Friday, 13 March 2026

ஓயாத புலி ஒன்று 2 ம் லெப் விழி

ஓயாத புலி ஒன்று
~~~~~~~~~~~~~~~~~~
"இன்றைக்கு என்னை அக்கா வரச்சொன்னவ. எனக்கு தந்த வேலையை முடிக்காமல் எப்படி அவவுக்கு முன்னால போறது இன்றைக்கு எப்படியும் இந்த வேலையை முடிச்சிட்டுத்தான் அவவின்ர முகத்தில முழிக்கிறது"

இப்படிச் சொன்ன, சொன்னதைச் செய்து காட்டிக்கொண்டிருந்த விழிதான். அந்த வேலை நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இன்று நிரந்தரமாக விழி மூடிக்கிடக்கிறார். விழி சாவடைந்து விட்டார் என்பதைக் கேட்ட நவபுரம் கிராமத்தில்தான் எத்தனை சோகம் தம்முடைய உடன் பிறந்தவளையே இழந்ததுபோல் கதறித் துடித்தனர். எல்லோரும்.

 "நீ இரவு கூட நித்திரை கொள்ளவில்லையே" என்று தலையில் அடித்துப் புலம்பி அழுதார் ஒரு தாய்.

உண்மைதான். விழியிடம் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டால் அவர் தன் பசி, தாகம் உறக்கம் அனைத்தையும் மறந்து பம்பரமாக வேலை செய்வார். தன்னுடைய வேலையில் அதீத கவனமும், விசுவாசமும் உடையவர்.

இவர் எமது அமைப்பின் முழு நேர உறுப்பினராக இணைந்து கொள்வதற்காக எனது பாசறைக்கு வந்த அன்றைய பொழுதை நினைத்துப் பார்க்கிறேன். புதிய உறுப்பினராக வந்தவர் என்றதும், இவரிடம் எமது போராளிகள் படுகின்ற துன்ப துயரங்களை சிரமங்களை விளக்கினேன். பந்த பாசங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறினேன். காயமுறும் வேளையில் மருத்துவ வசதியில்லாமலே பலமணி நேரம் இருக்க வேண்டி வரும் என்றபோதும் மெல்லிய புன்னகை உதட்டிலே ஓடக் கேட்டுக்கொண்டிருந்தவர், “இவற்றை ஆழமாக யோசித்துத்தான் நீர் இயக்கத்தில் இணைய வேண்டும்” என்று நான் முடிப்பதற்கு இடையில், “என்னால் முடியும்” என அழுத்தமான
குரலில் இடைவெட்டினார்.

அவருடைய பெயர், விபரங்களை எடுக்கும்போது 'நான்.... நிமலேஸ்" என்றார். அந்தத் தொனி எதனையோ தொக்கி நிற்க, ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தேன். "ஏழாலை நிமலேஸ்வரியா நீர்" எனது ஐயம் கேள்வியாகின்றது.

1984-1985ம் ஆண்டு காலப்பகுதியிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் சுதந்திரப் பறவைகள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொறுப்பாளராக இருந்தவர். காலப்போக்கில் இவரின் விடாமுயற்சியினால் அந்நிலைய அங்கத்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாகியது. விமானக் குண்டு வீச்சுக்களும், எறிகணை வீச்சுக்களுக்கும் இடையில் புகுந்து சென்று காவலரணில் எமது போராளிகளின் காயங்களுக்கு முதலுதவிச் சிகிச்சையளிப்பவர். எந்த நேரத்திலும், எந்தக் கட்டத்திலும் எமது போராளிகளுக்கு உணவு கிடைக்கவேண்டும் என்பதில் அக்கறையாகச் செயற்பட்டவர்.

இறுதியில் 1987இல் இராணுவப் பயிற்சி பெறுவதற்காகப் பாசறை வந்தவர். அவ்வேளையில் புதிதாகப் பயிற்சிக்கென வந்த எழுபத்தைந்து பேருக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அக்காலகட்டத்திலும், தனது பாசறையில் இருந்து போராளிகளின் நிலைக்கு உணவுசமைத்துக் கொடுப்பார்.

1987ல் தமிழீழப் பகுதியில் இந்திய ஆக்கிரமிப்பின் போது பயிற்சி பெறமுடியாத சூழ்நிலையில் வீடு திரும்பியவர். தனது உயிராபத்தையும் பொருட்படுத்தாது. தலைமறைவாக இருந்து கரந்தடி யுத்தத்தை நிகழ்த்திய எமது போராளிகளுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தார். இன்று இவர் மீண்டும் பயிற்சிக்கென பாசறை தேடி வந்துள்ளார்.

