Friday, 13 March 2026

அவலத்தை தந்தவருக்கு அதை திருப்பிக் கொடு.

அது, 1987 ஒக்ரோபர் 10 ஆம் நாள். ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் அந்தநாள் மறக்கப்படவே முடியாதது. அன்றுதான்' கோலியாத்' (இந்தியா) என்ற அரக்கன், சிறுவனான 'டேவிற்’றை (புலிகள்) சண்டைக்கு இழுத்த நாள்.

அதாவது, கிள்ளுக்கீரைகள் என நினைத்து தமிழீழ விடுதலைப் புலிகளைக் கிள்ளி எறிய, இந்திய அரசு முடிவெடுத்த நாள்.

ஆயினும், அந்தக் “கிள்ளுக்கீரைகள்" "காஞ்சோண்டி'களாக மாறி இந்திய ஆக்கிரமிப்பை  அரிக்கத் தொடங்கிய நாளும் அதுதான்.

அந்த நாட்களில், யாழ். பல்கலைக் கழகத்திற்கு மேற்குப்புறமாக உள்ள பிரம்படி என்ற என்ற சிற்றூரில், தலைவர் பிரபாகரனின் பாசறை இருந்தது. அதேவேளை பல்கலைக்கழகத்திற்குத் தெற்குப் புறமாக -அதனை அண்டித் தலைவரின்  பிரதான முகாம் இருந்தது. அன்று காலையே அந்த முகாமுக்குச் சென்ற தலைவர் அவர்கள் தளபதிகளை அழைத்து, போருக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்று அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

இதேவேளை, யாழ். கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினரை வெளியேற விடாது புலிகள் எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். 

யாழ் கோட்டைப்பகுதியில் சண்டை தொடங்கியது.

அப்போது, பலாலி இந்தியப் படைத் தலைமையகத்திலிருந்து மேஜர் பெரியசாமி என்ற பெயருடைய இராணுவ அதிகாரி, புலிகளின் தலைமைப்பீடத்துடன் 'வோக்கி” மூலம் தொடர்புகொள்ள முயன்றார். (இந்தீயப் படையுடனான சமாதான காலத்தில் இந்த இராணுவ அதிகாரி, புலிகளுக்கும் -இந்திய உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பு அதிகாரி யாகப் பணியாற்றி இருந்தார் ).

மேஜர் பெரியசாமியின் அழைப்புச் சத்தத்தைக் கேட்ட தலைவர் அவர்கள், தானே 'வோக்கி'யை எடுத்து பெரியசாமியுடன் தொடர்புகொண்டார்.

“பெரியசாமி ...... பெரியசாமி இங்கே நான் பிரபாகரன் பேசுகின்றேன்" என்று பதில் கொடுத்தார்.

எதிர்முனையில் இருந்து கிடைத்த இந்த எதிர்பாராத பதில் அழைப்பால் திடுக்குற்ற மேஜர் பெரியசாமி, "யார் பிரபாகரனா? வணக்கம்சார்” என்று தனது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி விட்டு ஏதோ கதைக்க முயன்றவரைக் குறுக்கிட்ட தலைவர் அவர்கள்,

"நீங்கள் (இந்தியப் படை ) தேவையற்ற முறையிற் போரை ஆரம்பித்துள்ளீர்கள் நாங்களும் போருக்குத் தயார் என உங்களது தளபதிகளிடம் சொல்லுங்கள். இனி போர்க்களத்தில் சந்திப்போம்" என்று கூறிவிட்டு, 'வோக்கி'யின் இயக் கத்தை நிறுத்தினார்.

மாரிமழையும் தீவிரமடைந்தது. போரும் தீவிரமடைந்தது....

போரில் இந்தியப் படைகளை வெல்ல முடியாது என்ற கருத்தை எமது மக்களில் பலர் மிகவும் உறுதியாக வைத்திருந்தார்கள். அதுபோலவே தமிழ் மக்களை இந்தியப் படை கொலைசெய்ய மாட்டாது என்ற கருத்தையும், எமது மக்கள் நம்பிக்கையுடன் வைத்திருந்தார்கள். இதனால், எறிகணை வீச்சில்லாத, வான் வழித் தாக்குதல்கள் இல்லாத, ஒரு சண்டைபற்றி மக்களிற் பலர் கற்பனை செய்துகொண்டிருந்தனர்.

ஆனால், போர் தொடங்கிய அன்றே பிரம்படியில் இந்தியப் படைகள் புரிந்த கொடூரமான படுகொலைகள், மக்களை அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கின. அதைத் தொடர்ந்து யாழ்கோட்டை மற்றும் பலாலிப் படைத் தளங்களில் இருந்து ஏவப்பட்ட ஆட்டிலறி எறிகணைகள் அகதி முகாம்களிலும், கோயில்களிலும், வீடுகளிலும், பாடசாலைகளிலும் விழுந்து மக்களைப் பலிகொள்ளத் தொடங்கின.

