"ஈழ விடுதலைப் போராளிகள் ஐந்து அமைப்புகளாக ஏன் பிளவுபட்டு நிற்க வேண்டும். ஒரே அணியில் ஒன்றுசேர முடியாதா?" என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
"ஒற்றுமைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். ஒரு உறுதியான, தெளிவான இலட்சியத்தின் அடிப்படையில்தான் போராளி அமைப்புகள் ஒன்றுசேர முடியும். ஆனால் விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு நிறையவுண்டு. நடத்தையிலும் வேறுபாடு உண்டு. விடுதலைப் புலிகள் தனித்துவமானவர்கள். தனித்துவப் பண்பியல்பு கொண்ட வர்கள். ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு போன்ற உயரிய பண்புகளை இறுக்கமாகப் பேணுபவர்கள்.சாவுக்குத் துணிந்தவர்கள். எதிரியின் கையில் உயிருடன் சிக்காதிருக்க நஞ்சுக் குப்பிகளை அணிந்திருப்பவர்கள். தமிழீழத் தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்காகத் தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள். இந்த அற்புதமான பண்புகளும் இலட்சிய உறுதிப்பாடும் ஏனைய அமைப்பினரிடம் காணமுடியாது" என்று விளக்கினேன். மௌனமாக ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். விடுதலைப் புலி வீரர்கள் கடைப்பிடிக்கும் பண்பியல்புகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.
உமா மகேஸ்வரனைப் பற்றிக் கேட்டார். "அவரும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராமே? தனது இயக்கம்
தான் உண்மையான புலி இயக்கம் என்று சொல்லித் திரிகிறாராம். பிரபாகரனுக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை?" என்று கேட்டார்.
"போராளி அமைப்புக்களைச் சேர்ந்த அனைவரையுமே ஈழத்துப் புலிகள் என்று தமிழ்நாட்டு மக்கள் அழைப்பது வழக்கமாகிவிட்டது. இந்தக் குழப்பத்தால் மற்றைய அமைப்புகள் புரியும் பாவம், பழி எல்லாமே புலிகள் இயக்கம் மீது விழுந்து விடுகிறது. உமா மகேஸ்வரனும் ஒரு காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தவர். இயக்கத்தின் ஒழுக்க விதிகளை மீறி ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டதால் அவர் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் புளொட் என்ற புதிய அமைப்பை உருவாக்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார். புலிகளின் தலைமையை அழிக்கவும் முயற்சி செய்து வருகிறார். அவர் ஒரு கொடிய மனிதர், தமிழ் நாட்டிலுள்ள அவரது பயிற்சி முகாம்களில் கொடுமைகள் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது. அவை வதை முகாம்களாக மாற்றப்பட்டிருக்கின்றனவாம். பல அப்பாவி இளைஞர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் எமக்குக் கிடைத்திருக்கிறது'' என்று கூறினேன்.
"அப்படியான பேர்வழியா? எனக்கு அவர் பற்றி விபரமாகத் தெரியாது. அவரை நாளை சந்திப்பதாக நேரம் ஒதுக்கியிருக்கிறேன். அதை இரத்துச் செய்ய வேண்டும். இப்படியான பேர்வழியுடன் எந்த உறவும் வைத்திருக்கக் கூடாது" என்றார்.
-தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம்.