Sunday, 15 March 2026

யுத்தகாண்டம் பாகம் 9 - தூயவன்

மேலதிக ரவைப்பெட்டிகள், முதுகில் காணப்படும் தொலைத் தொடர்புக் கருவிகள் என ஒரு சிறு படையணித் தளமே நகர்ந்த வண்ணம் உள்ளது. இடம் நொச்சிக்குளம் வித்தியாலயம் முன்பாக.

அணியணியாக புலிவீரர் அணிவகுத்துள்ளனர். முன்நிற்கும் அணித்தலைவர்களைத் தொடர்ந்து போராளிகள் நிரைகளாக நின்றார்கள்...........👇 9 

........எண்ணும்பொழுது ஆயிரம் தாண்டும். பார்க்கப், பார்க்க உள்ளம் பூரிக்கிறது. மண்ணை ஆக்கிரமித்து நிற்பவனுக்கு மரண அடி கொடுக்கத் தவித்துக் கொண்டிருக்கும் இவர்களில் பலர் திரும்பி வரப்போவதில்லை. அங்கங்கள் இழக்கப் போகின்றார்கள். சிலர் பலர் முன்னான் சிதைந்து இயங்க முடியாமல் போகப் போகின்றார்கள். இவைதான் போரின் யதார்த்தம். இதனை அனுபவங்களினூடாக உணர்ந்தவர்கள் களம் நோக்கி விரைகின்றார்கள்.

ஆகுதி நெய்யைத் தம்மில் வார்த்து வெண்தீயில் குதிக்கப் போகின்றார்கள் விடுதலையை விரைவாக்க முனையும் ஒவ்வொரு தடவயும் தலைமை தவிக்கும் ஏனோ "வெடிசுமந்து போகும் வேங்கை இடிமுழங்கும், போகவிடை கொடுத்த பெருந்தலைவன் விழிகலங்கிடும். பாடல் வரிகள் நினைவில் வந்து இவன் இதயத்தை பிழிகின்றது.

ஒரு போதும் இம்மண் அந்நியனுக்கு அடிபணியாது இதனை இந்திய இராணுவமும் ஒரு முறை பட்டு உணர்ந்தது. அதனை சிங்களப் பேரினவாதம் விளங்க மறுக்கிறது. இதனை பகைவன் விளங்கும்வரை இம்மண்ணை விட்டு அவன் விலகும்வரை, என்ன விலையேனும் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இவன் சுயம் மறந்த நினைவில் நினைக்கையில் மீண்டும் அதே குரல் "என்ன டொக்டர் கனக்க யோசிக்கிறியள்? சத்தியப்பிரமாணம் தொடங்கப்போகுது. நான் வாறன் அதுக்கு முதல் ஒண்டு சொல்லுறன் நான் பலபேருக்கு பாடினான் எனக்குப் பாடுறாங்களோ தெரியாது. காயப்பட்டு வந்தால் வடிவாகக் கவனியுங்கோ" சொல்லிச் சிரித்தவன் கைகுலுக்கி விடைபெற்று தன் அணி நோக்கி விரைகின்றான். இவனிற்கு அறிமுகமான ஒவ்வொரு போராளியும் கடக்கும்போது ஓடிவந்து கைகுலுக்கிவிட்டுப் போகின்றார்கள்.

