தவிபு தொடர்பில் வன்மத்துடன் பொய்களை அவிழ்த்துவிட்ட பத்திரிகையாளர் மணியும் டுபாக்கூர்
சங்கரும்
அண்மையில் விடுதலை புலிகள் செய்த
மாபெரும் தவறுகள் என்ற தலைப்பில்
சவுக்கு சங்கர் மூத்த பத்திரிகையாளர்
மணியை நேர்காணல் செய்திருந்தார்.
மூத்த? பத்திரிகையாளர் மணி ‘உண்மையிலேயே இவர் பத்திரிகையாளர்தானா என’ சந்தேகப்படும் வகையில் ஏகப்பட்ட பொய்களை தெளித்திருக்கிறார். இல்லை. இல்லை. வாளி வாளியாக கொட்டியிருக்கிறார்.
மறுதரப்பில் இருந்த சவுக்கு சங்கரை நான் சட்டை செய்யவில்லை. புலனாய்வு எலி என தன்னைத்தானே பிரபலப்படுத்திக்கொண்டு அலைகிற நபர். ‘நானும் ரௌடிதான்’ என்பது போல ‘நானும் பத்திரிகையாளர்தான்’ வகையறா.
வழமையாக திராவிடம் , கருணாநிதி, ஸ்டாலின் , போலிஸ் ஐ.ஜி, டி.ஐ.ஜி என பினாத்திக்கொண்டு இருக்கும் டுபாக்கூர் சங்கர் அவருக்கு தொடர்பேயில்லாத புவிசார் நலன் அரசியல், போரியல் என்ற ஏரியாவுக்குள் நுழைந்தது சிரிப்பை வரவழைத்தது.
இது ஒருவகையில் பத்திரிகையாளர் மணிக்கும் பொருந்தும்.
அவரது பத்திரிகையாளர் ஆளுமை என்பது இந்திய தேர்தல் அரசியலை சார்ந்தது. அவரது புவிசார் நலன் அரசியல், போரியல் தொடர்பான அறிவு என்பது பூஜ்ஜியம்.
ஆனால் இந்த பூஜ்ஜியத்தினால் மட்டுமே மணி புலிகள் தொடர்பான பொய்களை வாரி இறைக்கவில்லை. அதையும் மீறி விடுதலை புலிகளின் மீது அவருக்கு காழ்ப்புணர்ச்சி,வன்மம் இருப்பது இந்த நேர்காணலில் பட்டவர்த்தனமாக தெரிந்தது.
பொதுவாக புலிகள் தொடர்பாக வன்மத்துடன், காழ்ப்புணர்ச்சியுடன் பொய்களை அள்ளி வீசுபவர்களை கடந்தே நான் போகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் இவர்களின் பொய்களை நிருபிக்க பதிவுகள் எழுதிக்கொண்டிருப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் இயலாத காரியம்.
ஆனால் சவுக்கு சங்கர்- மணி நேர்காணலில் உள்ள பொய்களை தோலுரித்து உண்மை தகவல்களை தருமாறு சில முகநூல் நண்பர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள்.
அதனால் சங்கர்- மணி நேர்காணலில் உள்ள பொய்களை வெளிக்கொணரும் வண்ணம் இந்த பதிவு.
#உண்மையில் இந்த பதிவை எழுதுவதற்கு சிரமமாக இருந்தது. காரணம் ஒவ்வொரு பொய்யையும் அடையாளம் காட்டி உண்மைகளை எழுதவேண்டும். ஆங்காங்கே பொய்கள் இருந்தால் பதிவை உடனே எழுதி முடித்துவிடலாம். ஆனால் 1:16 மணித்தியாலம் நெடுக பொய்கள் இருப்பதால் அவ்வளவு பொய்களையும் மறுக்க பல பக்கங்கள் எழுதவேண்டும்.
அதனால் முக்கியமான பொய்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றை தோலுரித்து இந்த பதிவை எழுதியிருக்கிறேன்.
அவைகளை நேர்காணலில் உள்ள வரிசைப்படியே (timeline) தந்திருக்கிறேன். உங்களுக்கும் அந்த பொய்களை timeline இல் உள்ள நேரத்தை கொண்டு உடனடியாக காணலாம்.
எனது முகநூலை ஒரு மாதத்திற்கு முடக்கியி்ருப்பதால் எனது முகநூல் நண்பர்கள் ஊடாக இந்த பதிவை பதிவிடுகிறேன்.
