Sunday, 15 March 2026

முதல் பெண் தரை கரும்புலி மேஜர் யாழினி

முதல் பெண் தரை கரும்புலி

மேஜர் யாழினி
~~~~~~~~~~~~~~
வவுனியா சேமன் மடுவில் 1971 ஆம் ஆண்டு, மாசி ஐந்தாம் நாள் பிறந்தாள் சுப்பிரமணியம் ராகினி என இயற்பெயரைக் கொண்ட இவளுடன் பத்துப் பிள்ளைகளை பெற்றெடுத்த இவள் தந்தையார், ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். இராணுவ ஆக்கிரமிப்பு இவர்களது குடும்பத்திற்கு பெரும் தும்பியலைக் கொடுத்தது.

இவளது மூத்த சகோதரி தர்சினி என்ற பெயருடன் மகளிரின் முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்து 1987 ஆம் ஆண்டு வீரச்சாவை தழுவிக்கொண்டாள். அதன் பின்னர் 1991 ஆம் ஆண்டு யாழினி புலியாகத் தன்னையும் இணைத்துக் கொண்டாள்.

இயக்கத்தில் இணைந்த யாழினி 20 ஆம் பயிற்சி முகாமில் அடிப்படை பயிற்சி முடித்து ஒளிக்கலைப் பிரிவில் தனது பணியைத் தொடங்கியிருந்தாள். கலை உணர்வு இவளிடம் இயல்பாகவே இருந்தது. நன்றாக ஓவியங்கள் வரையும் ஆற்றல் இருந்தது, அறிவுசார் புத்தகங்களை வாசித்து வந்தமையால் எல்லோருக்கும் அறிவுரை கூறிக் கொண்டிருப்பாள்.

இயற்கையுடன் ஒன்றிய வாழ்வியல் ஏதாவது புதுமையைச் செய்யத் தூண்டியது. இரண்டு வருடங்கள் விசேட வேவுப் பிரிவில் வேவுப்பணியில் நின்று கட்டைக்காடு, பத்தமேனி, பூநகரி போன்ற சமர்களுக்கான வேவுப் பணியைச் செய்திருந்தாள்.
அதன் பின் 1996 ஆம் ஆண்டு கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தாள். தலைமையின் அனுமதி கிடைத்ததும் கரும்புலி பயிற்சியைத் தொடங்கினாள். கடுமையான பயிற்சி எந்தவொரு ஆயுதமாக இருந்தாலும் அதை இலகுவில் இயக்கப் பழகிகொள்ளும் திறன் கொண்டிருந்தாள்.

ஆண் போராளிகளுக்குப் போட்டியாகவே தனது அணி போராளிகளையும் மிகவும் துணிச்சல் மிக்கவர்களாக  வளர்த்தெடுத்தாள். கலகலப்பு இல்லாத பொறுப்புவாய்ந்த நேர்மையான போராளி.

எப்போதும் எதையும் தட்டிக்கேட்கும் இயல்பு கொண்டிருந்தவள். ஆண்போராளிகளின் துணையின்றி பெண் போராளிகள் தனித்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இவளது ஆழ்மனதில் இருந்தது.

மணலாற்றில் அரசபடைகளின் கஜபார இராணுவ நடவடிக்கையை முறியடிக்க அமைத்த சண்டைக்களம் இவளது முதற்களம். அந்தச் சண்டையின்போது அவள் மணலாற்றுக் காட்டிலே நின்றாள். ஆரம்பப்பயிற்சி ஆரம்பித்து ஏழு நாட்கள்தான் முடிவுற்ற நிலையில் இவர்களுக்கு காவும் குழுவேலை கொடுக்கப்பட்டது. இறுதிநேரச் சண்டை எதிர்பார்த்ததைவிட அமர்க்களமாக நடந்ததால் அதுவே இவளுக்கு பெரிய அனுபவமாக இருந்தது.

மணலாற்றிலிருந்து புகைப்படப்பிரிவிற்கு வந்து புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டிருந்த போதுதான் கரும்புலியாகப் போகவேண்டும் என்பதே அவளின் மூச்சாகிப்போனது. அங்கிருந்தபடியே மாதத்திற்கு குறைந்தது ஒருதடவையாவது தலைவருக்குக் கடிதம் எழுதுவாள். அதன்படி அவர் கரும்புலியாகத் தெரிவுசெய்யப்பட்டு வேவுப்பயிற்சி அளிக்கப்பட்டு வேவுகளில் ஈடுபட்டாள்.

ஒருமுறை இயக்கச்சிப்பகுதியில் வேவு எடுக்கச்சென்ற சமயத்தில் நாரிப்பகுதியில் அவருக்குப் பலமான காயம். அந்தக் காயத்தினால் சிறிதுகாலம் நாரிப்பகுதியில் உணர்வின்றி இருந்தாள். அந்த நாட்களிலும் கரும்புலியாகப்போய் சாதிக்கவேண்டும் என்ற உறுதிமட்டும் குறையவில்லை.

"வேவு நான் போய் எடுத்துவாறன்” என்று உறுதியளித்தபடி யாழினி போயிருந்தாள். சொன்னபடியே பகல்போல நிலவு எறிந்த அந்த இரவில் மின்சார வெளிச்சங்களும் தேடொளியும் சேர்ந்து

இரவைப்பகலாக்க மண் அணை தாண்டி உட்சென்று அவள் எடுத்து வந்த வேவு அவள்மீது எல்லோருக்கும் அசையாத நம்பிக்கையைக் கொடுத்தது.

இலக்குக்குப் போகின்ற கடைசி நேரம் வரை அவளுக்குக் காய்ச்சல். இலக்குக்கான மாதிரிப் பயிற்சியையும் காய்ச்சலுடன்தான் செய்து முடித்தாள். விரைவாகத் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் நழுவிப்போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் தனது இயலாமையைக் கூட வெளிப்படுத்தாது இரவிரவாக கடுமையான மாதிரிப் பயிற்சிகளைச் செய்து முடித்த பின்பே தனது இலக்குக்குச் சென்றாள்.

"தற்செயலாய் இலக்கை அடையமுதல் அங்கே காயப்பட்டால் கூட குறோல் இழுத்தாவது இலக்குக்குப் போவன்” என சொல்லிவிட்டுச் சென்ற கடைசி வார்த்தை. "வெற்றி உறுதி” என்ற பெயரில் எதிரியால் முன்னெடுக்கப்பட்ட சமரை முறியடிக்கும் முகமாக தாண்டிக்குளம் முகாமை தகர்த்தழிப்பதே இலக்காகக் கொண்டு 06-10-1997 அன்று ஜெயசிக்குறுப் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த 'ஜெயசிக்குறு' நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது.

இந்தத் தாக்குதலில் கரும்புலி மேஜர் யாழினியுடன்  கரும்புலி மேஜர் நிதன்,மற்றும் கரும்புலி கப்டன் சாதுரியன், வீரகாவியமாகி இருந்தனர். முதல்பெண் தரைக் கரும்புலி என்ற பெருமையை எமது நாட்டில் நிலை நாட்டி வீட்டிற்கு இரண்டாவது மாவீரராக சாதனை படைத்தவள் முதல் பெண் தரைக் கரும்புலி என்ற இந்த பெருமைக்குரிய மேஜர் யாழினி.

வீரவணக்கம் 🙏

-விழுதுகள் (1)

No comments:

Post a Comment