Tuesday, 13 January 2026

தமிழீழமும் இந்திய வைதீக மார்க்சீயவாதிகளும்.

ஒரு தேசிய சமூகத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் புரட்சிகரமான ஆயுதப் போராட்ட வடிவத்தையும் பிற்போக்கானதென சில இந்திய இடதுசாரி இயக்கங்கள் கண்டன விமர்சனம் செய்துவருவது எமக்கு கவலை அளிக்கிறது.

'மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்' என்ற முத்திரை குத்திக்கொள்ளும் இந்தக் கம்யூனிஸ்ட்டுகள் எமது போராட்டத்தைக் கண்டித்து முன்வைக்கும் வாதம் வருமாறு-

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் குறுகிய குட்டிமுதலாளிய தேசியவாதத்தால் உந்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தால் சிங்களப் பாட்டாளிவர்க்கத்திற்கு விமோசனம் கிட்டப்போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையில் நிலைகொள்ள இது வழிவகுக்கும். தனியரசுக் கோரிக்கை நாட்டை இரண்டாகக் கூறுபோடும். சிங்கள-தமிழ் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கு இடையூறானது. ஆகவே ஒட்டுமொத்தத்தில் இவ்விடுதலைப் போராட்டம் பிற் போக்கானது.

மார்க்சீயவாதிகள் எமக்கு வழங்கும்
இந்த அறிவுரை வருமாறு :

சிறிலங்கா உங்களது நாடு. சிங்களவர்கள் உங்கள் சகோதரர்கள். தமிழீழக் கோரிக்கையை கைவிடுங்கள். போராட்ட இலட்சியத்தை மாற்றியமையுங்கள். வர்க்கப்போராட்டப் பாதையைத் தழுவி சிங்களப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து அகில இலங்கைப் புரட்சிக்காக உழையுங்கள். சிறிலங்காவில் ஒரு மக்கள் சனநாயகக் குடியரசை நிறுவுவதே உங்கள் போராட்ட இலட்சியமாக இருக்கட்டும்.

இந்தக் கண்ணோட்டம் எமக்குப் புதிதானதல்ல. இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பழைய மரபு மார்க்சீயவாதிகள் எழுப்பிவரும் புளித்துப்போன வாதம் இது. ஒரு தேசிய இனப் பிரச்சினையையும் அதன் வரலாற்று ரீதியான சிக்கலான பரிமாணங்களையும் வெறும் பொருள் உற்பத்தி உறவுகளில், வர்க்க உறவுகளில் நிலைநிறுத்திப் பார்க்கும், இந்த வைதீக மார்க்சீயக் கண்ணோட்டம் எமது அரசியல் நிதசர்சனத்தை எந்தவகையிலும் தொட்டு நிற்கவில்லை.

ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு மூலக் காரணி முதலாளியம் அல்ல. இப்பிரச்சினை வர்க்க முரண்பாட்டினால் தோன்றியது அல்ல. இனவாத அடிப்படையில் எழுந்த தேசிய ஒடுக்குமுறை காரணமாகவே இப்பிரச்சினை தோற்றம்கொண்டது. ஒரு பெரிய தேசிய இனம் ஒரு சிறிய தேசிய இனத்தை ஒடுக்கியதன் விளைவாகவே இரு இனங்கள் மத்தியில் முரண்பாடு முற்றியது. இதனால் தேசிய முரண்பாடு (national contradiction) முதன்மை பெற்றது. ஆகவே இத்தேசிய பிரச்சினையில் நாம் பிரதான முரண்பாடாகத் கொள்ளவேண்டியது தேசிய முரண்பாட்டையே தவிர வர்க்க முரண்பாட்டை அல்ல.

தமிழீழ மக்கள், தமிழர்கள் என்ற அடிப்படையில் அதாவது தமிழ் இனம் என்ற அடிப்படையில் அரச ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த இனரீதியான தேசிய ஒடுக்குமுறை தாண்டவமாடும் பொழுது, இனங்கள் மத்தியில் முரண்பாடு தோன்றும்பொழுது வர்க்க ஒருமைப்பாடு சாத்தியம் ஆவதில்லை. இது யதார்த்தமான சமூக உண்மை.

