இவர்கள் வீதிக்கு மேற்காக நெடுந்தொலைவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சத்திர சிகிச்சைகளுக்கான வசதிகளுடன் கூடிய மருத்துவ முகாமைச் சென்றடைகின்றார்கள். இது ஒரு பொதுமகனின் வீடு அதனை இவர்கள் என்ன தேவைக்கு எனக்கேட்டவுடன் வழங்கியிருந்தனர். அதனைச் சில உரிமையாளர்கள் மணித்தியாலங்களினுள் போர்ச் சிகிச்சைக்கான நவீன வசதிகளைக்கொண்ட மருத்துவமனையாக மாற்றியிருந்தார்கள்.
இவர்கள் எதிர்பார்த்ததிற்கு மேலாக நிறைய காயக்காரர்கள் கிடத்தப்பட்டுள்ளனர். அங்கு பணிபுரியும் பிரதம மருத்துவர் இவர்களிடம்
விபரங்கள் கேட்டறிந்தார். உடனே கூறினார். நாங்கள் வன்னி கிழக்கில் இருந்த ஆளணி வளங்களை எல்லாம் இங்காலை கொண்டு வந்திட்டம் திட்டப்படி காயங்கள் அங்கால வராது என்பதால இப்ப அங்கால நிற்கும் ஒரு சிலரும் நீங்கள் அனுப்பின காயங்களுடன் மிகவும் கஸ்ரப்படுவினம். நீங்கள் இன்னும் சிலரைக் கூட்டிக் கொண்டு அங்கால போங்கள்.
மீண்டும் வாகனத்தில் புறப்படும் இவர்களின் நிரந்தர சத்திர சிகிச்சைக்கான வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை வந்தடைகின்றனர்.
அம்மருத்துவமனை நவீன வசதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி உட்புகமுடியாத மக்கள் நடமாட்டம் அற்ற காடொன்றினுள் இதனைக்கட்டுவதற்கு பாரிய முயற்சி தேவையாக இருந்தது. மூலப்பொருள், உபகரண. ஆளணி வசதிகள் இல்லாத சூழலில் இப்படி அமைப்பதென்பது உண்மையில் கடினமான ஒன்றுதான். இராணுவ ஆய்வாளர்கள் இன்னும் வியப்புடன் கேட்கும் கேள்வி இதுதான் எப்படி இவர்கள் இவ் யுத்தக்காயங்களைச் சமாளிக்கின்றார்கள்? என்பது. எதிரியோ நாங்கள் காயக்காரரை சயனைட் கொடுத்துக் கொல்கின்றோம் என கூறிய வண்ணம் உள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.
மேற்படி போர் மருத்துவமனை A.B,C எனக் குறிப்பிட்ட சத்திரசிகிச்சைக்கான அறைகளுடன் அனுமதிக்கும் பகுதி, மீள உயிர்ப்பளிக்கும் பகுதி இரத்தவங்கி. ஆய்வுகூடம்,தொற்றுநீக்கும் அறை, மருத்துவர்கள், ஏனையவர்கள் ஓய்வெடுக்கும் பகுதி என பலவாகப்பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவதேவைக்கான இலத்திரனியல் சாதனங்கள், குளிரூட்டி வசதி. பிரகாசமான ஆனால் நிழல் வீழ்ந்ததாக வெப்பம் வெளிவிடாத மின்சார விளக்குகள் போன்ற இன்னோரன்ன வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
உட்பகுதி மென் பச்சை நிறம் பூசப்பட்டிருக்கிறது. வெளிப்பகுதி அனைத்தும் உருமறைப்புக்குரிய நிறங்கள் பாவிக்கப்பட்டிருப்பதனால் அம்மருத்துவமனை காட்டோடு காடாக மறைந்துள்ளது.
