொண்டிருந்த சந்திரன் நின்று திரும்பி இவன் முகத்தைப் பார்க்கிறான். இவன் மனதில் ஓடிய எண்ணங்களை விளங்கியதனால் என்னவோ சற்று நின்று "இந்த இடத்தில் என்ன நடந்தது தெரியுமா?" கேட்கிறான். இவன் தெரியாது என்பதனை தலையசைப்பின் மூலம் தெரிவிக்கின்றான். சந்திரன் அந்த சம்பவத்தை விபரிக்க 
தொடங்குகின்றான்.......👇5

”சுமார் இரண்டு கிழமைக்கு முன்னால் இதில் ஒரு அம்புஸ் நடந்தது. என்ன மாதிரி எண்டு தெரியுமா? கேட்ட சந்திரன் பதிலை எதிர்பார்க்காமலேயே தொடர்கிறான்." யங்கிள் கொமான்டோஸ் என்று அவனில் ஒரு பிரிவு இருக்குது, அவங்களுக்கு காடுகளுக்குள் வந்து எங்கட ஆக்களுக்கு அம்புஸ் கொடுக்கிறதுதான் வேலை. ஒரு நாள் இந்த வீதியை மேற்கில் இருந்து கிழக்காக் கடந்து, கொஞ்சத்தூரம் கிளியர் பண்ணிப்போட்டு படுத்திட்டாங்கள் என்ன மாதிரியெண்டா.... சிறிது நிதானித்தவன் தொடர்கிறான். இந்தா விழுந்து கிடக்கிறதே பாலமரம், இதன் அடியில் கோடக்ஸ் சுத்தி வெடிக்கும்போது சரியாக வீதிக்குக் குறுக்கே விழவேணும், இப்ப விழுந்து கிடக்கிறமாதிரி. இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். தட்டித்தவறி எதிர்ப்பக்கம் விழுந்தால் எல்லாம் குழம்பிப்போயிடும், அதுக்கேற்ற மாதிரி கோடெக்ஸ்சப் பொருத்திப்போட்டு 02 கிளைமோரையும் வைச்சுப்போட்டு பொய்சனில் இருந்திட்டாங்கள். எங்கடயள் தெரியாதே" எனக்கூற  முனைந்தவன், தங்களைத் தாங்களே குறைத்துக் கருதுகின்றோமே என எண்ணியதால் என்னவோ அதனை முடிக்காமல் தொடர்கிறான்.

"முன்னால நின்ற மற்றப் பெடியளுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்து விட்டு றைக்ரரில் இரண்டு பேர் வந்திருக்கினம். பிறகு என்ன இந்த மரத்திற்கு முன்னாலை வரக்க கோடெக்ஸ் வெடிக்க, மரம் சடாரென முறிந்து வீதிக்கு குறுக்கே விழ இவர்கள் திகைத்தார்கள், என்ன செய்வதென முடிவு எடுக்க முதல் இரண்டு கிளைமோரும் வெடிக்க தொடர்ந்து எல். எம்.ஜி ஆல் அவன் பொழிந்து தள்ள என்ன நடந்ததென்று தெரியிறதுக்க முதலே இரண்டு பேரும் போய்ச் சேந்திட்டினம். போயிட்டாங்கள், பிறகென்ன எங்கடயாக்கள் வந்து பார்க்கேக்க ரைக்ரர் ஒரு பக்கத்தில் பிரண்டுகிடக்க, இரண்டு பேற்ற பொடியும் பக்கத்தில, பக்கத்தில கிடந்தது." இவ்வளவையும் மூச்சு விடாமல் சொல்லிமுடித்தவன் சிறிது நேரம் அமைதியாக வருகின்றான். வந்தவங்கள் மினக்கடாம உடனேயே
திடீரென இவனைக்கேட்கிறான். "அண்ணா! உலகில் சிறந்த கெரில்லா எதிர்ப்பு இராணுவம் என்று எதை கருதுறிங்க?" திடீரெனக்கேட்கப்பட்ட இக்கேள்விக்குரிய பதிலைச் சொல்லமுடியாமல் தடுமாறுகின்றான். இவனை அதிகம் சோதிக்க விரும்பாதவன்போலும் சந்திரன் சொல்கிறான் "ஸ்ரீலங்கா இராணுவம் தான்" இவன் ஒன்றும் விளங்காமல் அவனை பார்த்துக்
கேட்கின்றான் "ஏன்? அமெரிக்கன்தானே இவங்கட ஜங்கிள் கொமண்டோசுக்குகெல்லாம் பயிற்சி கொடுக்கிறாங்கள் அப்படியெண்டால்" என்று தொடர முனைந்தவனை இடைமறித்தவன். 'இல்லை உலகிலேயே தலைசிறந்த கெரில்லா இயக்கமெண்று பேரெடுத்த ஆக்கள் நாங்களெல்லோ அப்படியெண்டால் ஸ்ரீலங்கா இராணுவம்தான் சிறந்த கெரில்லா எதிர்ப்பு இராணுவமாக இருக்கமுடியும், அதனால்தான் அவங்கள் எங்களுக்கு தாக்குப் பிடிக்கிறாங்கள். வேண்டியிருக்கவேண்டும்.' இல்லாட்டி நாங்கள் எப்பவோ தர்க்கரீதியான அவனின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது.