கார்ல் மார்க்சும் இந்த நிலைப்பாட்டையே கொண் டிருந்தார். அயர்லாந்து தேசிய இனப்பிரச்சினையில் அவர் ஆங்கில ஐரிஷ் ஒற்றுமையை வலியுறுத்தவில்லை. மாறாக, அயர்லாந்து மக்களின் தேசிய விடுதலைக்கு குரல்கொடுத்தார். ஆங்கிலேயர் அயர்லாந்து மக்களை இன அடிப்படையில் ஒடுக்கிவரும்பொழுது வர்க்க ஒற்றுமை சாத்தியமாகாது என உணர்ந்துகொண்ட மார்க்ஸ், அயர்லாந்து மக்களின் தேசிய விடுதலையே ஆங்கிலப் பாட்டாளிவர்க்கத்திற்கு விடிவளிக்கும் என்றார்.

ஆளும் வர்க்கமானது தேசிய ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாகப் பிளவுபடச்செய்வதன் மூலம் தனது ஆட்சியதிகாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்கிறது. இதன் காரணமாகவே மார்கஸும் லெனினும் இன ரீதியான தேசிய ஓடுக்குமுறை ஒருமைப் பாட்டிற்கு குந்தகமானது எனக் கருதினர். பேரினவாதத்திற்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் எதிராகக் குரல் எழுப்பிய லெனின், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என வாதாடினார். ஒடுக்கப்படும் இனங்கள் அரசியல் சுதந்திரம் பெறாதவரை பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடு சாத்தியமாகாது என்பது அவரது கருத்து. இந்த ரீதியில் ஒடுக்கப்படும் இனங்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்காக போராடத் தவறுவோர் உண்மையான சோசலிசவாதிகளாக இருக்க முடியாது என்கிறார் லெனின்.

ஒடுக்கப்படும் ஈழத்தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்காக நாம் போராடுகிறோம். தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நீடிக்கும் வரை தமிழ் மக்கள் அரசியல் சுதந்திரம்பெறாதவரை சிங்கள-தமிழ் பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடு சாத்தியமாகப் போவதில்லை. பிரதான முரண்பாடான தேசிய முரண்பாடு முதலில் தீர்வுகாணப்படவேண்டும். அதற்கப்புறமே வர்க்கப் போராட்டம் சாத்தியமாகும் இதுவே எமது நிலைப்பாடு. இதுவே எமது போராட்டப்பாதை. இதனைப் பிற்போக்கான போராட்டத் திட்டம் எனக் கருதுபவர்கள் உண்மையான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுகளாக இருக்க முடியாது.

சிறிலங்கா எனப்படும் சிங்கள தேசம் எமது தாய்நாடு அல்ல. தமிழீழமே எமது தாய்ப்பூமி. புனிதமான எமது தாய் மண் எமது பிறப்புரிமை சொத்து. எமது இனத்தின் தனித்துவத்திற்கும். கட்டுக்கோப்பிற்கும் அத்திவாரமாக இருப்பது எமது தாய்ப்பூமி. எமது தாய்மண்மீது எமக்குரிய உரிமை. இறைமை மாற்றமுடியாதது.

சிங்கள மக்கள் எமது சகோதரர்கள். சுரண்டப் படும் சிங்கள விவசாய தொழிலாள வர்க்கத்தை எமது புரட்சிகரத் தோழமை சக்தியாகவே நாம் கருதுகிறோம். இப்பாட்டாளி வர்க்கத்தின் விடிவுக்காகப் போராடுவதும் எமது பிரதான இலட்சியம். தமிழீழ சுதந்திரப் போராட்டம் சிங்கள முதலாளிய இனவாத அரசுக்குத்தான் எதிரானது. இந்த அரசுக்கு முண்டுகொடுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரா னது. ஒடுக்கப்படும் தமிழ் இனம் முதலில் விடுதலைபெறவேண்டும். விடுதலைபெற்ற சுதந்திரத் தமிழீழம் சிங்களப் பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிக்கு வழிவகுக்கும் போராட்டகளமாக அமையும்.