முல்லைத்தீவு வெற்றிச் சமருக்கு முன்னர் அனைவரையும் அச்சுறுத்திய விடயம் இதுதான் சில மணித்தியாலங்களினுள் காயமடையும் பலநூறு போராளிகளை எவ்வாறு காப்பாற்றுவது. ஒரு சில மருத்துவர்களையும் மருத்துவ மாணவர்களையும், தாதியர் பயிற்சி மூன்று மாதமாகவே பெற்ற போராளிகளையும் வளங்களையும் கொண்டு எவ்வாறு சமாளிப்பது. சத்திரசிகிச்சைக்கான குறைந்த உபகரணம் என இந்த நேரத்தில் 91ம் ஆண்டு நடை பெற்ற சந்திப்பொன்றில் இயக்க மருத்துவர்களுக்கு தலைவர் கூறியது ஞாபகம் வருகின்றது. பல காரணிகளால் எம் போராட்டம் பின்னடைவைச் சந்திக்கலாம். யாழ்போதனா வைத்தியசாலை நாங்கள் பாவிக்கமுடியாத நிலைவரலாம். எனவே மருத்துவரீதியாக வரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியவாறு உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். என்றார். அக்கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ மருத்துவக்கல்லூரியும் போராட்ட வரலாற்றில் மருத்துவப் பழுக்களைச்சுமக்க கைகொடுக்கின்றது. எப்பொழுதும் தாங்கள் சொந்த பலத்திலேயே நம்பிக்கை வைக்கும் இயக்க மரபு மருத்துவத்துறைக்கு விதிவிலக்கு அல்லவே. அதனால் இவர்கள் பிரத்தியேகமான மருத்துவமனைகளை அமைத்துக் கொண்டார்கள்.
முல்லைத்தீவுச்சமரை சமாளித்ததாலும் தொடர்ந்து சமர்களுக்கு முகம் கொடுத்ததாலும் உள்வாங்கப்பட்ட அனுபவங்களுக்கு ஏற்ப மருத்துவப்பிரிவு தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றது.
மருத்துவமனையினுள் நுழைந்தவன் மேற்படி காயக்காரப்பிள்ளையை பற்றி விசாரிக்கின்றான். சத்திரசிகிச்சைக் கூடத்தினுள் உள்ளெடுக்கப்பட்டுவிட்டாள் என்பதை அறிந்தவுடன் நின்மதிப் பெருமூச்சு விடுகின்றான். மூன்று நாட்கள் தொடரான வேலை அழுக்குப்படிந்த உடல் இக்கோலத்தில் சத்திர சிகிச்சைக்கூடத்தினுள் செல்லமுடியாது. உடனே தங்ககம் சென்றவன் குளித்துத்தன்னைச் சுத்தம் செய்கின்றான். அவசர அவசரமாக சிகிச்சைக்கூடத்தினுள் ஓடுகின்றான். பெரும்பாலும் அம்மருத்துவமனையில் நிறைந்துள்ள காயக்காரர்களுக்கு சிகிச்சையளித்து முடித்து வெளிவர இன்னும் இரண்டு நாட்கள் எடுக்கும்.
இவன் உட்சென்று அனுமதிக்கும் பகுதியில் பார்க்கின்றான். மேற்படி போராளி அதிர்ச்சியில் இருக்கின்றாள். அவளுக்கு குருதி ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சிகிச்சைக்கான மயக்க மருந்தை அவள் உடல் தாங்காது. சிலவேளைகளில் அதனாலேயே உயிரிழப்பு ஏற்படலாம் மீண்டும் இரத்தம் திரவ ஊடகம் என்பன ஏற்றப்படுகின்றது. ஓரளவு மீளவுயிர்ப்பளித்தல் செயற்பாடு திருப்தியளித்தவுடன் நோயாளி உள்வாங்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கான மேசைமீது கிடத்தப்படுகிறாள்.
உள்ளே காணப்படுபவர்களின் கண்கள் மட்டும் வெளித்தெரிகின்றன. உடலில் ஏனைய பாகங்கள் தொற்றுநீக்கப்பட்ட ஆடையினால் போர்த்தப்பட்டுள்ளது. "நிஞ்சா" படங்களில் வருபவர்கள் போல் காட்சியளிக்கின்றனர். ஆனால் ஆடைகள் வெந்நிறமாக உள்ளது. எனினும் அவர்களின் கண்களில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான சுறுசுறுப்பு தெளிவாகத் தென்படுகின்றது. பெரும்பாலும் இவை நாளை இரத்தச் சிவப்பேறிவிடும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும். இவர்களிடையே வார்த்தைப்பரிமாற்றம் குறைவாகவே காணப்படுகின்றது. அனைவரும் ஒரு ஒழுங்கில் முடக்கிவிடப்பட்ட இயந்திரங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்கள் தங்கள் தங்கள் பணிகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றிருப்பதை விளங்கிக் கொள்ள போதுமானதாக இருக்கின்றது.