"அண்ண உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமே.....?" என்ன விசயம்? "CIA காரங்கள் இந்திய இராணுவத்திடம் அவையள் இங்கு பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்பிறதாகக் கேட்டிருக்கினமாம். பேப்பரில படிச்சனான்." "ஏன் வியட்னாம் மாதிரி எங்கேயும் போய் மூக்கை நுளைக்கப்போகினமே? உலக அரசியல் பயிற்சி எங்களுக்கு பெரிசா ஒண்டும் தெரியாதுதானே, ஆனால் வியட்னாம் வரலாறு எங்களுக்கு ஒரு உற்சாகமூட்டும் விடயம் தானே!" கேட்டவன் ஏதோ யோசித்தவன்போல் திடீரென சொல்கிறான் "அண்ண! இவங்கள் ஜங்கிள் கொமாண்டோசுக்கு ஒருக்கா நல்லா கொடுக்கவேணும். இல்லாட்டி இப்படி தொடர்ந்து வாலாட்டிக் கொண்டே இருப்பாங்கள்." "ஓமோம் ஒருக்காக கொடுக்கத்தான் வேணும்" நானும் கேள்விப்பட்டனான் எண்பத்தி ஐந்திலயாம் வடிவா ஞாபகமில்லை சொன்னவங்கள், ஏதோ ஒரு விடயத்தை சொல்லப்போகிறான் என எதிர்பார்த்த சந்திரன் இவனை துரிதப்படுத்துகின்றான். 

"அண்ணை சொல்லுங்கள்." "இப்படித்தான் சுதுமலையில் கிட்டண்ணா இருந்த போது இஸ்ரேல் பாணியில் கொமாண்டோ றைற்பண்ண ஐந்து கெலியில வந்து இறங்கினவையள் பிறகென்ன கிட்டண்ணையின்ர கொமாண்டிங்கெல்லே வேண்டிக் கட்டிக்கொண்டு திரும்பிற்றினம்." "பிறகு ஒருக்காவும் இவங்கள் முயற்சிக்க இல்லையே?" "அதுக்கு பிறகு அந்த முறையைக் கைவிட்டிட்டினம். ஆனால் அண்மையில் ஆகாயப்படையும் நேவிக்காறங்களும் சேர்ந்து சுண்டிக்குளத்தில எங்கட கடற்புலிகளின்ற ராடர் நிலயத்தை கொமாண்டோ ரெயிட் பண்ண வந்து வேண்டிக் கட்டினவையள் தானே. உனக்கும் தெரியும் தானே?" "ஓமோம் அதில் அவன்ற போட் ஒன்றும் கெலியொன்டும் சேதமாகப்போனது. எங்களில் ஒரு லெப்ரிணன்ட் கேணலும் முடிஞ்சுது." எனக்கூறினான். "என்ன இருந்தாலும் நாங்க ஒரு ஸ்ராண்டட்டான இராணுவத்தோடதான் சண்டை பிடிக்கிறம். கவனமாக இருக்கவேணும் அவன்ற கிறிக்கற் ரீம் மாதிரி அவனும் வளர்ந்துகொண்டு வாறான் என்று கூறிய சந்திரன் சண்டையைக்கொண்டு போய் கிரிக்கட்டோட ஒப்பிட்டதை இவனால் விளங்க முடியவில்லை. அப்படி இருந்தும் தொடர்ந்தும் ஆமோதிக்கின்றான்.