மாவீரர்களுக்கும் போரின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமாக
அகவணக்கம் செலுத்தப்படுகின்றது. தொடர்ந்து பேரணி.... சீராய் நில் எமது புரட்சிகர இயக்கத்தின்.... உறுதியுரை சொல்லப்படுகின்றது. இறுதியில் "புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்" என்று அனைவரும் ஒத்த குரலில் ஓங்கியொலிக்கின்றார்கள். அனைவரும் தோளின் மேலாக துப்பாக்கிகளை உயர்த்தி உறுதி எடுக்கையில் மெய்சிலிக்கின்றது. உள்ளம் இறுகியது. அணையுடைத்துப் பாயும் பெரும் வெள்ளத்தின் இரைச்சலென அவ்வுறுதியுரை காதினுள் ரீங்காரம் செய்த வண்ணம் உள்ளது. ஆயிரம் புலிகள் ஒன்றாய் உறுமுவதாய் காட்சி விரிகிறது.தொடர்ந்து களமுனைத் தளபதி கேணல் தீபன் அவர்கள் அணிகளை போரிற்கு ஆற்றுப்படுத்தும் உரையினை ஆற்றினார். "நாங்கள் மிகப்பெரிய நகர்வினை இதுவரை எவ்வித இடர்களும் இல்லாமல் செய்து விட்டோம். மற்றப்பக்கமும் இதுவரை ஒரு பிரச்சனையும் வரவில்லை. இனித்தான் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை எதிரியின் நடமாட்டம் உள்ள பகுதியினுள்ளதான் நகர்ந்தனாங்கள். இனித்தான் அவனின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் ஊடுருவப் போகின்றோம். எங்களில் ஒருவர்விடும் சிறு தவறே பாரிய அழிவினைக் கொண்டு வந்துவிடும். எனவே ஒவ்வொருவரும் கவனமாகவும் நிதானமாகவும் செயற்படவேண்டும், உங்கள் உங்களிற்கென தரப்பட்ட பணியினை நீங்கள் ஏற்கனவே விளங்கப்படுத்திய மாதிரி திறமையாகச் செய்து முடியுங்கள். நாங்கள் ஏற்கனவே அவனுக்கு இருதரம் அடி கொடுத்துள்ளோம். பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளோம். இம்முறையும் வெற்றி பெறுவோம். பல கனரக ஆயுதங்களை எடுக்கக்கூடியதாக இருக்கும். ஆயுதங்களையும் கைப்பற்ற முயற்சி செய்யுங்கள். முடியாத விடத்து அவற்றை பயன்படுத்த முடியாதவாறு
அழித்துவிடுங்கள். போனமுறை நடந்த தவறு ஒன்றை சுட்டிக்காட்டுகின்றேன். தண்ணீர் தொட்டியொன்றைச் சுட்டுவிட்டு வந்தனாங்கள். அவன் இப்ப அதில் இருந்த ஓட்டைகளை அடைத்து விட்டுப் பயன்படுத்துகின்றான். நாங்கள் பின்வாங்கினாலும் எப்பொருளையும் அவன் மீளப் பயன்படுத்த முடியாதவாறு அழிக்க வேண்டும்."

இன்னொரு விடயம் சண்டையில் கொல்பவன் வெல்வான் அண்ணை அடிக்கடி சொல்லுறவர். முடிந்தளவு அழிவுகளை ஏற்படுத்துங்கள் எங்களுக்கு வெற்றி நிச்சயம். எங்கள் மண் மீட்கப்படுவதற்கும், இந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிவடைவதற்கும் இதுவொரு பலமான காரணியாக அமையும். எங்களுக்குரிய கடமைகளை நாங்கள் சரியாகச் செய்து முடிக்கும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும் "சென்று வருவோம் வென்று வருவோம்."

அவரின் உரையை தொடர்ந்து "நன்றி என எல்லா போராளிகளும் உரத்துக் கூறினார்கள்.

இதுவரை இரட்டை வரிசையாக நகர்ந்து வந்த படையணி இப்பொழுது ஒற்றை வரிசையில் நகரத்தொடங்கியது. இவன் சகபோராளிகள் சிலருடன்  ஒரு ஓரமாக நின்று கடந்து செல்லும் ஒவ்வொரு போராளியினது  முகத்தினையும்  பார்க்கின்றான். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்  அனைவரும் "அண்ணை" போயிற்று வாறம் என புன்சிரிப்புடன் கூறி விடைபெறுகின்றார்கள். அனைவரையும் வீடியோக்கமரா உள்வாங்குகின்றது. போராளிகள் தங்கள் உபகரணங்களுடன் நகர அவ்வீதியில் தூசிமண்டலம் படர்கின்றது. தமிழீழத்திற்கான படை நகர்ந்து கொண்டிருக்கின்றது. தலைவர் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சொல்வாராம் தனக்கு ஒரு நூறு
போராளிகளையாவது சீருடையில் பார்க்க ஆசையாக உள்ளது என" இன்று ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழ்த் தேசிய இராணுவத்திற்கான வரிப்புலி சீருடையில் அல்லவா சென்றுகொண்டு இருக்கின்றார்கள்,

