Monday, 16 March 2026

மைதிலி - அ.காந்தா -வேர்கள் துளிர்க்கும்.

மைதிலி.
~~~~~~~~~~~
"இந்த ரோடு போகும் இடங்களை ஒருக்காப் பாக்க வேணும், இதை விளங்கப்படுத்தி விடுங்கோ" எண்டு அவள் கேட்டாள்.

அப்பத்தான் என்னுடைய கோல்சருக்க மடிச்சபடி வைத்திருந்த வரைபடத்தை எடுத்து விரிச்சன். எங்கடை கொம்பனிப் பொறுப்பாளரும் அந்த இடத்துக்கு வந்திட்டா.

"அடியேய், நீ அந்தச் சண்டைக்கு நிண்டனியே?"

எந்தச் சண்டை எண்டு கேக்கிறதுக்கு முதலிலேயே எனக்கு விளங்கிற்று. இதுக்காலதான் எங்கட பமிலாக்கான்ர கொம்பனி நிண்டு சண்டை பிடிச்சது.

பேந்து பின் வாங்கிப் போச்சிது. வரைபடம் பாத்து இடங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டிச்சினம். பழையபடியே வரைபடம் இருந்த இடத்துக்குப் போனது.

என்ர நினைவுகள் வரைபடத்தில் பார்த்த இடங்களைச் சுற்றியது.

அப்படி எண்டா நான் நிக்கிற இடத்தில இருந்து இன்னும் கொஞ்சத் தூரம்தான் இருக்கும் அந்த இடத்திற்கு. இது கச்சாய் சாவகச்சேரி ரோட் எண்டா... அந்தச் சந்திக்கு அப்பால வெட்டை ஓ... ஓ... அந்த இடத்திலதானே மைதிலி வாயில காயப்பட்டவள். ஒரு எட்டில அந்த இடத்துக்குப் போயிடலாம். முகத்துக்கு நேர கிடக்குது. வலது பக்கம் அங்கால கடற்கரை என்ன...

என்னவோ தெரியாது, மைதிலி அடிக்கடி இந்தச் சம்பவத்தைச் சொல்லுவாள். கடைசியாக எப்ப சொன்னவளெண்டா ஓ... விளக்குவைச்ச குளத்தில வைச்சு சண்டை நடந்து கொண்டிருக்கேக்க.

அவவின்ர வாய் கிழிஞ்ச சண்டைதானே. அதுதான் வாய் ஓயாது அடிக்கடி சொல்லுறவள்.

அவள் கடைசியாகவும் சொன்னது இப்பவும் கண்ணுக்க வந்து நிக்குது. புரட்சிக்குளம் எண்டு பேர் சொல்லிச் சண்ட பிடிச்ச இடத்திற்குப் போயிட்டம். மனசில சிந்தனை ரேகைகள் ஒன்றன் பின் ஒன்றாக மின்னி மறைந்தன.

இந்த இடம் ஓ... செண்பகத்தின் R.P.Gயால் டாங்கி அடிச்சது ஆ... அதில தாட்சாயினியக்கா வீரச்சாவடைந்தவ. அந்தா... அதுக்குள்ளதான்....ஓ... பரணிதாவும் திரேசாவும் ஒரு பங்கருக்குள்ள வீரச்சாவடைந்தவை...

இவள் மைதிலியைச் சும்மா நாளிலையே கண்டுபிடிக்கிறது கடினம்... அதுவும் இப்ப இந்த வெற்றியின் முழுப் பூரிப்பில் அவளை இன்னும் துரத்த வேணுமெண்டு எந்த எந்த மூலைக்க யார் யாரை விட்டுட்டு எங்கெங்கே நிற்கிறாளோ...

ஆறேழு ஆண்டா வேவு பார்த்தவள் எதிரியின்ர வளைவு. சுழிவு, பலம். பலவீனம் எண்டு அக்குவேறு, ஆணிவேறா அலசி வைச்சிருக்கிறவள். எப்ப பார்த்தாலும் எதிரிக்கு நடுவில் நிண்டு தொல்லை கொடுக்கிறதையே சிந்தித்துக்கொண்டிருப்பாள்.

இவளைப் போய் இந்தச் செல் மழைக்க எங்க நான் தேடிப்பிடிக்கிறது...