#சரி இனி மணியின் பொய்களை வரிசையாக பார்ப்போம்.
7:24 - “யாழ் கோட்டை அதை ஆங்கிலத்தில் elephant pass என்று சொல்வார்கள். “ - திருவாளர் மணி
எனது பதில் : யாழ் கோட்டை என்பது யாழ்ப்பாண நகரில் 1618 இல் போர்த்துகேயரால் கட்டப்பட்ட கோட்டை. அது ஆங்கிலத்தில் Jaffna Fort என அழைக்கப்படுகிறது.
The Jaffna Fort is a pentagon-shaped fortress occupying fifty-five acres of land in the Jaffna city facing the Jaffna lagoon.
இது ஒரு கோட்டை. ஐங்கோண வடிவில் இருக்கும் கோட்டை. ஒரு பிராந்தியம் அல்ல.
இந்த யாழ்கோட்டையை விடுதலை புலிகள் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே கைப்பற்றியாகிவிட்டது.
பின்னர் 1995 இல் இலங்கை இராணுவம் ‘ரிவிரெச’ இராணுவ ஆபரேசன் மூலம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றினார்கள்.
ஆனையிறவு பெருந்தளத்தைத்தான் Elephant Pass என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
#இதை மணி சொன்ன ‘பொய்’ என கூறமுடியாது. ஆனால் போரியல் பற்றிய அறிவில் பூஜ்ஜியமாக இருப்பவர்களின் பார்வை என கூறலாம்.
இது வெறுமனே இரண்டு இராணுவ தளங்களை தவறுதலாக பெயரைத்தானே மாற்றி சொன்னார் என அணுகமுடியாது.
காரணம் இந்த இரண்டு இராணுவ தளங்களினதும் strategic importance வேறு வேறு பரிமாணத்தை கொண்டவை.
யாழ் கோட்டையை விடுதலை புலிகள் கைப்பற்றிய போது ஏற்படுத்திய அதிர்வலைகளை விட ஆனையிறவு பெருந்தளத்தை கைப்பற்றிய போது அது ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மடங்கு கனதியானது.
ஆனையிறவு பெருந்தளத்தை கைப்பற்றியபோது அது உலக ஒழுங்கின் பார்வையில் ஏற்படுத்திய தாக்கம், போர் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் என பல பரிமாணங்களை கொண்டது.
யாழ் கோட்டை என்பது ஒரு இராணுவ தளம். அந்த தளத்தை விடுதலை புலிகள் 1990 இல் மூன்று மாத காலமாக முற்றுகையிட்டு கைப்பற்றினார்கள்.
ஆனால் ஆனையிறவு பெருந்தளம் என்பது ஒரே ஒரு இராணுவ தளமல்ல. அது ஆனையிறவை போல பல இராணுவ தளங்களை உள்ளடக்கிய பெருந்தளங்களின் கூட்டுத்தொகுப்பு.
•#முதலில் இதை ஏன் இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பு என அழைக்கிறேன்?
#இயக்கச்சி, #ஆனையிறவு எனும் இரு பெரும் தளங்களின் காவலரண் நீளம் மட்டுமே 76கிமீ. அதனது பரப்பளவு சதுர கிமீ 259.
இவைகளோடு பெரும் எண்ணிக்கையான ஆட்டிலறிகளை கொண்ட தளமான #பளை இராணுவ தளம், அமெரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ அணியான 53வது டிவிசனின் #தாளையடி இராணுவ பெருந்தளம், இராணுவ,கடற்படை தளமான #வெற்றிலைக்கேணி பெருந்தளம், தெற்கு பகுதியில் #பரந்தன், #உமையாள்புரம் எனும் இரு பெருந்தளங்கள், அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளின் பின்பலமாக பல இராணுவ முகாம்கள், பின் அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு அரணாக இருந்த நூற்றுக்கணக்கான மினி இராணுவ முகாம்கள் என மிகப் பலமான இராணுவ தளங்களின் தொகுப்புதான் அது.
இத்தகைய அதி உச்ச பாதுகாப்பு அரண்களை கொண்டிருந்ததால்தான், தாக்குதலுக்கு சிலமாதங்கள் முன்பு கூட அமெரிக்க தளபதி ஒருவர் ஆனையிறவு கூட்டுப்படை பெருந்தள இராணுவ வலயத்தை பார்வையிட்டு, இது யாராலும் வீழ்த்த முடியாத தளம் ( impregnable) என கூறினார். அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.அது போரியல் யதார்த்தத்துடன் சொல்லப்பட்ட கூற்று.