அக்காயக்கார போராளி சத்திரசிகிச்சைக்கான மேசையில் ஏற்றப்பட்டவுடன் உடற்காயங்கள் பரிசோதிக்கப்படுகின்றது. பின்புறம் ஊடுருவிய காயம் நிச்சயம் வயிற்றினுள் ஊடுருவி இருக்கும். எனவே நிச்சயம் அதனை வெட்டித்திறப்பது அவசியம். வலது தொடையில் இருக்கும் பாரிய காயம் சத்திரசிகிச்சை மூலம் துப்பரவு செய்யப்பட வேண்டும். வெட்டியகற்றப்பட்ட காலின் மேல்பகுதி என்பு வெட்டப்பட்டு சீராக்கம் செய்யப்பட வேண்டும்.
மேற்படி சத்திரசிகிச்சைமுடிவடைய நான்கு மணித்தியாலங்கள் கடந்துவிட்டது. அப்போராளி அதிதீவிர சிகிச்சைப்பிரிவிற்கு அதனைத்தொடர்ந்து அனுப்பப்படுகின்றாள். மிகுதிக் காயக்காரருக்கு முதல் சுற்றுசிகிச்சையளித்து முடிய இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டது. மேற்படி போராளி இன்னும் சுய நினைவினைப்பெறவில்லை, இதுவரை நான்கு பைன்து இரத்தமும் 30 பைந் திரவ ஊடகமும் ஏற்றப்பட்டு விட்டது. சிறுநீர் தேவையான அளவு வெளியேறுகின்றது. இதுவொரு நல்ல அறிகுறி எனினும் காய்ச்சல் காணப்படுகின்றது. இதுவொரு அபாயமான நிலை உரிய முறையில் மருத்துவப்பராமரிப்பு தொடர்கின்றது. களமுனையில் காப்பாற்றப்பட்டவள், வரும் வழியில் அபாயங்களைத் தாண்டியவள். காப்பாற்றப்படக்கூடிய இடத்தில் இறப்பது என்பது மன வேதனையைத்தரக்கூடியது. இப்போராளி உயிர் தப்புவதாக இருந்தால் களமுனைக்கு அருகாமையில் குருதிமாற்றீடு
செய்வது மருத்துவப்பிரிவினால் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும். எனவே எப்படியும் இவள் தப்பவேண்டும். இவன் மனம் மீண்டும் மீண்டும் அதனையே எண்ணுகின்றது. மூன்றாம் நாளும் வந்துவிட்டது. இன்னும் அப்போராளி சுயநினைவு அடையவில்லை. நாடித்துடிப்பு அதிகமாக இருக்கிறது. இரத்த அழுத்தம் பிரச்சனை இல்லை எனினும் நம்பிக்கை துளிர்விடுகின்றது. இவள் எழும்பினவுடன் தனது காலைப்பார்ப்பாள். இனித்தன்னால் வழமைபோல் ஓடியாடித்திரிய முடியாது என்பதை எண்ணி மனதினுள் அழுவாள், ஏங்குவாள், இரத்த உறவுகளைத் தேடுவாள். ஆனால் அவள் உறவுகள் எங்கிருக்கின்றனவோ தெரியாது. தெரிந்தாலும் இரகசியம் காத்தல் காரணமாக அவர்களை இங்கு அனுமதிக்கமுடியாது. அவளை ஆறுதல்படுத்தும் பணியையும் போராளிகளே செய்யவேண்டும் உடல் பலவீனம் மன உறுதியைத் தாக்கும். அதனைத்தாக்குப்பிடித்து வெளிவருவது போராளிகளுக்கு வழமையானதே, எனினும் கடினப்பட வேண்டும். பலநூறு வருடங்களாக திருமணம் செய்வது பிள்ளைகளை வளர்ப்பது எனும் குடும்பம்சார் கலாச்சாரத்தினுள் சுழன்றவர்கள் இன்று ஒரு தேசசிற்பம் செதுக்க புறப்பட்டுள்ளார்கள். அதற்கான விலையையும் செலுத்தி விளைவுகளையும் சந்திக்கின்றார்கள்.
என் தேசமே! நீ விரைவில் விடுதலையடைவாய் அப்பொழுது வீரச்சாவை தழுவியவர்கள் தவிர, விழுப்புண்ணடைந்தவர்கள், முன்னான் சிதைந்து இயங்க முடியாதவர்கள், அங்கங்களை இழந்தவர்கள் என கனிசமானவர்கள் உன்னில் நடமாடுவார்கள், அவர்களை சுமையாக
நினைப்பாயா? இல்லை சுகமாக நினைப்பாயா?
-முற்றும்
-யுத்தகாண்டம்
-தூயவன்
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்
No comments:
Post a Comment