சிங்கள ஆளும்வர்க்கத்தின் பேரினவாத சித்தாந்த மாயைக்குள் சிங்களப் பாட்டாளிகள் சிறைபட்டுக் கிடக்கும்வரை வர்க்க ஒருமைப்பாடும், வர்க்கப் போராட்டமும் அகில இலங்கைப் புரட்சியும் சாத்தியமாகப் போவதில்லை. இது நீண்ட கால நடைமுறை அரசியலில் நாம் கண்ட உண்மை. இந்த யதார்த்த புறநிலை உண்மைக்கு மாறாக நாம் எமது விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு வர்க்கப் போராட்டப் பாதையை தழுவிக்கொள்வதென்பது படுமுட்டாள்தனமாகும். இதனால் எமது இனத்தின் அழிவுக்கு மட்டுமன்றி சிங்களப் பாட்டாளிகளின் நிரந்தர அடிமைத்தனத்திற்கும் நாம் வழிவகுப்பதாக அமையும். இதனை இங்குள்ள வைதீக சித்தாந்தவாதிகள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

நாம் பிரிவினைவாதிகள் அல்லர். அன்றி ஒரு நாட்டை துண்டுபோடுவது எமது நோக்கமல்ல. நாம் எமது ஒடுக்கப்படும் மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம். எமது தாய்ப் பூமியின் இறைமையை மீட்கப் போராடுகிறோம். நாம் ஒரு தேசிய இனம் என்கிற ரீதியில், இனப் படுகொலையின் விளிம்புக்குத் தள்ளப்படும் இனம் என்ற ரீதியில். எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட நாம் போராடுகிறோம், இந்த வகையில் எமது போராட்டம் நியாயமானது தர்மமானது.

தேசிய ஒடுக்குமுறை உக்கிரமடையும் சூழ்நிலையில் ஒரு தேசிய இனம் அரசியல் சுதந்திரத்திற்காகப் போராடுவது நியாயமானது மட்டுமன்றி அது ஒரு புரட்சிகரமான செயலும் கூட. சோசலிச தத்துவம் இதனை அங்கீகரிக்கவே செய்கிறது. எந்த சூழ்நிலையில் ஒரு தேசிய இனம் தனியரசுப் போராட்டத்திற்கு தள்ளப்படுகிறது என்பது பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்

ஒரு பெரிய அரசால் ஏற்படும் அனுகூலங்கள் பற்றியும். பூகோளப் பொருளாதார தொடர்புகளின் நலன்கள்பற்றியும் தமது நாளாந்த அனுபவம் மூலம் மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள். ஆனால் தேசிய ஒடுக்குமுறையும். தேசிய முரண்பாடும் முற்றி சக வாழ்வு சகித்துக்கொள்ள முடியாததாகி, பொருளாதார உறவுகளுக்கும் முட்டுக்கட்டை ஏற்படும் பொழுது பிரிந்துசெல்வது தவிர்க்க முடியாதது. வர்க்கப் போராட்ட நலனுக்கும் அதுவே சரியான பாதை

தமிழீழ மக்களும் இதே சூழ்நிலையில்தான் தனியரசுப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்று ரீதியாக இது தவிர்க்கமுடியாதது. ஆகவே எமது சுதந்திரப் போராட்டத்தை இந்திய பிரிவினைவாத எழுச்சிகளுடன் ஒப்புநோக்குச் செய்வதோ. பிற்போக்கு முத்திரை குத்துவதோ மிகவும் தவறான அணுகுமுறையாகும். இதனை உண்மையான மார்க்சீய - லெனினிய அணுகுமுறை என்று சொல்லமுடியாது.

-விடுதலைப்புலிகள் இதழ்.
ஜூலை 1986.
குரல்:10.

No comments:

Post a Comment