Sunday, 12 January 2014
விடுதலைக்கு விலங்கு !
மல்லிகை அலுவலகம் . எப்போதும் அதிக இருளும் , அதிக வெளிச்சமும் இல்லாத ஏதோ சூனியத்தினை சுமந்துக் கொண்டிருக்கிற கிழட்டுக் கழுகினைப் போன்ற அச்சமூட்டுகிற தோற்றம்.
இன்றளவும் நீங்கள் அந்தப்பக்கம் போனால் நன்கு கவனித்து பாருங்கள் . ஏராளமான மனித வதைகளை சுமந்தும் ஓலத்தினை எதிரொலித்து,,,,,,.
அந்த கட்டிடத்தின் தோற்றமே மாறிவிட்டது.
அந்தக்காலகட்டத்தில் சிக்கிய யாராவது ஒருவரை இழுத்து வந்து அங்கு அடித்துக் கொண்டிருப்பார்கள்,
ஒரு வேளை அவர்களுக்கு அடிக்க ஆள் கிடைக்காவிட்டால் அதிகாரிகள் " மாதவனும். ரமேசும்" என்னை அழைத்துக் கொண்டு போய் ஏதாவது கேட்டு அடிப்பார்கள்.
ஒருவனின் உடல்வாகு என்பது அவனவனாக திட்டமிட்டு அமைத்துக் கொள்ளும் கட்டிடம் அல்ல !
கடுமையான போரினில் சிக்கிக் கொண்ட சமூகமான ஈழச் சமூகத்தில் இயற்கையின் கொடையோ என்னவோ பல இளைஞர்கள் மிகவும் ஆரோக்கியமான , வலுவான சற்று தடித்த உடல் வாகினை கொண்டிருந்தார்கள்.
பார்ப்பதற்குச் சற்று வலுவான உடல்வாகு கொண்ட என்னைப் பார்த்து " நீ என்ன மைக் டைசன் போல இருக்கிறாய் " என கேட்டு அடிப்பார்கள் நானும் சராசரி மனிதன் தானே ? எனக்கும் உணர்வுகள் இருக்கும் தானே ?.,,
கோபம் என்ற உணர்வு உடலில் உதிரமோடும் அனைவருக்கும் பொதுதானே ? இதையெல்லாம் நான் யாரிடத்தில் சொல்லி நியாயம் கேட்பது ?
நானே இருட்டறையில் சிக்கி க் கொண்ட உதவிகளற்ற உயிராய் இருக்கையில் நான் எங்கே என் சிந்தனைகளை . என் எண்ணங்களை , என் கோபங்களை பகிர்ந்து கொள்வது ?
என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது எது ? என நான் எனக்குள்ளே பல முறை கேள்விக்கணைகளை எய்து கொண்ட பிறகு தேடிக் கண்டெடுத்த விடை என்னவெனில் ,
நான் தமிழன் ! இந்தப் பூமிப்பந்தில் பரந்து வாழும் 12 கோடி தேசிய இனத்தின் மகன்.
மாபெரும் பண்பாட்டுப் பின்புலம் கொண்ட ஒரு தேசிய இனத்தின் மகனான எனக்கு அந்த நேரத்தில் உதவவோ , உறுதுணையாக நிற்கவோ யாருமில்லை என்பதுதான் உண்மை .
ஏனென்றால் தமிழனை யாரும் அடிக்கலாம் ,அடைக்கலாம், அழிக்கலாம். ஆனால் தமிழன் எதிர்த்து ஒரு பார்வை பார்த்தால் அவன் இந்தப் பூமியில் மாபெரும் தீவிரவாதியாக நிலைநாட்டப்படுவான் .
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவரின் கொலை வழக்கு மிகவும் ஒருதலைப் பட்சமாக நடைபெற்று முடிந்திருக்கிறது .
உண்மையில் என்ன நடந்தது என.அறிய யாருக்குமே விருப்பமில்லை.
இந்த கொலை வழக்குகளை விசாரித்த புலனாய்வுத் துறையினர் , தாங்கள் புனைந்த ஒரு கதைக்கு கதாபாத்திரங்களை தேடினர்.
அந்தக் கதாபாத்திரங்களாக சிக்கி கொண்டவர்கள் தாம் நாங்கள்.
உண்மையில் எனக்கு அமரர் இராசீவ் காந்தி " யின் மீது பரிதாபம் தான் மிஞ்சுகிறது.
ஒரு வல்லாதிக்க நாட்டின் முன்னாள் பிரதமர் கொலையின் உண்மைகளை அறிய யாருக்குமே விருப்பமில்லை . என்பதுதான் எத்தனைத் துயரமான விடயம்.
-உள்ளக்குமுறல்
தொடரும் -----
-ராபர்ட் பயஸ்
தண்டனை சிறைவாசி
நடுவண் சிறை
புழல்
சென்னை.
Labels:
ராபர்ட் பயஸ் அண்ணா .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment