Sunday, 19 January 2014
தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு மேல்முறையீட்டு மடல்
உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி
மரணதண்டனை வேண்டாம்
கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி
அ.ஞா. பேரறிவாளன்
மரண தண்டனைச் சிறைவாசி
த.சி.எண். 13906
நடுவண் சிறை, வேலூர் - 2
அன்புக்குரியீர்,
வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன்.
எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநிலையை, சிறைக் கொடுமைகளை வாழ்கின்ற தன்மையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அக்கறையோடும், உள்ளன்போடும் படித்தறிந்து எனது தரப்பு நியாயத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு இம்முறையீட்டின் மூலம் உங்களது மனதை நான் வென்றுவிட வேண்டும் என்றே ஆசை கொள்கிறேன். அதுவே எனது நீதிக்கான போராட்டத்தில் வெற்றியின் படிக்கல்லாக கருதுகிறேன்.
கைது செய்யப்பட்டதன் பின்னணி
1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார் திடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.
ஏற்கனவே 10-6-1991 மற்றும் 11-6-1991இல் எமது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் (வேலூர் மாவட்டத்தில்) தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், திராவிடர் கழகத்தவர் வீடுகளில் விசாரணை மேற்கொண்டபோது எமது இல்லத்திற்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்போது என்னைப் பற்றியும் கேள்வி எழுப்ப, எனது பெற்றோர் நான் சென்னை பெரியார் திடல், விடுதலை அலுவலகம் கணினிப் பிரிவில் பணியாற்றும் விவரத்தையும், அங்கு தங்கியுள்ள விவரத்தையும் கூறி அழைத்து வந்தனர்.
சட்டவிரோதக் காவல்
என்னை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாளை காலை, அதாவது 12-6-1991 அன்று அனுப்பி வைப்பதாக வாக்குறுதி, கூறியே அழைத்துச் சென்றனர். நேரே மாடியில் உள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு துணை தலைமை ஆய்வாளர் ராஜு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் தியாகராசன், சலீம் அலி மற்றும் பலர் இருந்தனர். என்னைப் பற்றியும் எனது கல்வி, குடும்பப் பின்னணி பற்றியும் விசாரித்தனர்.
எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே, என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.
அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.
ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.
சிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான் என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.
இதை ஏன்? கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார்? என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.
மல்லிகையின் கீழ் தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குதான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார். இதுபோல உடல் ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.
ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ அவ்வாறு நடத்தினர், பேசினர். விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19ஆம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.
குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.
இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூற முடியும். எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, டேய், உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள் என்றேன். அவர் கூறினார், ஒன்று ஏ.கே.47 துப்பாக்கி அல்லது ஒயர்லெஸ் கருவி அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை கொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் இருந்தால்தானே கொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது என்று கேட்டேன். அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.
இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், இலண்டனில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது.
இந்த நேரத்தில் என்னை சட்டவிரோதக் காவலில் வைத்திருந்ததற்கான சில அத்தாட்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, புலனாய்வு அதிகாரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் தனது சாட்சியம் பக்கம் 942-ல், 11.6.1991 அன்று எனது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் உள்ள எனது வீட்டில் சோதனை செய்து, எட்டு பொருட்களைக் கைப்பற்றியதை ஒப்புக் கொள்கிறார். 11.6.1991 அன்று என்னைப் பற்றி விசாரணை செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும் பக்கம் - 451ல் கூறுகிறார். 13.6.1991 அன்று எனது தாயார், மல்லிகைக்கு எனது மாற்றுடை கொண்டுவந்தபோது, அவரை சந்திக்க அனுமதி தராமல் துணியை மட்டும் பெற்றுக் கொடுத்தனர் என்பதையும் அவர் மறுக்கவில்லை.
இவற்றுக்கெல்லாம் மேலாக எனது ஒப்புதல் வாக்குமூலம் என்பதில் 11.6.1991 அன்றைய சம்பவத்திற்குப் பின் 19.6.1991 வரை எந்த விவரமும் காணப்படவில்லை. மேலும், வாக்குமூலப்படி என்னை 18.6.1991 அன்று கைது செய்ததாக உள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 அன்று காலை 9.00 மணிக்கு பெரியார் திடல் அருகில் கைது செய்ததாக உள்ளது.
இவையே என்னை எவ்வாறு எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து துன்புறுத்தி, பொய் வழக்குத் தொடுத்தனர் என்பதற்கு சான்றாக உள்ளது.