அடிவேண்டி அடிவேண்டியே பின்வாங்கிய தமிழன், இன்று திரும்பவும் அடிக்கத்தொடங்கியுள்ளான். ஆயிரம் வருடங்களின் பின்னர் போரில் வெற்றிகள் குவிக்கின்றான். வரலாற்றுச்சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கிறது. காலம் இப்பொழுது எம்பக்கம், ஒவ்வொருவராக இவனை கடந்து செல்லும் போது இவன் மனம் சங்கடப்படுகின்றது. இவர்கள் முதலில் அடித்துப்பிடித்துக் கட்டவுட் போடுவதை பொறுத்துத்தான் இவர்களின் நகர்வும் அமையும். இறுதி அணியினருடன் தளபதியும் விடைபெற்றுச் செல்கின்றார்.

மீண்டும் சிறு ஒழுங்கையினூடு வந்தவர்கள் பிரதான வீதியில் வந்து ஏறுகின்றார்கள். திடீரென வீதி வெறிச்சோடிக் கிடக்கின்றது. அமைதியான ஒரு உணர்வு ஆட்கொள்கின்றது. பல நூறு போராளிகள் பாதம் பட்டபுண்ணிய பூமி நாளைய வாரலாற்றில் சில வேளை இது பதிவாகலாம்.. எங்கும் ஒரே அமைதி.

இவர்களின் காலடி ஓசைமட்டும் இவர்கள் காதுகளை எட்டுகின்றது. "போராட்ட வாழ்வில்தான் எவ்வளவு வித்தியாசமான அனுபவங்கள், சில வேளை வெளியில் இருந்திருந்தால் இப்படியான அனுபவங்கள் கிடைத்திருக்காது. ஏதாவது ஒரு இயந்திர வாழ்வினை தேர்ந்து எடுத்திருப்பம்" தன்னுள் எண்ணியவண்ணம்  மற்றவர்களுடன் முதலில் தங்கியிருந்த வீட்டை நோக்கி வருகின்றான்.

இவனுக்கு நேரம் போவது மிகவும் கடினமாக இருக்கிறது. தனிமையில் யோசிக்கத்தொடங்கினான். சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம்
ஒன்று இவன் எண்ணத்தை ஆக்கிரமிக்கின்றது. "ஏனெடா மருத்துவப்பிரிவிற்கு வந்தேன்?" எனும் சலிப்பு எட்டிப்பார்க்கிறது.