•#இங்கு இன்னொரு விடயத்தை குறிப்பிட்டேயாகவேண்டும்.
யாழ்குடா நாட்டை இலங்கை இராணுவம் அதனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு யாழ்குடாவின் கழுத்துப்பகுதியான ஆனையிறவு தளம் இன்றியமையாதது. அந்த கழுத்துப்பகுதி strategically important.
தமிழ்நாட்டில் உள்ள பலரும், 2000 ஆண்டில் விடுதலை புலிகள் 40000 இலங்கை இராணுவத்தை யாழ் கோட்டையில் முடக்கினார்கள் என உளறி கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல.
அது யாழ் கோட்டையல்ல. யாழ் குடா எனும் பரந்த பிராந்தியம்.
விடுதலை புலிகள் இந்த கழுத்துப்பகுதியில் இருந்த ஆனையிறவு பெருந்தளம் மற்றும் இயக்கச்சி, வெற்றிலைக்கேணி, தாளையடி, பளை போன்ற பெருந்தளங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான இராணுவ முகாம்கள் எல்லாவற்றையும் கைப்பற்றி ‘யாழ் குடா எனும் பிராந்தியத்தில் இருந்த 40000 இலங்கை இராணுவத்தின் மீதான முற்றுகையைத்தான் இறுக்கினார்கள். யாழ் கோட்டை எனும் 55 ஏக்கர் அளவுள்ள சிறிய கோட்டையை அல்ல.
•#ஆனையிறவு பெருந்தளத்தை கைப்பற்றியதோடு மட்டுமே இதனது தாக்கம் முடிவடைந்துவிடவில்லை. இன்னும் பல விடயங்கள் உண்டு.
யாழ்குடா மீதான புலிகளின் முற்றுகை அகற்றப்படவேண்டுமாயின் ஆனையிறவு தளத்தை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற போரியல் நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு இருந்தது.
இதற்கு மத்தியில் 2000 ஆண்டு டிசம்பர் 24ம் திகதியிலிருந்து ‘சமாதானத்திற்கான சூழலை உருவாக்கும்’ முயற்சியாக ஒருதலைப்பட்சமான ஒரு மாத போர்நிறுத்தத்தை (month-long unilateral ceasefire) புலிகள் அறிவித்தனர்.அவ்வாறு ஒவ்வொரு மாதமும் நீட்டிப்பு செய்தனர். இது ஏப்ரல் 24 ம் திகதிவரை நீடித்தது. சரியாக நான்கு மாதங்கள்.
இந்த நான்கு மாதங்களில் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து ஒரு தாக்குதலும்(counter-offensive operations) நடத்தப்படவில்லை.
அவர்கள் தற்காப்பு போர்முறையையே (self-restrained defensive tactics) கடைபிடித்தார்கள். ஆனால் இராணுவம் வழமைபோல தாக்குதலை தொடுத்து கொண்டிருந்தது.
இந்த நான்கு மாத கால விடுதலை புலிகளின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த காலத்தில், புலிகள் எந்தவிதமான counter-offensive operations ஐயும் நடத்தமீட்டார்கள் என்ற போரியல்ரீதியான அனுகூலம் இலங்கை இராணுவத்திற்கு கிடைத்தது.
இந்த அனுகூலத்தை வைத்துக்கொண்டு இலங்கை இராணுவம் தனது சகல வளங்களையும் ஆனையிறவு பகுதியை கைப்பற்ற ஒன்று குவித்தது.
•#விடுதலை புலிகள் ஒருதலை பட்சமான தங்களது போர்நிறுத்தத்தை செய்திருக்காவிடில் என்ன நடந்திருக்கும்?
புலிகள், ஆனையிறவை கைப்பற்றுவதற்கான இலங்கை இராணுவத்தின் வள குவிப்பை தடுக்க மற்றைய strategic position மீது offensive தாக்குதல்களை தொடுத்து கொண்டே இருந்திருப்பார்கள்.
இது இலங்கை இராணுவத்திற்கு அந்த strategic position களில் படையணிகளை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் (distracting force deployments).