இந்தியாவின் அகிம்சை முகமூடியை, அதன் ஆட்டிலறிகளும், எஸ். எல். ஆர். துப்பாக்கிகளும் கிழித்துக்கொண்டிருந்தன.

இந்த இடத்தில், வேதனை நிறைந்த ஒரு சுவாரசிய சம்பவத்தைக் குறிப்பிட வேண்டிய தேவை உள்ளது. இந்திய -புலிகள் போர் கடுமையடைந்து கொண்டிருந்த போது, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது; அந்தப் போட்டியில் இந்தியா தோற்றுவிட்டது. இந்தத் தோல்விச் செய்தியை வானொலி வர்ணனையாளர் அறிவித்ததும், அதைப் பலாலியில் இருந்தபடி செவி மடுத்துக் கொண்டிருந்த பிரிகேடியர் பெர்னாண்டஸ் என்ற இந்தியப் படை அதிகாரி, தனது ஆட்டிலறிப் படைக்கு தொலைத்தொடர்பு கருவி ஊடாக இவ்வாறு உத்தரவிட்டார்.

"இந்தியாவின் கிரிக்கெட் தோல்வியை புலிகள் கொண்டாடப் போகின்றார்கள். எனவே, உடனடியாக ஆட்டிலறித் தாக்குதல்களை மேற்கொள்ளவும்."

இந்த உத்தரவைத் தொடர்ந்து கோண்டாவில். கொக்குவில், திருநெல்வேலி, நல்லூர், மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளை நோக்கிச் சில நிமிட நேரங்கள் பலத்த ஆட்டிலறித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

இந்தியக் கிரிக்கெட் குழு ஒரு போட்டி யில் தோற்றதால், ஒரு இராணுவ உயர் அதிகாரிக்கு ஏற்பட்ட பைத்தியக்காரத் தனமான கற்பனை காரணமாகப் பிறந்த கட்டளையால், எமது மக்களில் எத்தனை பேர் பலியானார்கள்!

இந்திய - புலிகள் போர் தொடங்கி
ஒன்று, இரண்டு மாதங்களில் குடாநாடு இந்தியப் படைகள் வசமாகிவிட்டது. அதே வேளை புலிகளின் படையணிகள் சிதைந்தும், சேதப்பட்டுச் சிதறுண்டும் காணப்பட்ட ஒரு இக்கட்டான காலப்பகுதி அது. சுருக்கமாகச் சொன்னால், இராணுவ ரீதியாகப் புலிகள் இயக்கம் பலவீனப்பட்டுப் போய் நின்ற நெருக்கடியான வேளை அது. அதேவேளை தலைவரின் பாசறை அமைந்திருந்த மணலாற்றுக் காட்டுக்குள் ஒரு பாரிய படையெடுப்பைச் செய்ய, இந்தியப் படைகள் ஆயத்தம் செய்து கொண்டிருந்தன. உணவு, மருத்துவம், படையணிகளுக்கிடையேயான தொடர்பு கொள்ளல் என்பவை பெரிதும் பாதிக்கப்பட்டு, போராளிகள் ஒரு விரக்திச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருந்த காலகட்டம் அது. இதனால் புலிகள் இயக்கமே முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிடுமோ என்ற ஒரு அபாயம் நிலவிய வேளை அது, அந்தளவுக்கு இந்தியப் படைகள் ஒரு பாரிய இராணுவ - உளவியல் நெருக்கடியை எமது இயக்கத்திற்கும், எமது மக்களுக்கும் கொடுத்துக்கொண்டிருந்தன.

இந்தநிலையில் இந்தப் பாரிய நெருக்கடியைத் தீர்த்து இயக்கத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசுடன் சமாதானப் பேச்சுக்குப் போவதே புத்திசாதுரியமான வழி என, எமது மூத்த உறுப்பினர்கள் சிலர் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தலைவருக்குச் செய்தி அனுப்பினார்கள்.

இந்தநிலையில் இந்தப் பாரிய நெருக்கடியைத் தீர்த்து இயக்கத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசுடன் சமாதானப் பேச்சுக்குப் போவதே புத்திசாதுரியமான வழி என, எமது மூத்த உறுப்பினர்கள் சிலர் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தலைவருக்குச் செய்தி அனுப்பினார்கள்.