விழுந்து படுக்கிறதும் எழும்பி ஓடுறதும் நடக்கிறதுமா இயல்பா செல்களுக்குக் கவரெடுத்தபடி போய்க்கொண்டிருக்கும் என்ர சிந்தனைமட்டும் அவளைச் சுத்திச் சுத்தித்தான் போகுது.

போன வருசம் மாங்குளத்தில நிக்கேக்க அவவின்ர ரீம் பிள்ள ஒண்ட ஆமி சினைப்பண்ணிப் போட்டான் எண்டு, அவன்ர பொயின்ர வேவு பார்த்து இரண்டு நாளில மூன்று பேரை முடிச்சாப்பிறகுதான் அவளின்ர முகத்தில மகிழ்ச்சி தெரிஞ்சிது.

இப்பவே அவளின்ர சொத்திவாய் முகத்தைப் பார்க்க வேணும் போல கிடந்தது. ஒருமாதிரி முன்னணி நிலைகளிட்டை போயிட்டம். விளக்கு வைச்ச குளம் வரைக்கும் வந்திட்டம் எண்டு சொன்னவை... அப்படியெண்டா இது அந்த இடமாகத்தான் இருக்க வேணும்.

ஆமி ஏவிக்கொண்டிருந்த செல் எல்லாம் பின்னுக்குப் போய் விழுந்து கொண்டிருந்தன. அவன்ர அஞ்சு இஞ்சி செல்லும், டொங்கான் செல்லும் எங்களத்தான் உரசிப் பார்க்கிறது எண்டு பக்கங்களில் வந்து விழுந்து கொண்டிருக்கு.

வெற்றிகரமாக துரத்தியடிச்சுக்கொண்டு வந்திட்டினம். மறிச்சு வைச்சுக் கொண்டிருக்கும் பிள்ளைகளைக் காண ஆசையாக இருந்திச்சிது.

கண்டதுதான் தாமதம் ஐயோ...

ஒண்டு ஓடிவந்து கையப் பிடிச்சிது. ஒருத்தி "ஹாய்" எண்டு தன்னையும் மறந்து, எதிரி முன்னுக்கு எண்டதையும் மறந்து கத்திக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். பிருந்தா அப்பத்தான் ஓ. பியில் இருந்து வந்து சாப்பிட்டிருக்க வேணும். அந்தக் கையால என்னப் பூசி... அவள் ஸ்பெசல் ரீ எண்டு உடன சுவையான தேத்தண்ணியோட வந்தாள். எட்டிப் பார்த்தன். உடைஞ்ச பங்கருக்குள் இருந்து ஒருத்தி பூஸ்ரரை எரிச்சு ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தாள்.

"என்ன பார்க்கிறியள்? இந்தத் தொண தொணத்த மழைக்க விறகேது? அதுதான் உடைஞ்ச ஆட்டி பூஸ்ரரைக் கொண்டு ரொட்டி சுடுறன்."

பிள்ளைகளோட கதைச்சன். ஆனா கண் மட்டும் அவளையே தேடியபடி. எங்க மைதிலி போட்டாள் எண்டு கேக்க நினைக்கேக்க, பின் பக்கம் இருந்து ஒரு கை என்ர தோளில் விழுந்தது.

"ஹாய்...!” என்றதும் கூய் என்று பக்கத்தில் ஒரு 60 எம். எம் செல்
வந்து விழுந்தது. என்னையும் விழுத்தி, தானும் படுத்துக்கொண்டாள்.

எழுந்த உடனே கைகளைக் குலுக்கிக்கொண்டோம். மகிழ்ச்சி ரேகைகள் மட்டும் முகம் முழுக்கக் கொட்டிக் கிடந்திச்சிது.

"ஹாய்.... எப்படிச் சண்டை..."

"பேந்தென்ன. இதுவரைக்கும் வந்திட்டம்."

"இனி அங்கால...?

"அது இருக்கட்டும் சரி. இந்தா இதைப் பிடியன்"

''ஏன் இது.?''

"முதலில இதுகளைப் பிடி."

"உனக்கேதும் விசரோடி? தொடர்ந்து சண்டைதானே. செல்லடிக்குள்ள நிண்டு மூளை ஏதும் பிசகிட்டோ? உன்ர அத்தியாவசியப் பொருட்களை எனக்கேன் தாறாய் ஏதோ உயில் எழுதித் தாறது போல..."

"சிலவேளை நான் அடுத்த சண்டையில உயிரோட இருக்கிறேனோ தெரியேல்ல. அதுதான்."