முதல் நீதிமன்ற ஆஜர் படுத்தல்
இவ்வாறு மறுநாள் காலை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம் என்று பொய்கூறி அழைத்துவந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடுமையான சித்ரவதைகளுக்குப் பின்னர் 19.6.1991 அன்று செங்கல்பட்டு நோக்கி என்னையும், எமது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இராபர்ட் பயஸு என்பவரையும் அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ் மற்றும் சிலர் உடன் வந்தனர். அப்போது நான், இன்றுடன் என்னை விடுதலை செய்துவிடப் போகிறார்கள். தொல்லைகள், சித்ரவதைகள் முடிந்தன என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம், அப்போது எனக்கு எந்த சட்டமும் தெரியாது. அதற்கு முன்னர் எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது.
இந்த நிலையில் செங்கை நீதிமன்றத்தினுள் எமது வேன் நுழைந்தது. அப்போது மேற்சொன்ன அதிகாரிகள் நீதிமன்றத்தில் எங்களை வாய் திறக்கக்கூடாது என்றும் அவ்வாறு அமைதியாக இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையயன்றால் மீண்டும் மல்லிகை அழைத்துச் சென்று துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர். எனவே நாங்கள் மிரண்ட நிலையில் இருந்தோம். பின்னர் உள்ளே அழைத்துச் சென்றனர். நீதிபதி எமது பெயர்களை கூறி அழைத்தார். பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமனிடம் ஏதோ கூறினார். எம்மை அங்கு இருந்த வேறு அறைக்குள் அனுப்பி விட்டனர். பின்னர் நீதிமன்ற கூண்டிலேறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஏதோ வாதம் புரிந்தார். பின்னர் மீண்டும் நீதிபதி முன்பு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது அவர் எனக்கு 18.7.1991 வரை காவல் நீட்டிப்பு கொடுப்பதாகக் கூறினார் எனக்குக் காரணம் புரியவில்லை. மீண்டும் மல்லிகை சித்ரவதைக் கூடத்திற்கே அழைத்து வரப்பட்டோம்.
அந்த ஒரு மாத காலத்தில் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சித்ரவதைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. காயம் ஏற்படாவண்ணம் உள்ளங்கால்களில் கம்பால் அடிப்பர் பின்னர் குதிக்கச் சொல்வர். இவ்வாறு சித்ரவதைகள் தொடர்ந்தன.
இரண்டாவது நீதிமன்ற ஆஜர்படுத்தல்
இரண்டாம் முறையாக உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த தடா நீதிமன்றத்தில் நீதிபதி திரு. சித்திக் முன்பு நான், ராபர்ட் பயஸ், கோடியக்கரை சண்முகம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டோம். அப்போது எனது உறவினர்கள் 200 பேர் அல்லது 300 பேர் வெளியே கூடியிருந்தனர். என் பெயர் கூறி அழைத்தனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன் மற்றும் சில ஆய்வாளர்கள் வந்திருந்தனர். மேல் மாடியில் நீதிபதி அமர்ந்திருந்த அறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டோம். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவரும் எம்மிடம் நீதிபதி முன்பு அமைதியாக நின்றுவிட்டு அவர் கூறுவதைக் கேட்டு தலையசைத்துவிட்டு வரவேண்டும் என்றும் தவறினால் மீண்டும் தங்கள் வசம் ஒப்படைக்கும்போது துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.
நாங்களும் ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி 16.8.1991 வரை காவல் நீட்டிட்பு செய்திருப்பதாகக் கூறியதைக் கேட்டு அமைதியாக வெளியேறினோம். ஒரு அரை வினாடி கூட எமக்கு அங்க நிற்க அவகாசமிருக்கவில்லை. நீதிபதி எம்மை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனவே பயத்தின் காரணமாகவும், நீதிபதி எவ்வித விசாரிப்புகளும் செய்யாததாலும் எம்மால் எந்த முறையீடும் செய்ய முடியவில்லை.
பின்னர் மல்லிகை அலுவலகம் அழைத்து வந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் என்னிடம் நீதிமன்ற வளாகத்தின் வெளியே கூடியிருந்த கூட்டம் யார்? 200,300 பேர் இருந்தனரே, அவர்கள் யார்? நீ வரச் சொன்னாயா? என்றார். எனக்குத் தெரியாது என்றும் எனது உறவினர்களாக இருக்கலாம், என்னால் சரியாகப் பார்க்க அவகாசமில்லாததால் கூற முடியாது என்றும் சொன்னேன். மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னை உங்கள் காவலில் வைத்திருக்கும்போது நான் எவ்வாறு வரச் சொல்ல முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆத்திரமுற்று எனது கன்னத்தில் அறைந்தார். பக்கத்தில் இருந்த ஆய்வாளர்களிடம் என்னை அடிக்குமாறு கூறினார். எனது உறவினர்கள் எனக்கு ஆதரவாக வந்ததுகூட பொறுக்காமல் துன்புறுத்தினார்.
Labels:
அண்ணன் பேரறிவாளன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment