Friday, 13 March 2026

கருவறைகள் -அ.மலரோன்

என்னைப் பற்றி முதலில் உங்களுக்குக் கொஞ்சம் அறிமுகஞ் செய்யிறன். 
நேற்று வடிவான ஒரு செடியில் புதுசா பூத்திருந்தன். இப்ப வாடிப் போன மலராய் என்ர வாழ்வு முடியிற நேரத்தில், என்ர கடந்த கால அனுபவங்களைப் பற்றியும் நான் பிறந்து வளந்த மண்ணைப் பற்றியும் உங்களுக்குக் கொஞ்சம் சொல்ல விரும்புறன். 

இந்த என்ர வாழ்க்கையோ கொஞ்சக் கால வாழ்க்கை. ஆனால் என்ர தாயாரான செடி, இந்த மண்ணில பிறந்து சில வருசங்கள் ஆகிவிட்டது. அவள் சொன்னதால தான் இந்த மண்ணின்ர பெருமையையும், எங்கட தமிழ்மொழியின்ர செழுமையையும் என்னால விளங்க முடிஞ்சுது.

முந்தநாள் நானொரு மொட்டாக இருக்கேக்க எங்கட தெருவால பெரிய இசை முழக்கத்தோடயும். மிடுக்கான அணிவகுப்போடயும் கொஞ்ச ஆக்கள், கையில ஆயுதங்களோட போய்க் கொண்டிருந்தினம் அவையளுக்குப் பின்னால பேழையொண்டை ஏந்திக்கொண்டு. ஒரு வாகனமும் போய்க் கொண்டிருந்திச்சுது. அந்த வாகனத்தைச் சுத்திப் பெரிய சனக்கூட்டமும் போய்க் கொண்டிருந்திச்சது.  அதுல போன எல்லாச் சனத்திரை முகத்திலயும் சோகம் அப்பிக் கிடந்திச்சுது.  இந்த நிகழ்வின்ர அர்த்தம் எனக்கு விளங்காத்தால என்ர அம்மாட்ட விசாரிச்சன். அவளும் சோகமாக விக்கித்துக் கொண்டே "இந்த மண்ணின்ர விடுதலைக்காகவும் எங்கட சுதந்திரத்துக்காகவும் போர்க்களத்தில வீரத்தோட போராடி வீரச்சாவடைஞ்ச ஒரு வீரரை புகழுடம்பு மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அவனுக்குள்ள மரியாதையோட எடுத்துச் செல்லப்படுது'" எண்டு சொன்னாள்.

"யாரிட்ட இருந்தம்மா இந்த மண்ணை விடுவிக்க வேணும்? ஆரமமா எங்கட மக்களின்ர சுதந்திரத்தைப் பறிச்சது?'' என்ர சந்தேகங்களை அடுக்காக அமமாட்டக் கேட்டன். அதுக்கு அவள் "இந்த மண் ஆதியில இருந்தே தமிழர் வாழுற பொலிவான மண். பல தமிழ் அரசன்மார் இதை நல்லா ஆண்டதோட தாய்மொழியான தமிழையும் பாதுகாத்து வளத்தாங்கள். பிறகு போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எண்ட வெளிநாட்டுக்காரங்கள் தொடர்ச்சியா இந்த நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டாங்கள். கடைசியில ஆங்கிலேயர் இங்க இருந்து போகேக்க ஆட்சிப் பொறுப்பை பக்கத்து நாட்டைச் சேர்ந்த சிங்களவரிட்ட குடுத்தாங்கள்.

வெள்ளைக்காரங்கள் வர முதல் பக்கத்து நாட்டை ஆண்ட சிங்களவர் அவர்கள் போன பிறகு இந்த நாட்டையும் அதோட எங்கட தாய்மொழியான தமிழையும் சிதைச்சு சிங்களத்தை இங்கே புகுத்தத் தொடங்கினார்கள். 

இந்த அடாவடித்தனங்களைப் பொறுக்க ஏலாமல் எங்கட சனத்தின்ர இளைய தலைமுறை இருபது வருசங்களாக ஆயுதப்போரை நடத்தி வருகுது. அப்பிடியான ஒரு சண்டையில வீரச் சாவடைஞ்ச வீரனொருவன்ர உடம்புதான் இப்ப கொண்டு போகப்படுது' எண்டு ஒரு கதையையே எனக்குச் சொன்னாள்.

என்ர அம்மாக்கு எப்பிடிப் பழைய வரலாறெல்லாம் தெரியுமெண்டு உங்களுக்குச் சந்தேகம் வருகுதா? எனக்கும் அப்பிடிச் சந்தேகம் வந்தது. அதை அம்மாட்டக் கேட்டபோது, தன்னைத் தாங்கி நிக்கிற மண்மாதா தனக்குச் சொன்னதாகச் சொன்னாள்.

அம்மா சொன்ன அந்த நேரத்தில இருந்து எனக்கும் சிங்கள அடாவடிக்கு எதிராகப் போராட வேணுமெண்ட ஆசை ஏற்பட்டுது. நான் இப்பிடிச் சொல்லிறதால உங்களுக்குச் சிரிப்பு வரலாம். நானும் இந்த மண்ணில தானே பிறந்தன். எனக்கும் போராடுற ஆசை வருந்தானே. ஆனால் நான் என்ன செய்வன். எனக்கு உங்களைப் போல கையும் காலும் இல்லை. எப்பிடி நான் போர்க்களம் போய்ப்போர் செய்ய ஏலும்? 