அவள் தனது இடுப்புப் பட்டி, மழைக் கவசம், குறிப்புப் புத்தகம் எண்டு எல்லாத்தையும் தந்தாள்.

இப்ப பொழுது நன்றாகப் போய் விட்டிருந்தது. மெல்லக் கேட்டன்.

"இண்டைக்கு இங்க நிண்டிட்டு நாளைக்குப் போறன். என்ன?''

"இதுவெல்லாம் நடக்காது. பதிவுகள் இல்லாமல் இஞ்ச ஒருத்தரும் நிக்கேலாது. உடனையே நடையைக் கட்டலாம்."

இப்படிப் பதில் கிடைச்சிது.

கொஞ்சத்தால,

"இரவுச் சாப்பாட்டு வாகனம் வரும்வரைக்கும் நிண்டு கதைக்கலாம்"

எண்டாள்.

"அமுதாக்கா, பங்கருக்குப் போய் ரோச்சை எடுத்து வாங்கோ... நீ கோல்சருக்கால நோட்புக்க எடன்."

இனி என்ன? இவள் கதை சொல்லத் தொடங்கினா அது படமாகத்தான் போகும்.

அதோட வேவுக்கதைகள் பற்றி சுவாரசியமாகச் சொல்லுறவள் இண்டைக்கு விடுவாளா? ம்... பெண் பிள்ளைகள் பிடிக்கிற சண்டையெல்லாம் பதிய வேணும் எண்டுறவள் சொல்லப் போவதை வேகமாக மனம் அளந்து எடுத்துக்கொண்டது.

ரோச்ச குறிப்புப் புத்தகத்தை நோக்கிப் பாய்ச்சியபடியே சொல்லத் தொடங்கினாள்.

"சண்டை ஆரம்பமாகி ஆறாம் நாள் எங்கட வேவு அணியில ஐந்து பேர் எதிரி எங்கெங்க நிலை கொண்டிருக்கிறானெண்டு பார்க்கிறதுக்கு உள்ளுக்க போனம்.

இடது பக்கமாய் வெட்டை வெளி. முன்னுக்குப் போனால் கச்சாய் ரோட், வெட்டையை மேவி ஒரு பக்கமாய் ஆமி. அவன் எங்களுக்குப் பின்னுக்கு வந்திட்டான். நான் உடனேயே நிலைமைகளைச் சொல்லச் சொல்ல, செல்களைப் போட்டிச்சினம். அதே நேரம் வேவுக்குப் போய் ஆயத்த நிலையில் நிண்ட நாங்கள் முன்னுக்கு ஓடி ஆமியை அடிச்சித் துரத்தினம்...

ரவுன்ஸ் முடிஞ்சு போச்சுது. இப்ப இடது பக்கமுள்ள ஆமியைத் துரத்த வேணும். உடனே பமிலாவின்ர ரீமை எடுத்து அடிபட விடுவம் எண்டு வோக்கியில கதைத்தபடியே நிமிர்ந்தன். முன்னுக்கு ஆமி. பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தன் என்னைச் சுட்டிட்டான். வாயில காயம்.

இப்ப ஆமிக்கு முன்னுக்கு ஐந்து மீற்றருக்குள்ள நாங்கள். உடனேயே ஆமியப் பார்த்தபடியே குண்டிண்ட கிளிப்பைக் கழட்டிட்டன். இறுகப் பிடித்தபடி கையிக்குள்ள வைச்சுக்கொண்டன்.

என்னத் தூக்கவெண்டு எங்கட ஆக்களில ஒருத்தர் ஓடி வந்தார். அவரையும் ஆமி சுட்டிட்டான். எனக்கு மேலதான் விழுந்தார். நல்லாய் இரத்தம் போய்க்கொண்டிருக்க, எனக்கு அவரின்ர இரத்தமும் சேர்ந்து தலை முழுக்க நனைஞ்சுபோயிட்டுது.

எங்கட ஆக்கள் ஓடி வந்து வெப்பன் போட்டு அடிச்சவை. பிறகு ஆமிய வரவிடாது கொஞ்ச நேரம் மறிச்சிச்சினம்.