இது எதிரிகளை பரவலாக கால்பரப்ப வைத்து அவர்களது நிலையை thin ஆகவே வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் போரியல் உத்தி. அதேபோல் இலங்கை இராணுவத்திற்கு கால அவகாசமும் கிடைத்திருக்க போவதில்லை.
•#ஆனையிறவு பகுதியை கைப்பற்ற இலங்கை இராணுவம் நடத்திய ‘அக்னி கீல’ ( தீச்சுவாலை) operation
சரியாக 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி இலங்கை இராணுவம் ஆனையிறவு தளத்தை கைப்பற்றும் முயற்சியாக புலிகளின் முன்னரங்கு பகுதிகளின் மீது அக்னி கீல ( தீச்சுவாலை) எனும் இராணுவ நடவடிக்கையை (operation) ஆரம்பித்தது.
இந்த சமர் நடந்த நிலப்பகுதி குறுகலான முன்னர் குறிப்பிட்ட கழுத்துபகுதியில்.
இந்த இராணுவ நடவடிக்கையில் இலங்கை தனது போர் திறன் அதிகமுள்ள 52,53,55 படையணிகளை ( division) , நான்கு மாத போர்நிறுத்தத்தில் கிடைத்த அவகாசத்தில் சிறப்பு பயிற்சி, தயார்படுத்தல்களுடன் களமிறக்கியிருந்தது.
அத்துடன் அதனது சகல இராணுவ வளங்களையும் ஒன்று குவித்திருந்தது.
•#இனி சமரில் நடந்தவை.
ஏப்ரல் 24ம் திகதி , சுமார் 15000 இலங்கை இராணுவத்தினர் , இதுவரை நடத்திராத அளவிற்கான சூட்டு ஆதரவுடன் (supported by heavy artillery, multi-barrel rocket fire and aerial and naval bombardment) அந்த குறுகலான கழுத்துபகுதியினுள் முன்னேற தொடங்கினர். கிளாலி , எழுதுமட்டுவாள், நாகர்கோவில் முனைகளில் உள்ள புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கியே தாக்குதல் தொடங்கியது.
மூன்று நாட்களுக்கு பின்னர் 400 ற்கும் மேற்பட்ட இலங்கை படையினர் உயிரிழந்து, 2000 ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்து தங்களது தீச்சுவாலை நடவடிக்கையை கைவிட்டு பின்வாங்கினர்.
•#இலங்கை இராணுவம் இந்த நான்கு மாத போர்நிறுத்த காலத்தில் புதிய ஆயுதங்களை வாங்கி, சகல இராணுவ வளங்களை ஒன்று குவித்தும் அந்த ‘கழுத்துபகுதியை’ கைப்பற்ற முடியாமல் போனது உலக ஒழுங்கிற்கு ஒன்றை உணர்த்தியது.
•#எதை உணர்த்தியது?
இலங்கை எனும் Sovereign State இனது இராணுவத்திற்கும் non state actor விடுதலை புலிகளின் படையணிகளிற்கும் இடையே #படை வலு சமநிலை ஏற்பட்டுவிட்டது என்பதை உலக ஒழுங்கிற்கு உணர்த்தியது.
அதனோடு தொடங்கியதுதான் மேற்குலகின் போர்நிறுத்தத்தோடு கூடிய சமாதான பேச்சுவார்த்தை எனும் பொறி.
இதுவரை இந்த பந்தியை வாசித்தவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளலாம் . இது யாழ் கோட்டை , ஆனையிறவு பெருந்தளம் என்ற பெயரை தெரியாமல் மாற்றி சொல்லிவிட்டார் என கடந்து போக கூடியதல்ல. இதற்கு பின்னே புவிசார் நலன் அரசியல்,போரியல் சார்ந்த கனமான விடயங்கள் இருக்கின்றன.
மேலேயுள்ள பந்தியை உள்வாங்கி புரிந்து கொள்வது கூட திருவாளர் மணிக்கு கடினமாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் தேர்தல் அரசியலையே காலா காலத்திற்கும் அவரது ஊடகவியலாளர் வாழ்க்கையில் பார்த்து வந்தவர். டுபாக்கூர் சங்கரிற்கு சொல்லவே தேவையில்லை.
#திருவாளர் மணியின் அடுத்த பொய்:
17:45 - “பிரபாகரகன் எல்லாவற்றிற்கும் இராணுவ தீர்வு சாத்தியம் என நினைத்தார். இது தொடர்பாக சமீபத்தில் எரிக் சொல்ஹெய்ம் கொடுத்த பேட்டிதான் முக்கியமானது”.