"அண்ண எனக்கு ஒரு பழசு சொன்னது ஞாபகத்திற்கு வருகின்றது" "என்ன விசயம்?" "அந்தாள் சொன்னது தம்பி! நீங்கதான் சிங்களவங்களுக்கு சண்டை பழக்கிறீங்கள் பொய்யெண்டா இருந்து பாருங்கோ முந்தி இவங்கள் இப்படி சண்டைபிடிப்பாங்களோ! மோட்டுச்சிங்களவங்கள் என்று தான் கூறுகின்றனாங்கள்  அப்ப பிரச்சனை நடக்கேக்க இந்தியாவின்  உதவியத்தானே நாடினவங்கள்." "அதிலையும் உண்மை இல்லை என்று இல்லை! ஆனால் சூழலுக்கு அடப்பண்ணுறது என்பது இயற்கையான விசயம்
தானே!" 
இவன் தனது கருத்தை முன்வைக்க அதுவும் சரிதான் என்கிறான். "அண்ண! அவங்களும் இப்ப மாவீரர் துயிலும் இல்லம் மாதிரி கட்டுறாங்களாம்!" சந்திரன் வியப்புடன் கேட்கின்றான். "ஓமோம் எதிரி எங்களைப்பார்த்து திருந்துகிறானோ இல்லையோ படிக்கிறான். ஆனால் கொஞ்சம் அல்ல நிறையவே அநாகரீகமாகவும் நடக்கின்றான். இல்லாட்டி எங்கட மாவீரர் மயானத்தை உழுது தள்ளுவானே!" இதைக்கேட்கும்போது அவனது மூச்சில் சூடு அதிகமாகி இருப்பது தெரிகின்றது. நீங்கள் சொல்லுகின்றதும் சரியண்ணை.

அவங்களுக்கு யுத்த தர்மம் தெரியாது. நல்லகாலம் எங்கட தளபதியள் நாங்கள் மண்டைதீவுக்குள்ள இறங்கேக்க சொன்னவையள் கொப்பேக்கடுவன்ர சமாதி கட்டிவைத்திருக்கிறாங்கள். அதனை ஒன்றும் செய்யவேண்டாம் எண்டு. இல்லாட்டி நாங்களும் எதுவும் செய்துபோட்டு வர, எங்களுக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும் என்று கூறியவன் முன்னால் போன போராளி ஒருவன் பாரத்தை விழுத்திப்போட்டுநிற்க "நான் போய்த்தூக்கிவிடுகிறன். நீங்கள் கெதியா வாங்கோ" சொல்லிவிட்டு தனது தோளில் இருக்கும் பாரமூட்டை குலுங்கக் குலுங்க ஓடிப்போகிறான். "இவனோ இதுக்குமேல் வேகமாக நடக்க இயலாது பின்னால வாற குறுப்போட வாறன் நீ முன்னால் போ" என்று கூறி அனுப்பிவிட்டு தனது வேகத்திற்கே நடக்கிறான்.

களைப்பு அதிகமாக இவன் பின் தங்கத் தொடங்கினான். இவனின் பின்னால் வந்த குறுப்காறரும் நின்று விட்டார்கள். அவர்கள் சற்று நேரம் இடைவெளி விட்டுத்தான் வருவார்கள். இவனுக்கு முன்னால் சென்றவருக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வந்தது. தண்ணீர்த் தாகம் வாட்டத்
தொடங்கிவிட்டது. இனி ஒன்றும் செய்ய இயலாது என்னும் நிலையில் இரண்டு முரடு தண்ணீர் குடிக்கின்றான். "சீ..... கனக்கா குடிக்கக் கூடாது பிறகு கஸ்டப்படவேணும் என உள்மனம் பயமுறுத்த நீர்க்கானை மூடிவிட்டு மீண்டும் நடக்கின்றான். முன் சென்றவர்கள் வளைவுகளில் மறைந்து விட்டார்கள். இவனுக்கோ களைப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குருதியில் குளுக்கோஸ் எல்லாம் குறைஞ்சு போயிட்டுது. அதுதான் களைக்குது" "சீ..... இப்படி தெரிந்தால் குளுக்கோஸ் எடுக்க இயலாது என்றாலும் கொஞ்சம் இரண்டு இரண்டு முரடு தண்ணீர் குடிக்கின்றான்." சீ.... சீனியாவது டம் பண்ணிக்கொண்டு வந்திருக்கலாம் என தன்னைத்தானே நொந்து கொள்கின்றான். இன்னும் கொஞ்சம் தண்ணீர் குடித்தால் கெதியா நடக்கலாம் பிறகென்ன மீண்டும் இரண்டு முரடு குடிக்கிறான். தாகம் தீர்ந்த மாதிரி இல்லை. தொடர்ந்து மடமடவென வயிறு நிறைய தண்ணீர் குடித்தான். இப்ப நிலைமை மோசமாகப்போயிட்டுது. நிறைய தண்ணீர் குடித்ததால் நடக்க ஏலாமல் இருக்குது. தவளை விழுங்கின சாரைப்பாம்பு நிலமை மாறிவிட்டது. மெல்ல மெல்லமாக நடந்துகொண்டு இருக்கின்றான்.