இவரின் உற்சாகமான வேலைத்திறன் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்ததும் இன்று தான் நேரில் பார்க்கிறேன். 'விழி' என்ற பெயர் வைக்கப்பட்டதும் 'நல்ல தமிழ்ப் பெயர்' என்றுகூறி, அன்று முழுவதுமே தனக்குள் அந்தப் பெயரை அடிக்கடி சொல்லிப் பார்த்தார். எங்கள் எல்லோருக்குமே இது சிரிப்பாக இருந்தது. ஏனோ அந்தப் பெயர் அவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று.

கைதடியில் முன்னர் 'எருதிடல்' என்றும் பின்னர் 'நவபுரம்' என்றும் பெயர்மாற்றம் பெற்ற ஒரு கிராமம். இக்கிராமத்தின் பெயர்தான் மாறியதே தவிர, இங்கிருந்த மக்களின் வாழ்க்கை நிலை மாறவில்லை. இங்கு தான் இவர் கிராமவேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டார்.

நடக்கவே முடியாமல் கற்பாறையாக இருந்த அந்தக்கிராமத்து வீதியை செப்பனிட்டு, தார் ஊற்றிச் சிறந்த போக்குவரத்துப் பாதையாக்கினார். ஆரம்ப சுகாதார நிலையம். தையற் பயிற்சி நிலையம், பாலர் பாடசாலை என்பவற்றை உருவாக்கினார். முதலுதவிப் பயிற்சி நெறியை நடத்தி முடித்தார். பன்னவேலைப் பயிற்சி வகுப்பை ஆரம்பித்து வைத்தார். மாதர் சங்கத்தினை ஒழுங்கமைத்தார். சில நோய்கள் ஏற்படும்போது மூட நம்பிக்கைக்கு ஆட்படாமல் எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக, சுகாதார அதிகாரிகளின் துணையுடன் பல கருத்தரங்குகளை நடத்தினார். கோழிப் பண்ணைக்கு அத்திவாரமிட்டார். சிறுவர் பூங்கா, சிறுவர் நூலகம் என்பவற்றை அமைத்துக்கொண்டிருக்கும் வேலையின்போது தான் வாகன விபத்தில் சாவினைத் தழுவிக்கொண்டார்.

இதனைவிடப் பல புதிய வேலைத்திட்டங்களை உருவாக்கி இம்மக்களுக்கு வேலை வாய்ப்புக்
கொடுக்க வேண்டும், விளையாட்டுக் கழகமொன்றை நல்ல நிலையில் உருவாக்கித் தேசிய மட்டத்தில் விளையாடக் கூடிய தகுதிக்கு இம்மக்களை வளர்க்க வேண்டும், கல்வி வளர்ச்சிக்கழகம், முதியோர் கல்வி நிலையம் - இதை உருவாக்கி எல்லோருமே கல்வியைப்பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற வெறியோடு செயற்பட்டவர் இன்று எம்மோடு இல்லை.

மொத்தத்தில் விழி அக்கிராம மக்களோடு இரண்டறக் கலந்திருந்தார். நவபுரம் என்ற பெயருடன் உள்ள இக்கிராமம் ‘மாலதிபுரம்' என்ற எழுச்சிக் கிராமமாகப் பரிணமிக்க வேண்டும் என்றும், இங்குள்ள மக்கள் ஏனைய மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்றும் கனவு கண்டவர் இவர்.

பல தடவைகள் எதையோ கேட்க நினைத்தும் கேட்காமலே இருக்கின்ற இவரது தோற்றத்தைக் கண்டு, "என்ன விழி” என்றபோது இவர் கூறிய பதில் இன்னும் என் காதில் ஒலிக்கின்றது.

"பயிற்சிக்கு எப்ப போறது என்று கேட்க நினைத்தன் அக்கா. இந்த மக்களுக்கு ஒரு நல்ல வழியைக்காட்டி, அவர்களை முன்னேற்றிவிட்டுத்தான் பயிற்சிக்குப் போக வேணும் என்று விளங்குது". ஆனா பயிற்சி எடுத்து சில இராணுவத்தினரை என்றாலும் அழித்துவிட்டுத்தான் வீரச்சாவடைய வேணும் என்ற விழி தன்னுடைய கனவு நிறைவேறுதற்கு முன் சாவைச் சந்தித்துக் கொண்டார். ஆனால் இவர் எமது மனதிலே மட்டுமல்ல, தான் வேலை செய்த மக்கள் மனதிலும் நிரந்தரமாக நிறைந்து போனார். இவரின் ஏக்கங்களை, ஆசைகளை எம்முன் வாங்கிக் கனத்த இதயத்தோடு, தொடர்ந்தும் போராட்டப் பாதையில் எமது கால்களை நாம் அழுத்தப் பதிக்கிறோம்........   

2ம்லெப்.விழி

நிமலேஸ்வரி சங்கரப்பிள்ளை

ஏழாலை, யாழ்ப்பாணம்

20.09.1965 -03.09.1992

கைதடியில் ஏற்பட்ட
விபத்தில் மரணம்.

 -ஆர்த்தி
சூரியபுதல்வர்கள் 2006.

No comments:

Post a Comment