18:46 - “பிரபாகரனின் இராணுவ தீர்வே சரியானது என்ற பார்வை அபத்தமானது என்று அன்டன் பாலசிங்கமே உணர்ந்து கொண்டார்”.
20:00 - “9/11 தாக்குதலிற்கு பிறகு உலக அரசியல் மாறியது. ஆனால் இது பற்றிய புரிதல் பிரபாகரனிற்கு இருக்கவில்லை”.
எனது பதில் : 2001 இற்கு பிறகான உலக அரசியலை புலிகள் புரிந்து கொள்ளவில்லை என்பது சரியா? இதற்கான பதிலை வெறும் ஒற்றை வரியில் கூறுவது கடினம்.
இந்த போரின் பின்னே போரியல் நகர்வுகள், ராஜதந்திர நகர்வுகள், உலக ஒழுங்கின் நகர்வுகள் என பல பரிமாணங்கள் உண்டு.
•#போரின் இலக்கு என்ன?
போர் என்பது அரசியல் இலக்கை நோக்கி நகர்வதற்கான ஒரு வழி. போர் ஒன்றினூடாக இந்த அரசியல் இலக்கை அடையவே எல்லா தரப்பும் முயல்கின்றன.
தலைவர் பிரபாகரனும் இந்த அரசியல் இலக்கை நோக்கியே இந்த போரை நடத்தினார்.
•#அவரின் இலக்கு எதுவாக இருந்தது?
உலக ஒழுங்கில் இறையாண்மையுள்ள தமிழீழ அரசு.
•#உண்மையில் 9/11 இற்கு பிறகான சூழ்நிலை மட்டும்தான் விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்க காரணமா?
இல்லை.
9/11 என்ற தாக்குதல் நடந்தது 11-Sep-2001.
இதற்கு ஒன்பது மாதங்களிற்கு முன்னரேயே விடுதலை புலிகள் தங்களது பேச்சுவார்த்தைக்கான ராஜதந்திர நகர்வுகளை தொடங்கிவிட்டார்கள்.
24/12/2000 இலிருந்து ஒரு மாதத்திற்கு ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் செய்வதாக விடுதலை புலிகள் அறிவித்தார்கள்.
பிறகு அதன் முடிவில் மேலும் ஒரு மாதம் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டது.
இவ்வாறு 24/4/2001 வரையில் 4 மாதங்கள் விடுதலை புலிகள் ஒருதலைபட்சமான போர்நிறுத்தத்தை கடைப்பிடித்தார்கள். (இதற்கான இணைப்பு, படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன)
•#அது என்ன ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம் (unilateral ceasefire) ?
காரணம் இலங்கை விடுதலை புலிகளின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க விரும்பவில்லை.
ஆக விடுதலை புலிகள் 4 மாதங்கள் போர் நிறுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக கடைப்பிடித்தார்கள். எந்தவிதமான offensive இராணுவ நகர்வுகளையும் செய்யவில்லை.
மறுபுறத்தில் இலங்கை இராணுவம் வழமைபோல தாக்குதல்களை நடத்தியது.
•#ஏன் விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள்?
நான் மேலே சொன்ன அதே அரசியல் இலக்கு.
அவர்களின் டிசம்பர் மாத போர் நிறுத்தத்திற்கான உத்தியோக அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்.
“If Sri Lanka responds positively by ceasing armed hostilities against our forces and takes steps to implement the Norwegian proposal of mutual confidence building measures, the LTTE will be prepared to extend the period of peace to create cordial conditions for a stable cease-fire and direct negotiations”.
•#ஏன் விடுதலை புலிகள் கடைசி வரை போரிட்டே தமிழீழத்தை அடைந்திருக்க முடியாதா?
இதற்கு போரின் உள்ளா்ந்த தன்மையே காரணம்.
விடுதலை புலிகள் ஒரு Non State Military Power.
#ஒரு Non state military power இற்கு என்றே போரியல் போதாமைகள் இருக்கின்றன.
இது தொடர்பான விரிவான பதிவொன்றை முன்பே எழுதியிருக்கிறேன்.
அது உலக ஒழுங்கில் இறையாண்மையுள்ள அரசை
உருவாக்குவதில் இருக்கும் சிக்கலான பக்கங்களை எளிமையாக விவரித்திருக்கிறேன்.