என்ர உணர்வுகளை அழுகையோட அம்மாட்டச்சொன்னன். அதுக்கு அவள் "மகனே ! உன்னால போர் செய்ய ஏலாது எண்டுறது உண்மைதான். ஆனால் எங்கட குலத்தவரான எத்தனையோ மலர்கள் களத்தில வீரச்சாவடைஞ்ச மாவீரருக்குக் காணிக்கையாகி அவையளின்ர கல்லறையளுக்கு அஞ்சலி செய்யினம். 

எனக்கெண்டா அந்தப் பாக்கியங் கூடக் கிடைக்கேல்ல. எண்டாலும் உன்ர சகோதரங்களான என்ர பிள்ளையள் பலரை அஞ்சலிக்கு நான் அனுப்பி விட்டன். அதால பெருமையும் திருப்தியும் அடையிறன்" எண்டு சொன்னாள் .

எனக்கும் கெதியில 'மலராகி' மாவீரர் கல்லறைக்கு அஞ்சலிக்காய்ச் செல்ல வேணும்' எண்ட துடிப்பு ஏற்பட்டுது. அம்மாட்ட அதுக்கு அனுமதி கேட்டன். அதுக்கு அவள் "நாளைக்குக் காலையில வழமை போல மாவீரர் துயிலும் இல்லத்தில இருந்து இங்க யாராவது வருவினம்.

அவையள் அஞ்சலிக்கெண்டு மலர்களைக் கொய்து கொண்டு போவினம். அந்த நேரம் நீயும் புது மலராய் பூத்திருப்பாய். உன்னையும் அவையள் கொண்டு போவினம். இங்க இருந்து வீணாக் கருகி நிலத்துல விழுறதைக் காட்டிலும் இந்தத் தேசத்தின்ர விடுதலைக்காய் தன்னுயிரையே விட்ட மாவீரன் ஒருவன்ர காலடியில சேருகிறதே மேல்" எண்டு உணர்ச்சியோட சொன்னாள்.

நேற்றுக் காலையில் புதுசாப் பூத்த பொலிவோட, கல்லறை செல்லுற கனவையும் சுமந்த காரணத்தால' இரட்டிப்புப் பொலிவோட காணப்பட்டன். அந்த நேரம் என்ர சகோதரங்களும் புதுசாப் பூத்திருத்திச்சினம். அவையள் என்னோட சேர்ந்து தாங்களும் வருவமெண்டு சொல்லிக் கொண்டிருந்திச்சினம். முந்தநாள் எனக்கு அம்மா சொன்ன எல்லாத் தையும் அவைகளும் கேட்டுக் கொண்டு தான் இருந்தவை .

கொஞ்ச நேரத்தால கூடையோட வந்த ஒருவர் என்னையும் என்ர சகோதரங்களையும் கொய்து தன்ர கூடையில போட்டார். நாங்களும் அம்மாட்டச் சொல்லிப் போட்டுச் சந்தோஷத்தோட போனோம். எங்களைக் கொண்டு போன அந்த மனிதர் தண்ணியில நல்லாக் குளிப் பாட்டினார். பிறகு எங்களை ஒவ்வொருவராக மாவீரரின் காலடி களில் இருத்தினார்.

நான் உணர்ச்சி பொங்க ஒரு மாவீரர் கல்லறையில் அஞ்சலி செய்து கொண்டிருந்த நேரம், அந்தக் கல்லறைக்கப் பக்கத்தில சில பேர் வந்து கொஞ்ச நேரம் தலையைக் குனிஞ்சு மௌனமாய் நிண்டினம்.

 பிறகு அவை எல்லாரும் ஒருமித்த குரலில் "உங்கள கனவை நாங்கள் நனவாக்குவோம். இறுதி மூச்சு வரைக்கும் உங்களின் பணியைத் தொடருவோம்,  இண்டைக்கே அதுக்காய் ஆயுதம் ஏந்துவோம்" எண்டு விட்டுப் போச்சினம். அந்தக் கணம் எனக்கு ஒரு உண்மை விளங்கிச்சுது.

நாங்கள் அஞ்சலிசெய்து கொண்டிருக்கிறது கல்லறைகளுக்கில்லை கருவறைகளுக்கு. ஏனெண்டா அதுகள் புதுசு புதுசா போராளிகளை உருவாக்குது- உடனே ஓடிப்போய்ச் அம்மாட்ட சொல்ல வேணும் போல இருந்திச்சுது. ஆனால் என்ர கடமையை முடிக்க வேண்டியிருந்ததால நிண்டிட்டன்.

எங்களை இங்க கூட்டி வந்த மனிதர் இண்டைக்குக் காலையில் வாடிக்கிடந்த எங்களை எடுத்துப் போட்டு எங்களைப் போல புதிய மலர்களை அஞ்சலிக்கு இருத்தினார்.

என்ர தாய்நாட்டுக்கு என்னால முடிஞ்ச கடமையைச் செய்து முடிச்சதால இப்ப நான் நிறைவா இருக்கிறன். உங்கட தாய் நாட்டுக்கு உங்களால் முடிஞ்ச கடமையைச் செய்து போட்டீங்களா? நீங்களும் என்னைப் போல நிறைவா இருக்கிறீங்களா?

என்ர கடைசி ஆசையை உங்களிட்டச் சொல்லுறன். என்ர தாயிட்ட 'உங்கட பிள்ளையள் கல்லறையளுக்கில்லை? கருவறையளுக்குத்தான் அஞ்சலி செய்யினம்" எண்டு சொல்லுங்கோ !

💐🌷🌹🌺🌸🌻💐🌷🌹🌺🌸🌻💐🌷🌹

-கருவறைகள்

-அ.மலரோன்

-வெளிச்சம், சித்திரை 1993.

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

No comments:

Post a Comment