இரண்டு இளனிகளை எடுக்கின்றான். தடி ஒன்றினால் ஓட்டை போட்டு குடிக்கிறான். வேறு சிலரும் அவ்வாறு செய்கின்றார்கள். விடிய வெள்ளன ஆறு மணிக்கு இளனி குடிப்பது தன் வாழ்நாளில் இதுதான் முதன் முறையாக இருக்குமென எண்ணி நிற்கின்றான். போராளிகளுக்கு உடனே தயாரிக்கக் கூடியதாக அவலும் பால்மாக்களும் மதியத்திற்கும் இரவுக்குமாக உணவுப் பார்சல்கள் வழங்கப்படுகின்றன.………👇 8
ஆனால் பிறம்பாக சீனி வழங்கப்படவில்லை. காலையில் ரீ குடிக்காவிட்டால் ஒரு மாதிரியாக இருக்கும் ஒருவன் கூற மற்றவர்களும் ஆமோதிக்கின்றார்கள். சந்திரன் சொல்கின்றான். அவல் பக்கற்றின் ஒரு மூலையில் சீனி புறம்பாக இருக்கும். அதனைப்பிரித்து எடுத்தால் ரீ போடலாம் உடனே அவ்வாறு செயற்படுகின்றார்கள்.
அவ் வீட்டில் இருந்த பானை ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்தார்கள். அருகில் இருந்த அரிக்கன் லாம்பை எடுத்து, சரிக்க அதிலிருந்து சிறிதளவு மண்ணெண்ணெய் வந்தது. அதனைக்கொண்டு அடுப்பு மூட்டுகின்றார்கள். இவர்கள் ரீ போட்டுக்குடிக்க. மற்ற குறூப்காரர் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர்கள் பால்மாக்களை கையில் கொட்டி சாப்பிட்டவண்ணம் இருந்தார்கள். நீங்களும் இப்படி செய்திருக்கலாம் தானே! அரிய கண்டுபிடிப்பு ஒன்றை விளங்கப்படுத்தும் குட்டி பெருமை ஒன்று இவனின்
குரலில் தென்படுகிறது.
ரைபிள்கள் துப்பரவு செய்து கொண்டிருக்கின்றான். பொறுப்பாளர் சொல்கிறார் எல்லோரும் மாறி மாறி நித்திரை கொள்ளவேண்டும். 11 மணியளவில் மீண்டும் நடக்க தொடங்க வேண்டும். மீண்டும் நடப்பதை யோசிக்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது. அதனால் அதனை பற்றி அதிகம் யோசிக்காமல் படுக்கப்போகின்றார்கள். ஆனால் நித்திரை வரமாட்டேன் என்கிறது. என்ன செய்யலாம் அவன் யோசித்துக்கொண்டிருக்க கிணத்தடியில கயிறோட வாளிகிடக்குது. குளிக்கலாம் ஒருவன் சொல்வது கேட்க இவனும் கிணற்றடிக்குப் போகிறான்.
வேர்வையில் தோய்ந்து காய்ந்து வெள்ளைக் கோடுகள் படிந்திருந்தது. ஜீன்சையும் சேட்டையும் தோய்த்துப் போடுகின்றான். முதல் வாளி நீர் உடலில் பட பரமசுகமாக இருக்கிறது. முந்தி வீட்டில குளிக்கிறது....... என்றால் படுகள்ளம். அப்பா குளிக்கக் கூப்பிட்டால் வீட்டைச்சுத்தி ஓடுறனான். அருகில் நின்ற போராளி கூற ஏன் இப்பமட்டும் பேசில ஒழுங்காக் குளிக்கிறியோ? உனக்கு தண்ணியெண்டால் அலேர்ஜி தான். இன்னொருவன் கூற முதலாமன் ஒரு வாளி தண்ணியை அள்ளி அவனை நோக்கி எத்துகின்றான். அவர்கள் அப்பிரதேசம் ஆபத்தானது என்பதையும் மறந்து கலகலப்பாகின்றார்கள். சந்திரன் அவல் குழைத்துக்கொண்டிருந்தான். டேய் கூழானாலும் குளித்துக்குடி இது கூழ் அல்ல அவல் என அவர்கள் சம்பாசனை தொடர்கின்றது.