அதற்கான இணைப்பு கீழே.
சரி.
திருவாளர் மணி திரும்ப திரும்ப ஏன் தலைவர் பிரபாகரன் இராணுவ தீர்வையே விரும்பினார் என கூறவேண்டும்?
அதுதான் விடுதலை புலிகள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களிடேயே அவர் உருவாக்க விரும்பும் சித்திரம்.
•#அதன் மறைமுக பொருள் என்ன?
இலங்கையில் அரசியல் தீர்வு என்ற ஒன்று இருந்தது. அதை தலைவர் பிரபாகரன் புறக்கணித்து இராணுவ தீர்விலேயே நாட்டம் செலுத்தியதால்தான் இந்த ஆயுத போராட்டம் முடிந்தது என்று தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை கடத்த முயல்கிறார்.
#திருவாளர் மணியின் அடுத்த பொய்கள்
20:25 - “சமாதான பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக அன்டன் பாலசிங்கம் seaplane இல் வந்திறங்குவதற்கு சந்திரிகா அம்மா அனுமதிக்கிறார். சந்திரிகா அம்மா இது ஒரு political problem என்பதை புரிஞ்சுகிட்டாங்க.”
24:03 - “2002 இல் சந்திரிகா அரசாங்கம் அரசியல் தீர்வுக்காக இறங்கி வருகிறது. சந்திரிகா அம்மா விடுதலை புலிகளின் தாக்குதலில் கண்ணை இழந்த பிறகும், அன்டன் பாலசிங்கம் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இலங்கை வருவதற்கு அனுமதித்தது.
எனது பதில்: இதற்கு சீரியஸாக பதில் சொல்வதற்கு முன்பு ஒரு விடயம்.
திருவாளர் மணி இதை சொன்னவுடன் வடிவேலின் பழைய காமெடி ஒன்றுதான் என் நினைவுக்கு வந்தது.
வடிவேல் ஒரு முழி முழித்துகொண்டு என்னை இவ்வளவு தூரம் நம்புறீயேடா என கட்டி அணைப்பாரே அதே சீன்தான்.
அந்த சந்திரிகா அம்மா அப்புடியே திருவாளர் மணியை அணைத்து ‘இவ்வளவு அப்பாவியா இருக்குறியே மணி’ என கூறியிருப்பார்.
சரி. இனி சீரியஸான பதில்.
2002 இல் நடந்த சமாதான பேச்சுவார்த்தை என்பது விடுதலை புலிகள் அடித்த சம்மட்டி அடியினால் உருவானது.
2001 ஏப்ரல் மாதம் நடந்த தீச்சுவாலை முறியடிப்பு சமரோடு இலங்கையில் படைவலு சமநிலை ஏற்பட்டது.
அதன் பின் 24/07/2001 அன்றுதான் உலக போரியல் சாதனையான கட்டுநாயக்க விமான படை தளம் மீதான விடுதலை புலிகளின் கமாண்டோ தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 15 விமானப்படை போர் விமானங்களும்,ஹெலிகாப்டர்களும் முற்றாக அழிக்கப்பட்டன. அத்துடன் 3 பயணிகள் விமானங்களும் அழிக்கப்பட்டன.
கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதலோடு படைவலு சமநிலை புலிகள் பக்கம் சாய தொடங்கியது.
இந்த படைவலு சமநிலையை இலங்கை இராணுவம் பக்கம் சாய வைப்பதற்கான கால அவகாசத்தை எடுத்துகொள்ளும் பொருட்டு உலக ஒழுங்கால் வரையப்பட்ட திட்டம்தான் போர்நிறுத்த ஒப்பந்தம்.
அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவிற்கும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் தேர்தல் அரசியல் முரண்பாடுகள் இருந்ததுதான். அதனால் ஒருவர் செய்வதை மற்றைய தரப்பு குறை சொல்வது என்பது கட்சி அரசியலில் சாதாரண விடயம்.
ஆனால் இந்த கட்சி தலைவர்களை எல்லாம் தாண்டி இலங்கை அரசுக்கு என குணவியல்பு உண்டு.
அது தனது இலங்கை இராணுவத்தின் முதுகெழும்பு புலிகளால் முறிக்கப்பட்டிருந்ததால், அதை சீர்படுத்த ஒரு கால அவகாசத்தை எடுத்து கொண்டது.
