Sunday, 12 January 2014

கேட்பது உயிர்பிச்சையல்ல ? மறுக்கப்பட்ட நீதி !

மூன்றாம் முறையாக நாங்கள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையிலேயே நீதிமன்ற அமர்வு நடந்தது . அந்தக் கிளைச் சிறை வளாகம் சிபிஐ துறையினால் தத்தெடுக்கப்பட்டு எங்களை அடைத்து வைத்துத் துன்புறுத்தப் பயன்படுத்தப்பட்டது. என்னை மல்லிகையிலிருந்து 3-8-1991 அன்று கொண்டு சென்று பூவிருந்தவல்லி கிளைச்சிறையில் கிளைச்சிறையில் அடைத்தனர். அன்று காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்தான் பொறுப்பிலிருந்தார் . தினமும் அதிகாரிகள் முறைவைத்துத் துன்புறுத்துவர். அங்கிருந்த அலுவலகத்தில் (அப்போது அது சித்திரவதைக்கூடம்) வைத்துத்தான் சாட்சி 52 காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி எழுதிய பல பக்கங்களில் , பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாயக் கையெழுத்துகள் பெற்றார். அப்போது உடன் சில ஆய்வாளர்களும் துன்புறுத்தினர். அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை. கையெழுத்திட்டால் என்னை விட்டுவிடுவதாகவும் கூறினார். எனக்கும் தடா சட்டம் தெரியாது. எனக்கு மட்டுமன்று தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது. இந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன். ஆனால் உயிரைக் காக்க நான் அன்று போட்ட கையொப்பங்களே இன்று எனது உயிரை விலை பேசுகின்றன. கடுமையான துன்புறுத்தல்களால் கையெழுத்திட்ட பின் நான் கொட்டடியில் அடைக்கப்பட்டபோது அழுதேன். அப்போது அங்கிருந்த காவலர் கேட்டார் , ஏன் அழுகிறாய் ? என்று நான் நடந்தவற்றைக் கூறினேன். அப்போது அவர் சொன்னார் , கவலைப்படாதே , போலீஸ் காவலில் போடும் கையெழுத்து நீதிமன்றத்தில் செல்லாது எனவே எந்தச் செய்தி அதில் எழுதியிருந்தாலும் உன்னைப் பாதிக்காது, என்றார். நானும் நம்பினேன் . அவர் மனிதநேயத்தோடுதான் சொன்னார் . அவர் கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது . ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது . சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது. எனவே தடா சட்டம் தெரியாது , ஒப்புதல் வாக்குமூலம் தெரியாது ; அதன் சட்ட ரீதியான தாக்கம் தெரியாது ; என்றாலும் கையெழுத்திட்டு விட்டேன் . கையெழுத்திடக் கட்டாயப் படுத்தப்பட்டேன். எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ அதே அறையில் 16-8-1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார். முழுக்க முழுக்க சிபிஐ யினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்துமுன் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் இரகோத்தமன் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர்: நீ ஏதும் துன்புறுத்தியது பற்றிக் கூறினால் , மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம் . சுட்டுக் கொன்று விட்டு , தப்பி ஓடியதால் சுட்டோம் என்றுகூடக் கணக்குக் காட்டிவிடுவோம் , என்று மிரட்டினர். இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும் கிளைச்சிறை இருந்த சூழலும் ,அச்சமும் ,சட்ட அறியாமையும் எனது வாயை அடைத்து விட்டன. அன்றே நானும் ராபர்ட்பயஸும் செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு தண்டனைச் சிறைவாசிகள் அணியும் வெள்ளுடை தரப்பட்டது வேறு எந்த உடையும் பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை . ஓலைப்பாயும் தலையணையும் ,போர்வையும் மட்டுமே தரப்பட்டன. இவை அனைத்தும் ஒரு மரணதண்டனைச் சிறையாளிக்கான நடத்தை விதிகள் என்பதைப் பின்னரே அறிந்தோம். அப்போது எமக்கு சிறைவிதிகள் தெரியாது. -அண்ணன். பேரறிவாளன்.

No comments:

Post a Comment