குளித்து முடித்துவிட்டு இவன் வீட்டினுள் வரும்போது ஒரு சீப்புக்கும் கண்ணாடிக்கும் பலர் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஒருத்தரும் தலை இழுத்த பாடும் இல்லை முகம் பார்த்தபாடும் இல்லை பொறுப்பாளர் வந்து ஒவ்வொருத்தராய்ப் பாருங்கள் எனக்கூறிய பின்னர்தான் ஒழுங்கிற்கு வந்தார்கள். இரவு சண்டையில் எத்தனை பேருக்கு முகம் கிழியுதோ தெரியவில்லை வடிவாகப் பாருங்கோ?
டேய் அபசகுணமாய் கதைக்காத சாகலாம் பிரச்சனை இல்லை ஆனால் முகம் வடிவாக இருக்கவேணும். நான் பதினாறு வயதில் இருக்கேக்க ஒரு நாளுக்கு எத்தனை மணித்தியாலம் கண்ணாடிக்கு முன்னால செலவழிக்கிறனான் உனக்கு தெரியுமா? அது கிடக்கட்டும் இப்ப உயரத்தைச் சொல்லு எத்தனை அடி? ஏன்? பெட்டிக்கு அளவு கொடுக்கத்தான். டேய் நல்லதாய்க் கதையுங்கோ. அவர்கள் ஏதாவது கதைத்து சிரித்த வண்ணம் தான் இருப்பார்கள்.
கண்ணாடியில் முகத்தை பார்த்த வண்ணம் கண்ணன் தன்னுள் யோசிக்கின்றான். "சே" இந்த பள்ளங்களை உருவாக்கி ஒவ்வொரு முகப்பருவும் எவ்வளவு கவலையை கொடுத்திருக்கும் மனச்சாட்சி இல்லாத பருக்கள். பருக்களை திட்டிய வண்ணம் கன்னத்தை ஒரு தரம் தடவிப்பார்க்கின்றான். சவரம் செய்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது.
இப்படித்தான் 1992ல் புல்லாவெளியில் நடந்த சண்டையில் இரண்டு ஆமிக்காறங்கள் பிடிபட்டவங்கள். இப்ப இருந்த விசேட தளபதி இரவு அவங்கட முகத்தையும் எங்கட முகத்தையும் ரோச் அடித்துப்பார்த்துவிட்டு சொன்னவர் இவங்கட முகத்தையும் உங்கட முகத்தையும் பாருங்கோ எவ்வளவு கிளீனாக இருக்கிறாங்கள். நாளைக்கு முதல் வேலையாக எல்லாரும் சேவ் எடுங்கோ! இராணுவத்திற்கு தோற்ற ஒழுக்கமும் மிகவும் முக்கியமானது என்று கூறினார். இவர்தான் இப்ப அரசியல்துறைப் பொறுப்பாளர். அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் களமுனைக்கு வந்து
சந்தித்து வாழ்த்தி அனுப்பினவர். அப்பொழுது சொன்னவர் உங்களுக்கு சொல்லக்கூடியது எவ்வளவுக்கெவ்வளவு உயிரிழப்பைத் தவிர்க்க ஏலுமோ அவ்வளவுக்கவ்வளவு வெற்றிச் சூழ் நிலைகளுக்கு ஏற்றபடி முடிவெடுங்கள். இந்த முறை மருத்துவக்குழுவில் ஜெனரல்களையும் அனுப்புறன். களமருத்துவர்களை என சற்று மேலதிகமாக புகழ்ந்து உற்சாகமூட்ட முயற்சித்தார். எது எப்படியோ உயிரிழப்பை தடுக்கக்கூடிய வசதிகளுடன் தான் மருத்துவ அணி நகர்கிறது என்பது போராளிகளுக்கு உற்சாகம் கொடுக்கும் விடயம் என்பதை முற்று முழுதாக நம்பினார்கள். ஆதலால் இயன்றளவு வடிவாகச் செயற்பட வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டார்கள்.
