Tuesday, 17 March 2026

விடுதலைப் பாதையில் ஓர் நாள்

(உண்மைக்கதை)

விடுதலைப் பாதையில் ஓர்நாள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓர் அமைதியான அதிகாலை. அன்றைய காலை மட்டும் ஏனோ ஓர் மயான அமைதியாய்... விடியலில் வேலைக்காய் புறப்பட்ட பாதங்கள் மீண்டும் தத்தம் வீடுகளிலேயே விரைவுடன் புகலிடம் தேடிக்கொள்கின்றன.

அண்மைக் காலமாக வேட்டுக்களுடன் கண்விழிக்கும் சாவகச்சேரி நகர் அன்று மட்டும் இரை தேடி வந்த அமைதிக்(IPKF) கும்பலினால் ஓசையின்றி முற்றுகையிடப்பட்டது. முற்று முழுதான முற்றுகை.

சப்பாத்துக்களின் சீரான ஓசை. அரவம் கேட்டு விழித்த நாய்கள் பச்சைத் தொப்பிகளைக் கண்டதும் அமர்க்களமாகக் குரைக்கத் தொடங்கின. மக்கள் கிலி கொண்டு வீடுகளினுள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். அமைதியைக் காக்க வந்தவர்களால் அன்றும் அமைதி சூறையாடப்பட்டது.

முற்றுகையில் அகப்பட்ட மூன்று விடுதலைப் புலிகள் பாய்வதா? பதுங்குவதா? யோசித்தார்கள். பாதுகாப்பிடம் ஒன்றில் தயார் நிலையில் பதுங்கியிருந்தனர்.

மதிய வேளையாகிக் கொண்டிருந்தது . திடீரென்று சரமாரியான துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள். அதைத் தொடர்ந்து மக்களின் பீதி நிறைந்த ஒலம். அந்த நேரத்தில்

"தம்பி...."ஓர் குரல்.

'இந்த நேரத்தில் யார் ' 

ஓர் எச்சரிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் சிறிது நேரம் காத்திருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். யாரையும் காணவில்லை. ஆனால் சிறியதோர் பானையில் குத்தரிசிப் புக்கை மட்டும் இருந்தது. புரிந்து கொண்டனர். பசிக்களை தீர்ந்தது.

இடைக்கிடை கேட்ட துப்பாக்கி வேட்டுச் சத்தங்களையும் மனித வதையின்போது கேட்ட ஓலங்களையும் தவிர 'இப்போது வேறு ஓசையில்லை.

பொழுது சாயும் நேரம். மீண்டும் ......

"தம்பி...." அதே குரல். " அவங்க போட்டாங்கள்...." 

ஒருவித ஆவலுடன் எட்டிப் பார்த்தபோது... ஓர் முதியவர்,

"தம்பியவை சாப்பிட்டியளோ ....? விளங்காதையுங்கோ. என்னால ஏலக்கூடியது தான் ராசர்" அவர் கண்கள் பனித்தது. குறை இவ்வளவு
தான். "குறையோ! என்ன ஐயா இது ..?"கை கூப்பி விடைபெற்றபோது மகாகவி பாரதி நினைவுக்கு வந்தார்...

"தழல் வீரத்தில் ...
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.. காண்"

தள்ளாடும் வயது வரினும் மனித நேயமும் விடுதலை உணர்வும் மறைந்திடுமா என்ன?

(நன்றி - உணர்வு)

உனர்வு:- களத்திலிருந்து வெளிவரும் ஏடு.

-எரிமலை இதழ் 1989.

No comments:

Post a Comment