நெடுங்கேணியில் பெரியமடு எனும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மருத்துவ முகாமில் கடமையாற்றிக்கொண்டிருந்தான். அன்று அவனது பிறந்தநாள். ஞாபகமூட்டிய சகபோராளிகள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். ஆனால் அவனது மனநிலை அன்று நன்றாக இல்லை. முதல் நாள் இவர்களின் சுற்றாடல் எறிகணை மழையில் நனைந்திருந்தது. அவர்களின் பகுதியில் விழுந்து வெடித்த எறிகணையொன்று ராஜன் எனும் சாரதியைக் காயப்படுத்தி இருந்தது. நல்ல நகைச்சுவை நிரம்பியவன். சிறிது நேரத்திற்கு முன்தான் இவர்களுடன் இருந்து கதைத்துவிட்டுச் சென்றவன். ஐந்து யார் போயிருப்பான் எறிகனை ஒன்று தென்னைமரவட்டில் பட்டு வெடிக்க சிதறல் ஒன்று கழுத்துப்பகுதியில் அவன் முள்ளந்தண்டைத் தாக்கிவிட்டது. உடனடியாக இவனும் மற்றவர்களும் அவனை இழுத்துக்கொண்டு பதுங்கு அறையினுள் சென்று சிகிச்சை செய்தார்கள். அப்பொழுதே இவனுக்கு விளங்கிவிட்டது ஆளுக்கு இனி உடம்பின் கீழ் பெரும்பகுதி இயங்கமுடியாது என்று, ஆனால் அதனை அவனுக்கு உடனடியாகத் தெரிவிக்கவும் முடியாது. அவனை மேலதிகச் சிகிச்சைக்காக பின்தளம் அனுப்பினான். அவனை பற்றி எவ்வித மேலதிக செய்தியும் கிடைக்கவில்லை. கடவுளே! அப்படி எதுவும் கடவுளை பற்றிய கொள்கையில் தெளிவின்மை நடக்கக்கூடாது. காணப்பட்டாலும் அவனது மனம் இவ்வாறு வேண்டுவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

"போராட்ட வாழ்வில் இதெல்லாம் சாதாரணமானவை ஏன் மற்றவர்களுக்கு அடிக்கடி ஞாபகமூட்டி மனநிலைகளை சோகத்தினுள் இழுப்பான்" என
பேசாமல் இருந்துவிடுவான்.

"நாங்களும் எப்பவும் சாகலாம், இருக்கும் வரையும் சிரிச்சுப்பம்பலாக இருக்க வேணும்" என நினைத்து வலிய வந்து பகிடி விடுவான். மனிதனுக்கு நகைச்சுவையுணர்வு உண்மையாக இருக்க வேண்டும். பிறக்கும் போது அழுது கொண்டு பிறப்பவன், இறக்கும் போதும் அழுதுகொண்டே இறப்பவன். இருக்கும் போதாவது சிரித்துக்கொண்டு இருக்கவேண்டும்.

அடுத்த நாள் நயினாமடுப் பகுதியில் பாரிய சண்டை ஒன்று நடைபெற்றது. முன்னேற முயன்ற இராணுவத்திற்கும் தடுக்க முற்பட்ட புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சமரில் நான்கு பேர் காயப்பட்டனர். இவர்களின் முகாமிற்கு கொண்டுவரப்பட்டனர். எல்லாக் காயங்களுக்கும் தேவையான சிகிச்சையினைக் கொடுத்து பின் தளம் அனுப்பிவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். "மூன்று பொடி வந்திருக்கு" ஒருவன் கூறுவது கேட்க "சரிபோய்ப் பார்ப்பம் சாகவேண்டிய காயமா அல்லது முயற்சி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமா!" என எண்ணமிட்டபடியே அவ்விடம் நோக்கி போகின்றான்.

மூன்று வித்துடல்களையும் பார்க்கும்போது மனம் கனக்கின்றது. ஆயினும் அதனைக் காட்டிக்கொள்ளாமல் காயங்களை பரிசோதிக்கின்றான். ஒரு பிள்ளைக்கு தொடை இரண்டும் சிதைந்துள்ளது. இன்னொரு பிள்ளைக்கு நெஞ்சில் பாரியகாயம். மற்றப்போராளிக்கு வயித்தில பாரிய காயம். குடல் வெளியில் வந்து கிடக்குது. என்ன நினைத்தானோ தெரியாது முகங்களைப் பார்ப்பம் என எண்ணியவாறு மூடி இருந்த சாக்கை விலத்தினான்.