"என்ன கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு கனக்க யோசிக்கிறியா?" கூறியபடியே அவன் கண்ணாடியை வேண்ட, இவன் இவ்வுலகத்திற்கு வந்தான்.
ஏனோ அவன் தன் எண்ணங்களை விரட்ட முயற்சிக்கின்றான். மனதை உருக்கும் சோகங்களை மற்றவர்களிற்கும் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் ஒவ்வொரு போராளியின் மனமும் ஆழமான சமுத்திரம் அதன் அடியில் பல சோகங்கள் மண்டிக்கிடக்கும் ஆனால் வெளிப்பார்வையில் சில வேளைகளில் நந்தவனமாகவும் குளிரோடையாகவும் காட்சியளிப்பார்கள். பழகுவார்கள் அவர்களின் உணர்வுகளை புரிந்தவர்களால் மட்டுந்தான் இவர்களை தெரிந்து கொள்ளமுடியும்.
தன் எண்ணங்களிற்கு விலங்கிடமுனைந்து தோற்றதால் எழுந்து வீட்டினுள் செல்கின்றான். ஒவ்வொரு அறையாக ஆராய்கின்றான். ஒரு அறையினுள் வெற்றிக்கிண்ணங்களும் கேடயங்களும் தாறுமாறாகக் கிடக்கின்றன
எல்லோர் முன்னிலையிலும் அதிலொன்றை எடுத்துப்பார்க்கின்றான். கரப்பந்தாட்டம் ஒன்றில் வெற்றி பெற்றமைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம் இவை "சோக்கே சில்" வைத்து அழகு பார்த்து பெருமைப்படவேண்டியவை ஆனால் இப்பொழுது புழுதிபடிந்து கிடக்கின்றன. இதனை பெறுவதற்காக உரியவன் எவ்வளவு பயிற்சி பெற்றிருப்பான். வெற்றிக்கேடயங்களை வாங்கும் போது எவ்வளவு பெருமைப்பட்டிருப்பான். இப்பொழுது இவன் எங்கிருப்பான்? சில வேளை இயக்கத்தில் சேர்ந்திருப்பானா? காலத்தின் கையிலிருந்து தமிழீழத்தின் வெற்றிக் கேடயத்தைப் பெற முயற்சித்து கொண்டிருப்பானா? அல்லது அகதியாக எங்காவது அலைந்து திரிந்து கொண்டிருப்பானா, மனம் பலவாறு எண்ணமிட்டது. அப்பொழுது ஒருவன் வந்து வெற்றிக்கிண்ணத்தை வாங்கினான். "நல்ல சாமான் ரீ குடிக்க கப் இல்லையென்று தேடித்திரிஞ்சனான்." எனக்கூறியபடியே வெளியில் சென்றான்.
இவன் கொண்டு அடுத்த அறையினுள் சென்று பார்க்கின்றான். போகமுடியாது விடப்பட்ட மிகுதி நெல்மூட்டைகள் தாறு மாறாக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்று அவிழ்ந்து தரையினுள் சிந்திவிட்டிருந்தது. அவை முளைத்து நாலு அங்குலம் வளர்ந்து இருந்தது. வயலில் விளைய வேண்டியவை வீட்டினுள் முளைத்து நிற்கின்றன. இன்னும் சில நாட்களில் அவை இறந்து விடும். என்ன செய்வது காலம் உங்களை சிறையில் இட்டுவிட்டது. உங்கள் உரிமையாளர் உங்களிற்காக கஸ்ரப்பட்டிருப்பார். உரவகை மண்ணெண்ணெய் எவ்வளவு இல்லாமல் உள்ளூர்வளங்களைப் பயன்படுத்தி உங்களை விளைவித்திருப்பார்கள் இவன் இவைகளிற்காக பரிதாபப்படுகின்றானா? அல்லது வீட்டுக்காரருக்காக
பரிதாபப்படுகின்றானா? அவனுக்கு விளங்கவில்லை இப்போது விளங்கியது ஏன் இங்குள்ள அறைகள் அகலமாகவும் உயரமாகவும் கட்டப்பட்டுள்ளது என்று நெல் மூட்டைகள் களஞ்சியப்படுத்துவதற்குதான். அப்பொழுது வெளிவிறாந்தையில் பலர் சேர்ந்து கொல் என சிரிக்கும் சத்தம் கேட்டது. வெளியில் சென்று எட்டிப்பார்க்கின்றான். விசயம் விளங்கியது.