இருமருங்கிலும் காடு, இருள் மெல்ல சூழத்தொடங்கிவிட்டது. சிறு சத்தம் கேட்டாலும் மனம் திக்கென அடித்துக்கொள்கிறது. "சாகிறது பிரச்சனை இல்லை சண்டையெல்லோ குழம்பிவிடும்" என மனம் குழம்பி விட்டது. "தட்டித்தவறி ஆமியின்ற ரெக்கிக்காறங்க வந்தால் என்ன செய்யிறது?" மனம் ஒத்திகை பார்க்க தொடங்கிவிட்டது. ரவுண்ஸ் அடிக்கிறதா? இல்லை குப்பிகடிக்கிறதா? அல்லது குண்டு அடிக்கிறதா? மனம் கட்டுக்கடங்காமல் கேள்விகள் கேட்கத்தொங்கிவிட்டது.

"இதென்னடா மனம் தான் போன போக்கில போகிறது." தன் மனதை தானே நொந்து கொள்கிறான். எனக்கு நல்ல பலனாம் சூரி டொக்ரர் கைரேகை பார்த்து பலன் சொன்னவர், எப்படி இருக்கு? சண்டைக்குப்போற நேரத்தில சாத்திர நினைவு! இந்த நேரம் பார்த்து நடுக்காட்டில் ஆந்தை ஒன்று அலறும் சத்தம் கேட்கிறது.

"இது என்னடா கஸ்ரகாலம், முந்தி படங்களில் சுடுகாடு போன்ற இடங்களைக் காட்டேக்க ஆந்தை கத்துற மியூசிக்தான் போட்டு பயத்தைக் கூட்டுவாங்கள். மனம் முன்பு பார்த்த படக்காட்சி ஒன்றை நினைவூட்ட சாடையாக பயம் தொற்றிக் கொள்கிறது. அப்பொழுது இராயவால் குருவி ஒன்று காட்டு வீதியை கடந்து அருகில் இருந்த மரக்கிளை ஒன்றில் வந்து அமர்கின்றது.தலையுடன் அலகும் கறுப்பாக இருக்கிறது. உடலும் இறக்கையும் மருண்கலர், வாலின் அடிப்பகுதியில் வெள்ளை பளிச்செனத் தெரிகிறது. வாலின் ஏனைய பகுதிகள் மருண்கலராகவே இருக்கிறது. வால்நுனி மீன்வால் போல் இரண்டாக பிளந்திருக்கிறது. பார்க்க அழகா இருக்கிறது. சாதாரண நேரமாக இருந்தால் இந்த குருவியை பார்க்கிறதற்கு என்று ஐந்து நிமிடமாவது செலவழித்திருப்பான். இப்பொழுது இதைப்படைத்த இயற்கைக்கு ஒரு சபாஸ் சொல்லி விட்டுப் போகத்தான் முடிகிறது. முன்னால் போகிறவர்களை எட்டிப்பிடிக்க வேண்டும் விரைவாக நடக்க முயல்கின்றான். முடியவில்லை எனவே கால்போன வேகத்திலேயே நடக்கிறான்.

