இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து கொன்று குவிக்கப்படுகின்றனர். இலங்கை இரு தேசிய இனங்களுக்குச் சொந்தமான நாடு. சிங்கள தேசிய இனமும், தமிழ் தேசிய இனமும் தொன்று தொட்டு தங்களது தாயகமான இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். யாழ்ப்பாணம் - திருகோணமலைப் பிராந்தியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் இன மக்களின் தாயகம் என்பது வரலாற்று உண்மை.
ஜெயவர்த்தனே அரசு ஒரு வலதுசாரி பிற்போக்கு பழமைவாத அரசு. இரு தேசிய இனங்களுக்கும் பொதுவான அரசாகச் செயல்படுவதற்குப் பதிலாகச் சிங்கள தேசிய இனவெறியைத் தனது தளமாக்கி இயங்கி வரும் அரசாக மாறிவிட்டது. இனவெறி இன அழிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது. தமிழினம் அழிக்கப்படுவது ஒன்றே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று இந்த இனவெறி அரசு நம்புகின்றது. அரசியல் தீர்வுக்குப் பதிலாக இராணுவத் தீர்வைத் திணிப்பது இந்த அரசின் கொள்கை என்பது தெளிவாகிவிட்டது.
இன அழிப்புக் கொள்கை ஏகாதிபத்தியவாதிகளின் கொள்கையாகும். அமெரிக்காவில் தொன்று தொட்டு வாழ்ந்துவந்த செவ்விந்தியர்கள் கொன்று குவிக்கப்பட்டு அவர்களின் வளமான பூமியை ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதே அமெரிக்க வரலாற்றின் துவக்கம். கறுப்புநிற மக்களை ஆப்பிரிக்காவில் வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாக்கி அமெரிக்காவிற்குக் பிடித்து கொண்டுசென்று மிருகங்களைப் போன்று உழைக்க வைத்துத் தங்களின் செல்வாதாரங்களைப் பெருக்கிக் கொண்டதுதான் அமெரிக்க செல்வச்சீமான்களின் முன்னேற்றப்பாதை!
இன்றும் தென் ஆப்பிரிக்காவின் தொன்மைக் குடிமக்களான இரண்டு கோடி நீக்ரோக்களை 45 லட்சம் வெள்ளையர்கள் அடித்து உதைத்துக் கொன்று குவித்து மிருகங்களைத் தொழுவில் அடைத்தது போல் அடக்கி ஒடுக்கி இன ஒழிப்பில் ஈடுபட்டிருப்பதற்கு அமெரிக்க ஆதரவே பாதுகாப்பு.
தங்களின் தாய்நாடான பாலஸ்தீனத்திலிருந்து அராபிய மக்களை அடித்து விரட்டிக் கடந்த 40 ஆண்டுகளாக இன அழிப்பில் அகங்காரத்துடன் செயல்படும் இஸ்ரேல் ஆட்சியாளர்களுக்கு முழு உதவி, ஒத்துழைப்பு, பாதுகாப்பு அளிப்பது அமெரிக்க ஏகாதிபத்தியமே.
இவைபோன்றே அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பிறவிக் குணத்திற்கேற்ப தனது கையாளான ஜெயவர்த்தனேயின் ஆட்சிக்கு ஆதரவும் உதவியுமளித்து இனப்படுகொலைக்குப் பட்டாடை போர்த்துகின்றது.
இலங்கையில் இராணுவதளம் அமைத்து இந்தியாவை அச்சுறுத்திப் பணியவைக்கும் ஆக்கிரமிப்பு நோக்குடன் அமெரிக்கா ஜெயவர்த்தனேயைத் தனது ஏவல் நாயாகப் பயன்படுத்துகின்றது. அமெரிக்க இரகசியக் கூலிப்படையைச் சார்ந்த காலிகளும், இஸ்ரேலின் மொசாத் அதிரடிப்படையும், பிரிட்டிஷ் உளவாளிப் பேர்வழிகளும் ஜெயவர்த்தனேயின் இனப் படுகொலைக்கு அடியாட்கள்.
இந்த ஏகாதிபத்திய நிலையை அம்பலப்படுத்தாமல் முறியடிக்காமல் இலங்கைத் தமிழர்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட முடியாது. தங்களது தாயகத்தில் தமிழர்கள் கண்ணியமாகவும் கெளரவமாகவும் சமஉரிமைகளுடனும் வாழக்கூடிய ஒரு நல்ல அரசியல் தீர்வு காண உலகின் அனைத்து முற்போக்கு ஜனநாயக, ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளைத் திரட்டுவது அவசியம். தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று இக்கடமையை நிறைவேற்ற இந்திய அரசை ஊக்குவிக்க வேண்டும்!
No comments:
Post a Comment