போராளி தான் கொண்டுபோன வெற்றிக்கிண்ணத்தினுள் தேனீரை குடித்து விட்டு மிகுதியை படுத்திருந்த குமணனுக்கு பக்கத்தில் வைத்துவிட்டான். அதனை படுத்திருந்தபடியே எடுத்துப்பார்த்த குமணன் அதற்குள் தேனீர் இருப்பதை அறியாமல் கவிட்டுப்பார்க்க அது முகத்தில் சிந்தி அங்கிருந்தவர்களிற்கு "எங்கடயாக்களிற்கு சிரிப்பு வந்துவிட்டது. எங்கபோனாலும் விளையாட்டுத்தான்!" ஒருவன் பொறுப்புள்ளவனாக கதைப்பது கேட்கின்றது. அவன் வீட்டின் முகட்டைடை அண்ணார்ந்து பார்க்கின்றான். சிறிய மின்குமிழ் பல்புகள் மாதிரி பல உருண்டைகள் தீராந்தி மரங்களில் தொங்குகின்றன. வடிவாக உற்றுப்பார்த்து தெரிந்து கொண்டான். அவை சிறிய வௌவ்வால் இன்னும் சில நாட்கள் சென்றால் போதும் இவ்வீடு வௌவ்வால்களினதும் ஆந்தைகளினதும் வசிப்பிடம் ஆகிவிடும்.
அப்பொழுது சந்திரன் வந்து "அண்ணை ! சாப்பிடவாங்கோ" எனக்கூப்பிட எல்லோரும் அவனிடம் செல்கின்றார்கள், பெரிய பானையில் சோறும் தாச்சி ஒன்றில் ரின் மீன் கறியும் வைத்திருக்கின்றார்கள். எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டுக் குழைத்தார்கள். சந்திரன் கவழம் கவழமாக கையில் கொடுக்க எல்லோரும் ருசித்து சாப்பிட்டார்கள். பல போராளிகள் ஒருவருக்கு ஒருவர் இன்றுதான் அறிமுகம் ஆனார்கள். ஆனால் அவர்களிடையே அன்னியத்தன்மை எதுவும் தெரியவில்லை. ஏதோ ஒருவகையில் நெருக்கமான உறவை வெளிப்படுத்தினார்கள். ஆம் சாவயல்களில் சாதனைப்பயிர் வளர்ப்பவர்களிடையே இயல்பாகவே இருக்கின்றது. பல இடங்களில் சொந்தச் சகோதரங்களிடையே இவ்வளவு நெருக்கம் இருந்ததில்லையே! தங்கள் ஊரில் உறவினர்களிற்கிடையே காணிக்காரர்களினால் சண்டை வந்ததும் வருடக்கணக்காக கோடு கச்சேரி என ஏறி இறங்கியதும் பின் எல்லோரும் எதிரியிடம் நிலங்களை பறிகொடுத்து இடம்பெயர்ந்ததும் ஞாபகம் வந்தது. "இதென்ன தேவையில்லாத ஆராய்சி சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவோம்" என தன் மனதை சாப்பாட்டினுள் செலுத்தினான்.
சாப்பிட்டு எல்லோரும் சிறு சிறு குழுக்களாக பிரிந்து அலட்டத்தொடங்கினார்கள். சிலர் தென்னோலைகளை எடுத்துப்போட்டு உறங்கத்தொடங்கினார்கள். "மச்சான் உண்ட பின் நூறடி உலாவுதல் நன்று பழமொழி சொல்லுது புதுமொழி சொல்வது தெரியுமா?" "சொல் பார்ப்பம" "உண்ட உடன் உறங்குதல் நல்லது."