வளியில் ரெக்கிக்காரர் சந்திக்கிறார்கள் "என்ன அண்ணா! தனியா வாறியள்? எட்டிப்போய் பிடியுங்கள் 250 மீ தூரத்திலதான் போகினம். இல்லாட்டி நாங்கள் தானே சாவறிக்கை எழுத வேண்டிவரும்" அவர்கள் கூற அவர்களுக்கும் புன்சிரிப்பொன்றை வழங்கிவிட்டு தனது வேகத்திலேயே நடக்கின்றான். இவ்வளவு நேரமும் காய்ந்த பாதையில் நடந்து
கொண்டிருந்தவனுக்கு இப்பொழுது வழியில் ஒரு சிறு கிடங்கு தென்படுகிறது. அதனுள் நீர் நிற்கிறது."ஒரு பாய்ச்சலில் கடந்துவிட வேண்டும். கால் புதைந்தால் நடக்கேக்க வழுக்கும்" என எண்ணியபடியே ஓடித் தாவிப் பாய்கின்றான். ஐந்து வயது குறைந்த மாதிரி இருக்கிறது "அடச்சனியன் ஒரு கால் சேத்தில் புதைஞ்சு போயிட்டுது?" காலை இழுத்து அருகில் இருந்த புல்லில் தேய்த்துப்போட்டு மீண்டும் நடக்கின்றான்.

தன்னை ஒருவரும் கவனிக்கவில்லை என்றவுடன் பாட்டுப் படிக்கத் தொடங்கி விட்டான். மற்ற ஆட்களுக்கு முன்னால பாடமாட்டான் ஏனெனில் எஸ். ஜி சாந்தனுக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிடும் என்பதால். சின்ன வயதில் இரவில் தனியாகப்போக பயம் தெரியாமல் இருப்பதற்காக பாடுவது அவனுக்கு ஞாபகத்திற்கு வருகின்றது.

அட என்ன அறுபதுக்கு மேற்பட்ட மாடுகள் வளியில் நிற்குதுகள். அடர்ந்த காட்டிற்குள் ஆட்கள் அற்ற கிராமங்களுக்குரியவை போலும் மனித நடமாட்டங்களை கண்டதால் என்னவோ அவைகள் கண்களில் மகிழ்ச்சி தெரிகிறது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. மாடுகள் ஏக்கத்துடன் பார்ப்பது போன்று தெரிகிறது. "எப்ப எங்களை வளர்த்தவங்கள் வருவினம்?" எனக் கேட்பது போல் இருக்கிறது. "விரைவில் வருவினம்" என அவற்றிக்கு தடவிக்கொடுத்து பதில் சொல்ல அருகில் செல்கிறான். அதில் ஒன்று ஒருமாதிரி தலையை ஆட்டியது. இவனுக்கு யோசனை பிடித்து விட்டது. சனப்பிழக்கம் இல்லாத இடத்தில் நின்ற மாடுகளுக்கு குழுப்பிடித்திருக்கும், இடிச்சுதெண்டா குடல் எடுத்துப்போட்டுத்தான் விடும்! "எவனோ எப்பவோ பயப்படுத்தியது ஞாபகத்திற்கு வர" "சும்மா கிடக்கும் சங்கை ஏன் ஊதிக்கெடுப்பான்" என எண்ணி விலத்தி நடக்கிறான். "ஒரு கிழமைக்கு முன் மூன்று மாடு சுட்டனான். பிறகு பார்த்தா அன்று வெள்ளிக்கிழமை, பெரிய கவலையாகப் போயிட்டுது. கொன்ற பாவம் திண்டால் போய்விடும் என மனோச்சண்ண சொன்னதை நம்பி அடுத்த நாள் மூன்று நேரமும் மாட்டிறச்சி சாப்பிட்டனான். அப்படி இருந்தும் திருப்தி வரவில்லை. அடுத்த நாள் ஐம்பது மாடுகளுக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளி வச்சனான்" நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்ததது. வெளியில எவ்வளவுதான் வீரம் கதைத்தாலும் உள்ளுக்குள்ள பாவ புண்ணியங்களுக்கு பயம் இருக்கத்தான் செய்கிறது.