அதுக்கிடையில எங்களிட்ட இரண்டு பேர் வந்திச்சினம். இதில இரண்டு பொடி கிடக்குது தூக்குவம் எண்டு குனிஞ்சினம். அந்த நேரம் நான் சொல்லுறன் "கையில குண்டு இருக்குது... கிளிப்பைக் கழட்டிட்டன்.. ஐயோ விடுபட்டா வெடிக்கப் போகுது. குண்டை எடுங்கோ... அதிலதான் கிளிப்பைப் போட்டனான். எடுத்துப் பூட்டுங்கோ..."

எண்டு திரும்பத் திரும்ப அதையே சொல்லுறன். அது அவைக்குக் கேட்டமாதிரித் தெரியேல்ல.

"குண்டு கழட்டி வைச்சிருக்குது."

எண்டு கையப் பிடிச்சு வேகமாக பறிச்சு ஆமியின்ர பக்கம் எறிஞ்சிட்டினம்.

என்ர காயத்தைக் கட்டுறதாக இல்லை. கொற கொற எண்டு

இழுத்துக்கொண்டு வந்து பின்னுக்குப் போட்டிச்சினம்.

நான் நினைக்கிறன், செத்திட்டன் எண்டு சொல்லினம். செத்திட்டனோ...? அப்படி எண்டா ஏன் கண்ணத் திறப்பான்? செத்தாலும் கூட எல்லாம் தெரியுமோ...?

இரத்தத்தால தோய்ந்திருந்த முகத்தைத் துடைக்கக் கைய எடுக்க வேணும்போலக் கிடக்குது. அந்த நேரம்,

"இஞ்ச... இதுக்கு உயிர் கிடக்குது. உடனே ஏத்துங்கோ" "சீரியஸ் சீரியஸ் உடனே தூக்கிக்கொண்டு ஓடுங்கோ..."

இப்படி யாரோ சொல்வது கேட்டது.

மைதிலி அக்சன் போட்டுக் காட்டிக்கொண்டிருந்தாள்.

"அட இதுவே கதை? இதைப் போய் எத்தனை தரம் சொல்லிப் போட்டாய். பத்திற்கு மேல இருக்கும்."

எண்டன். அப்ப அவளின்ர சொத்தி வாயால ஒரு அழகான சிரிப்பைச் சிரிச்சாள். அது இப்பவும் நெஞ்சுக்க...

அங்க அந்த ரோட்டுக்குப் பக்கத்தில நிக்கிற வடலியோட நிண்டு மைதிலி சிரிக்கிறமாதிரிக் கிடக்குது. அட அவள்தான்.

இது என்ன இது விசர்? ஒரு வேளை கனவு கண்டிட்டேனோ... சீ. அவள் மாதிரித்தான் தெரிஞ்சிது. இல்ல. இது என்ர பிரமையாகத்தான் இருக்கும்

அந்த இடம்தானே அவளின்ர வாய சொத்தியாக்கினது.

பக்கத்தில் இருந்தவள் மெல்லத் தட்டினாள். பட்டெண்டு திரும்பினன்.

"என்ன இதுக்க உத்து உத்துப் பார்க்கிறியள்? நானும் பார்க்கிறன் ஆமி அசையிறதாத் தெரியேல்ல. ஆனா கனநேரமா பாக்கிறதும், உங்களுக்குள்ள கதைக்கிறதும் சிரிக்கிறதும் உம்மெண்டு மூஞ்சிய வைச்சிக் கொண்டு யோசிக்கிறதுமா இருக்கிறியள். என்ன நடந்தது? "

எண்டாள்.

எனக்குப் படு வெக்கமாய் போச்சிது. அவளைப் பார்த்து அசடு வழியச் சிரிச்சன். போற போக்கப் பாத்தா, நானும் இந்த வாய் கிழிஞ்ச கதையைப் பத்துத் தடவைக்கு மேல் சொல்லிட்டன்போல கிடக்குது.

கண்ணைச் சிமிட்டி அவளைப் பார்த்துச் சிரிச்சுக்கொண்டே கோல்சருக்க கையை விட்டன்.

"இதுக்குள்ளதான் சூரியக்கதிர் ரெண்டு சண்டையில..."

வரைப்படத்தை எடுத்து அந்த இடங்களையும் சம்பவத்தையும் விளங்கப்படுத்தத் தொடங்கினன்.

-அ. காந்தா 

தமிழீழப் பெண்களின் சிறுகதை.

-வேர்கள் துளிர்க்கும் 

தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

No comments:

Post a Comment