"மச்சான் நீ எந்த இடம்?" "தீவு", "தீவா!" ஏன் தீவு என்றவுடன் ஒருமாதிரி இழுக்கிறாய்? "உனக்கு தீவானுக்கு புகையிலை வித்த கதை தெரியுமா?' "என்ன கதை?" கதையைச்சொல் எல்லோரும் வாய்விட்டு சிரித்தார்கள். "மச்சான் உனக்கு வாகனம் ஓட்டத்தெரியுமா? எவ்வளவு தெரியும்?" "ஏன்?" "இல்ல போனமுறை றைவர்கள் இல்லாததால கனக்க வாகனங்கள் கிடைச்சும் விடவேண்டியதாச்சு இந்த முறை அப்படி விடக்கூடாது. சந்தர்ப்பம் கிடைத்தால் றைபிள் எடுக்காட்டியும் பரவாயில்லை வாகனம் எடுத்துக்கொண்டு வந்திட வேணும். காயக்காறரை ஏற்ற உதவும்" "அது சரி சாவி இல்லாவிட்டால் என்ன செய்வது?" சின்னப்பிரச்சனை லொக்கை உடைத்துப்போட்டு வயரை முட்ட ஸ்ராட்வரும். அவர்கள் மிகவும் ஆபத்தான பிரதேசத்தில் இருப்பதையும் மறந்து இன்றிரவுடன் சிலர் இல்லாமல் போய்விடுவார்கள் என்பதனையும் மறந்து ஏதாவது ஒன்றைப்பற்றிக் கதைக்கின்றார்கள். அப்பொழுது ஒருவன் வந்து சொல்கின்றான் "அண்ணே! சத்தியப்பிரமாணம் தொடங்கப்போகுது எல்லோரையும் வரட்டாம்."
இவர்கள் வீட்டு முற்றம் தாண்டி வீதிக்கு வருகின்றார்கள். கண்கொள்ளாக் காட்சிதனைக் காண்கின்றார்கள். ஆம் போர்முகத்தேறிப் புயலென வீசப்போகும் பல நூறு ஆயுதம் தரித்த போராளிகள் மைதானம் நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றார்கள். வரிப்புலிச் சீருடையணியினது கறுப்புநிற இராணுவப் பாதணிகள் மினுமினுக்க, நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாகச் செல்கின்றார்கள். இடையில் கட்டப்பட்டிருக்கும் இராணுவப்பட்டியே அவர்களில் ஆண், பெண் போராளிகளை வேறுபடுத்துகின்றது. நெஞ்சுக்கோல்சர், அதில் உயிர் குடிக்க ஆவலாய் தொங்கிக்கொண்டிருக்கும் கைக்குண்டுகள், கரங்கள் இறுகப்பற்றியிருக்கும் சிறுரக, கனரக ஆயுதங்கள;. காயமடைந்தவர்களை காவுகின்ற ஸ்ரெச்சர்கள், களமுனை வினியோகத்திற்கென கொண்டு செல்லப்படும் மேலதிக ரவைப்பெட்டிகள், முதுகில் காணப்படும் தொலைத் தொடர்புக்கருவிகள் என ஒரு சிறு படையணித்தளமே நகர்ந்த வண்ணம் உள்ளது. இடம் நொச்சிக்குளம் வித்தியாலயம் முன்பாக.
அணியணியாக புலிவீரர் அணிவகுத்துள்ளனர். முன்நிற்கும் அணித்தலைவர்களைத் தொடர்ந்து போராளிகள் நிரைகளாக நின்றார்கள். எண்ணும்பொழுது ஆயிரம் தாண்டும். பார்க்கப், பார்க்க உள்ளம் பூரிக்கிறது.
-தொடரும் .........
-யுத்தகாண்டம்
-தூயவன்
No comments:
Post a Comment