Sunday, 12 January 2014

ஆலயநுழைவு

எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென் றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில் அவ்விதம் நோக்க அவிந்தன வோநம் அழகிய நேத்திரங்கள்? 1 திவ்விய அன்பிற் செகத்தையெல் லாம்ஒன்று சேர்த்திட லாகும்அன்றோ? - எனில் அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில் அத்தனை பேரும்ஒன்றே. 2 ஏக பரம்பொருள் என்பதை நோக்கஎல் லாரும் உடன்பிறப்பே - ஒரு பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி லேஉள்ள தோசிறப்பே? 3 'தேகம் சுமைநமைச் சேர்ந்ததில் லை' என்று செப்பிடும் தேசத்திலே - பெரும் போகம் சுமந்துடற் பேதம்கொண் டோம்;மதி போயிற்று நீசத்திலே. 4 என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி எனக்கிழி வாய்த்தெரியும் - சாதி தன்னை விலக்கிடு மோஇதை யோசிப்பீர் சமுக நிலைபுரியும். 5 என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும் ஏழையர்க் கோர்கடவுள் - எனில் முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள் முளைக்கும் பொதுக்கடவுள். 6 உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென் பீர்மிகத் தாழ்ந்தது தாழ்ந்ததென்பீர் - இவை பெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப் பேசிடுவீர் அன்பீர். 7 உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி ஒளிமறைவில் தரத்தான் - மிகப் பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம் பண்ணின தோஅறியேன். 8 சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற் சூழ்வது பூசனையோ - ஒரு சாதியை நீக்கினர்; தலையையும் வாங்கிடச் சதியா லோசனையோ? 9 ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர் என்று மதித்ததுவோ? - சாமி நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல் நீரிற் குதித்ததுவோ? 10 மாலய மாக வணங்கிடச் சாமி வந்திடு வார்என்றீரே - அந்த ஆலயம் செல்ல அநேகரை நீக்கி வழிமறித் தேநின்றீரே. 11 ஆலயம் செல்ல அருகரென்ற சிலர் அங்கம் சிறந்தாரோ? - சிலர் நாலினும் கீழென்று நாரி வயிற்றில் நலிந்து பிறந்தாரோ? 12 தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச் சாமி மலைப்பதுண்டோ? - இங்கு வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி வருத்தித் தொலைப்பதுண்டோ? 13 தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில் சாமிக்குச் சத்திலையோ? - எனில் வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட மேலும் சமர்த்திலையோ? 14 தன்னை வணங்கத் தகாதவரை அந்தச் சாமி விழுங்கட்டுமே - அன்றி முன்னை யிருந்த கல்லோடு கல்லாகி உருவம் மழுங்கட்டுமே. 15 இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி இனத்தினில் பல்கோடி - மக்கள் தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற் சாவது வோஓடி? 16 குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற் கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் அந்த வகையிலும் கூட்டிலையோ? 17 திக்கெட்டு மேஒரு கோயிலன்றோ? அதில் சேரிஅப்பால் இல்லையே - நாளும் பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர் நம்புவதோ சொல்லையே? 18 தாழ்ந்தவர் என்பவர் கும்பிடு தற்குத் தனிக்கோயில் காட்டுவதோ? - அவர் வாழ்ந்திடு தற்கும் தனித்தேசம் காட்டிப்பின் வம்பினை மூட்டுவதோ? 19 தாழ்த்தப்பட் டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச் சாற்றிடும் தேசமக்கள் - அவர் வாழ்த்தி அழைக்கும் யுசுதந்தரம்ரு தன்னை மறித்திடும் நாசமக்கள். 20 தாழ்ந்தவ ருக்கும் உயர்ந்தவ ருக்கும்இத் தாய்நிலம் சொந்தம்அன்றோ? - இதில் சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று சொல்லிடும் நீதிநன்றோ? 21 'தாழ்ந்தவர்' என்றொரு சாதிப் பிரிவினைச் சாமி வகுத்ததுவோ? - எனில் வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த வம்பு புகுத்தியதோ? 22 முப்பது கோடியர் பாரதத்தார் இவர் முற்றும் ஒரேசமுகம் - என ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும் ஒப்பாவிடில் என்னசுகம்? 23 இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும் 'யாம்' என்று தற்புகழ்ச்சி - சொல்வர் இப்புறம் வந்ததும் கோயிலி லும்நம் இனத்தைச்செய் வார்இகழ்ச்சி. 24 மாடுண்ப வன்திருக் கோயிலின் வாயிலில் வருவதற் கில்லைசாத்யம் - எனில் ஆடுண்ணு வானுக்கு மாடுண்ணுவோன் அண்ணன் அவனே முதற்பாத்யம். 25 நீடிய பத்தியில் லாதவர் கோயில் நெருங்குவதால் தொல்லையே! - எனில் கூடிஅக் கோயிலில் வேலைசெய் வோருக்கும் கூறும்பக்தி இல்லையே. 26 'சுத்த மிலாதவர் பஞ்சமர்; கோயிற் சுவாமியைப் பூசிப்பரோ?' - எனில் நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது யாதுக்கு யோசிப்பிரே. 27 நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி நேரில்அக் கோயிலிலே - கண்டும் ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள் கோயிலின் வாயிலிலே. 28 கூறும் 'உயர்ந்தவர்' 'தாழ்ந்தவர்' என்பவர் கோயிலின் செய்திவிட்டுப் - புவி காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை? காட்டுவீர் ஒன்றுபட்டு. 29 வீறும் உயந்தவர் கோயில் புகுந்ததில் வெற்றிஇந் நாட்டில்உண்டோ? - இனிக் கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில் தீதெனல் யாதுகொண்டோ? 30

No comments:

Post a Comment