இந்தச் செய்திக்குத் தலைவர் எந்தப் பதிலையும் அனுப்பவில்லை.
சமாதானப் பேச்சிற்கு எப்போது நாம் செல்லவேண்டும் என்பதில் தலைவர் ஒரு கொள்கையை வைத்திருக்கின்றார். அதாவது, இராணுவரீதியில் பலமான நிலையில் இருந்தபடிதான் நாம் சமாதான பேச்சிற்குச் செல்லவேண்டும்; அப்போது தான் எமது உரிமைகளை நாம் வலியுறுத்திப் பெறமுடியும். பலவீனமான நிலையில் இருந்தபடி சமாதானப் பேச்சிற்குச் சென்றால் - அதுவும் வலியச் சென்றால் சமாதான உடன்பாடு என்ற போர்வையில் எமது இனத்தின் அடிமைச் சாசனத்தையே எதிரி எம்மிடமிருந்து பெற முனைவான் என்பதில், தலைவர் கவனமாக இருக்கின்றார்.

சமாதானப் பேச்சிற்குச் செல்வதே சிறந்தது என்று எமது மூத்த உறுப்பினர்கள் கோரிய அந்தக் காலத்தில், புலிகள் இயக்கம் உண்மையில் பலவீனமாகவே இருந்தது; எனவேதான், இந்தச் சமாதான ஆலோசனைக்குத் தலைவர் பதில் அனுப்பாது விட்டார்.

ஆனால், மீண்டும் மீண்டும் பதில் வேண்டி அந்தச் செய்தி வந்தபோது, தொலைத் தொடர்பு சாதனம் ஊடாகத் தலைவர் இவ்வாறு பதிலளித்தார்.

“அமெரிக்கப் படையுடன் போரிடத் தொடங்கும்போது தாம் 30 வருடங்களிற்கு மேல் போர் புரியவேண்டி வரும் என வியட்நாம் தலைமை நினைத்திருக்கமாட்டாது. ஆனால் அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கையும் துணிவும்தான் அவர்களை உறுதியுடன் வைத்திருந்தது; வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

அந்த தன்னம்பிக்கையும் துணிவும் என்னிடம் இருக்கின்றது."

உட்பொருளை இந்தச் செய்தியின் அந்த மூத்த உறுப்பினர்களும் புரிந்து கொண்டு தொடர்ந்தும் போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டார்கள்.

அவலத்தையும் அபாயத்தையும் கண்டு விட்டு மனம் இடிந்துபோவது மனித சுபாவம். இந்த மனித குணத்தை ஆக்கிரமிப்பாளர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்துவதை, உலக வரலாற்றில் அன்றிலிருந்து இன்றுவரை காணலாம்.

போராடும் மக்கள் மீது அவலங்களை விதைத்து, தேசத்தின் உறுதிப்பாட்டை உடைத்துப் போரை வென்று மக்களை அடிமைகொள்வது, ஒரு ஆக்கிரமிப்புச் சித்தாந்தம். அமெரிக்கச் சிவப்பிந்தியர்கள் மீதும், ஆப்பிரிக்க நீக்ரோக்கள் மீதும் வெள்ளை இன அரசுகள் இதை வெற்றிகரமாகச் செய்துள்ளன. இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியாவை வெல்வதற்காக ஜேர்மனிய விமானப் படை, இந்த அவலத்தை பிரித்தானிய நகரங்கள் மீது விதைத்தது. பின்னர் அதே நோக்கத்திற்காக பிரித்தானிய விமானப்படை, ஜேர்மனிய நகரங்கள் மீது அந்த அவலத்தை வட்டியுடன் சேர்த்து விதைத்தது.

ஒப்பறேசன் முன்னோக்கிப் பாய்தலின் போதும் இந்த உத்தியைத்தான் சிங்களப் படைகள் கையாண்டன. தென்தமிழீழ மக்களது போராட்ட உறுதியை உடைப்பதற்கு நீண்ட நாட்களாகவே இதே வகைப் பயங்கரத்தையே சிங்களப் படைகள் அங்கே செய்து வருகின்றன.

ஆனால், புலிகள் இயக்கத்திடம் இந்த ஆக்கிரமிப்புச் சித்தாந்தம் எடுபடுவதில்லை.

அவலத்தை அபாயத்தைக் கண்டு பதறி அவநம்பிக்கை அடைவதைவிட, அதற்கு எதிராக ஆவேசங்கொண்டு, அவற்றை எமது மக்கள் மீது ஏவிவிட்டோரே அவற்றை அனுபவிக்கும்படி செய்வதுதான், ஈழத் தமிழினத்திற்குத் தலைவர் பிரபாகரன் கொடுத்துள்ள புதிய சித்தாந்தம் ஆகும்.

-விபு இதழ் வைகாசி 1996.

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்

No comments:

Post a Comment