பேரிடியொன்று தலையில் வீழ்ந்த மாதிரி இருந்தது. நேற்று "அண்ணா! என்ர பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்" எனச்சொல்லிப் போனவள்

இன்று பிணமாக வந்து கிடக்கிறாள். அந்த அதிர்ச்சியில் இருந்து மனம் விடுபட சில நிமிடங்கள் எடுத்தது. "செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்பவன் எவனோ அவனே யோகி" கீதை சொல்கிறதாம். வாழ்வினில் இறப்பையும் இறப்பினில் வாழ்வையும் காண்பவன் எவனோ அவனே போராளி என்கிறது தமிழீழத்தின் யதார்த்த வேதம். இந்த நினைவுகள் எல்லாம் மனதைவிட்டு மறந்து போனால் எவ்வளவு நல்லா இருக்கும். சீ ....... இப்படி நடக்கக் கூடாது. இவைகள் தானே எங்களுக்கு உந்துசக்தியாக இருப்பவை. அப்படியாயின் சோக நிகழ்வுகளை அடிக்கடி நினைக்க வேண்டுமா? வாழ்வின் அர்த்தம் என்ன? இவனின் மனம் தன்னுள் முடிவெடுக்கமுடியாத விவாதம் நடத்துகின்றது. தனியாய் இருந்தால் யோசனை பிடிக்கும்.

என எண்ணியதால் அருகில் பம்பல் அடிச்சுக்கொண்டிருக்கும் போராளிகளுடன் கலந்து கொள்ளுவதற்காக எழுந்து செல்கின்றான்.

மாலை ஆகிவிட்டது. எல்லோரும் முகம் கழுவி தேனீர் அருந்திவிட்டு மீண்டும் படுத்திருந்தார்கள். சரியாக 10.30க்கு சண்டை ஆரம்பிக்கும். சண்டை ஆரம்பித்தவுடன் இவர்கள் வாகனங்களில் புறப்பட வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நீட்சிபெற்றுக் கழிவதாக உணர்கின்றான். இப்ப குறூப் "நைற்மூவ்" செய்யும்,வழியில் L.P காரங்கள் கண்டிருப்பாங்களா? சீ... அப்படி நடக்காது நடந்திருந்தா சண்டை குழம்பி இருக்கும். இப்ப சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும். அமைதியாகக்கழியும் ஒவ்வொரு நிமிடமும் போராளிகள்  பிரச்சினை இல்லாமல் எதிரி முகாமை நெருங்கிக்கொண்டிருப்பார்கள் என்பது திண்ணம். 
எனவே இவர்களின் காதுகள் கூர்மையாக இருந்தது. 

அவ்வேளை சந்திரன் உட்பட சில போராளிகள் பக்கற் சோற்றை உடைத்து சமைக்கின்றார்கள். அதனுள் ரின் மீனையும் உடைத்துப்போட்டு கலக்கி சுவையூட்டுகின்றார்கள். வாசனை காற்றில் கலந்து மூக்கில் துளைத்து எச்சிலை ஊறவைத்தது. திடீரென பசி எடுத்த மாதிரி இருந்தது. எழுந்து சமையலறைப்பக்கம் போனான். "என்ன மச்சான் செய்ய வேணும்?" "தேசிக்காய் கொஞ்சம் வெட்டித்தாங்கோ." கிணத்தின் அருகில் நின்ற தேசிமரத்தில் சில பழங்களை பிடுங்கிக் கசக்கி வெட்டிக்கொடுக்கின்றான். "சமையலுக்கான எனது சிறிய பங்களிப்பு" சிரித்தபடி கூறுகின்றான்.

மதியம் புறப்பட்ட பேரணியானது மாலையானதும் முகாம் முன் காவலரனில் இருந்து ஒரு கி.மீ முன்னால் தன் நகர்வை நிறுத்திக்கொண்டது. நன்றாக இருட்டியவுடன் மீண்டும் அணிகளாகப் பிரிந்து இருபக்கமும் கண்டிவீதிக்கு சமாந்தரமாக செல்லத் தொடங்கியது.........

-தொடரும்.....

-யுத்தகாண்டம் 

-தூயவன் 

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

No comments:

Post a Comment