காட்டில் இருந்து வயல் வெளியில் ஏறினான். மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பி நடக்க பெரிய குளம் அணைக்கட்டு தென்பட்டது. அதன் அருகில் நிற்கும் மரங்களின் வேர்களில் அமர்ந்து போராளிகள் இளைப்பாறுகின்றனர். இவனுக்கு அப்பாடா என்றிருந்தது. மீண்டும் அணியுடன் இணைந்தான். குளப்பக்கம் திரும்புகிறான். சூரியன் தன்னை முற்றாக மறைத்திருந்தாலும் இருள் காட்டினுள் இருந்ததிலும் பார்க்க குறைவாக இருக்கிறது. நீர்ப்பரப்பில் கொக்குகள் ஒற்றைக் காலில் நிற்பது தெளிவாக தெரிந்தது.

"கொக்கு ஏன் மச்சான் ஒற்றைக்காலில் நிற்குது?" "அது தானே இவ்வளவு நாளும் நான் யோசிக்கவில்லை ஏன் என்று சொல்லு" மற்றவன் கேட்க முதலாம் ஆள் சொல்லுகிறான் "மற்றக்காலையும் தூக்கினால் விழுந்திடும்," இரண்டாம் ஆளுக்கு அசடு வழிகின்றது. "உனக்கு பெரிய அறுவை யோக்கர் என்று நினைப்பு" "மச்சான் ஓடு மீன் ஓட உரு மீன் வரும்வரையும் காத்திருக்குமாம் கொக்கு" கொக்கு ஒன்று டாக்கென தன்னுடைய அலகை நீரினுள் செலுத்தி வெளியிலெடுக்க, அதில் அகப்பட்டு மீன் ஒன்று
துடிதுடிக்கிறது.

"இப்படித்தான் நாங்களும் எடிபல என்னும் பேரில் எங்களை வலிய போருக்கு இழுத்து அழிக்க எதிரி மேற்கொண்ட சதியில் மாட்டிக்கொள்ளாமல் விலத்திக்கொண்டவர்கள் இப்ப ஜெயசிக்குறு என வருகினம் சரியான நேரத்தில் நல்லா கொடுத்தால் உந்த மீன்களாக ஆட்லறிகளும் டாங்கிகளும் எங்களிட்ட அகப்படும்" மனம் எண்ணத்திலேயே புழகாங்கிகம் அடைகின்றது. ஒரு ஐந்து நிமிடம் ஆறிய பின்னர் மீண்டும் நடக்கத்தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் இருள் சூழ்ந்துவிட்டது. மாலை வேளைக்கே உரிய காலநிலை வேர்த்துக்களைத்து இருந்த உடலுக்கு இதமாக இருந்தது. மாலை ஏழு மணியளவில் குடியிருப்பு ஒன்றை அடைந்தார்கள். அங்கு சற்று தாமதிக்கவேண்டி இருக்கிறது. இவர்களுக்கு பின்னால் வந்துகொண்டிருக்கும் அணியும் இவர்களுடன் சேர்ந்த பின்தான் நகர்தலை தொடங்க வேண்டும். இப்பொழுது பொறுப்பாளர் எவரும் இவர்களுடன் இருக்கவில்லை. இவர்கள் வீதியின் ஒரு ஓரமாகவும்,
 பெண்போராளிகள் மறுபக்கமாகவும் அமர்ந்துள்ளார்கள். நெஞ்சோடு இருக்கும் கோல்சரும் பாரமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனைக் களற்றி வைக்க முடியாது, ஏனெனில் எதிரியால் ஆபத்துக்களைச் சந்திக்கலாம். அருகில் இருந்த வீட்டுக்கிணற்றில் நீர் எடுக்கக்கூடிய வசதி இருக்கிறது. எனவே கையோடு கொண்டுவந்திருந்த தண்ணீரை போதியளவு குடித்தார்கள். 

பசிக்களையினால் சிறு குடல் பெருங்குடலை உண்பதுபோல் இருக்கிறது. "அவசர தேவைக்கென கொண்டுவந்திருந்த பிஸ்கட்றை சாப்பிடுவோமா?" என யோசித்தார்கள். ஏனெனில் அதற்குப்பொறுப்பாளரின் அனுமதி வேண்டும், பொறுப்பாளர் நிச்சயம் அனுமதிக்கமாட்டார். இப்ப என்ன செய்யலாம் ………………………

-தொடரும்..........
-யுத்தகாண்டம்
-தூயவன் 
தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

No comments:

Post a Comment