அந்த கால அவகாசத்தை தந்ததுதான் உலக ஒழுங்கின் அனுசரனையுடன் நடத்தப்பட்ட 2001 ஆம் ஆண்டு CFA ஒப்பந்தம்( CeaseFire Agreement).
அதனால் சந்திரிகா அம்மா தனது கண் போனால் கூட பரவாயில்லை. அரசியல் தீர்வே முக்கியம் என நினைத்து அன்டன் பாலசிங்கத்தை வரவழைக்கவில்லை.
கால அவகாசத்தை உருவாக்கும் பொருட்டு இலங்கை அரசுக்கு வரவழைக்க வேண்டிய தேவை இருந்தது.
இந்த உலக ஒழுங்கு எப்படி CeaseFire Agreement ஐ விடுதலை புலிகளுக்கான பொறியாக மாற்ற தனது காய்களை நகர்த்தியது என்பது பற்றி முன்னரேயே விளக்கி பதிவொன்றை இட்டிருக்கிறேன்.
“ எல்லா சமாதான பேச்சுவார்த்தைகளும்
சமாதானத்தை நோக்கியது அல்ல
.
அவை ராஜதந்திர / போரியல் நகர்வுகளின் ஒரு பகுதியாகவும் இருக்கும் “
என பகுதி -1, பகுதி -2 என இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.
திருவாளர் மணி இந்த கட்டுரையை படித்து புவிசார் நலன் அரசியல், போரியலின் அரிச்சுவடிகளை கற்றுக்கொள்ளலாம்.
#திருவாளர் மணியின் அடுத்த பொய்கள்
26:25 - “விடுதலை புலிகளுக்கு உலக நாடுகளில் இருக்கும் acceptance வீழ்த்த மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு அமைச்சராக லக்ஷ்மன் கதிர்காமரை நியமிக்கிறார்.”
27:54- “விடுதலை புலிகளை தடை செய்யவேண்டும் என உலக நாடுகள் முழுக்க லக்ஷ்மன் கதிர்காமர் ராஜதந்திர சுற்று பயணங்களை மேற்கொண்டு இருந்தார். அந்த லக்ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொலை செய்ததன் பின்னர் , உலக நாடுகள் விழித்து கொண்டன. ஆமாம் கதிர்காமர் சொன்னது போல புலிகள் பயங்கரவாதிகள்தான் என உலக நாடுகள் அறிந்து கொண்டன”.
28:53 - “இரண்டாவதா என்ன பண்ணுனானுங்க ( விடுதலை புலிகளை குறிப்பிடுகிறார்). நீலன் திருச்செல்வம்னு ஒருத்தர். அவர் international intellectual. அவர் உலக நாடுகளிடம் “ புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுக்கு நீங்கள் ஆயுத உதவி வழங்குவது என்பது post 9/11 உலகில் அபாயகரமான விடயம்” என கூறுகிறார்.இவர போட்ட பிறகு (கதிர்காமர்) அவரையும் (நீலன் திருச்செல்வம்) போட்டுறாங்க.
29:31 - “ இந்த ரெண்டு death இனால் , இதுனால இதுக்கு முன்னால அவுங்களுக்கு (புலிகள்) இருந்த சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக கிடைத்த international support வெறும் support இல்ல. International இடம் இருந்து கிடைத்த arms, medicine என என்பவையாக இருந்த உதவிகள்”
எனது பதில்: லக்ஷ்மன் கதிர்காமர் முதன் முதலில் வெளியிறவு துறை அமைச்சராக பதவியேற்றது 1994 இல். சந்திரிகா 1994 இல் பதவியேற்றவுடன், அவர்தான் லக்ஷ்மன் கதிர்காமரை Minister of Foreign Affairs இற்கு நியமித்தார்.
அன்றிலிருந்து 1994-2001, 2004- 2005 இல் இறக்கும் வரை வெளியுறவுதுறை அமைச்சராக இருந்தார்.
அடுத்தது “விடுதலை புலிகளை தடை செய்யவேண்டும் என உலக நாடுகள் முழுக்க லக்ஷ்மன் கதிர்காமர் ராஜதந்திர சுற்று பயணங்களை மேற்கொண்டு இருந்தார். அந்த லக்ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொலை செய்ததன் பின்னர் , உலக நாடுகள் விழித்து கொண்டன. ஆமாம் கதிர்காமர் சொன்னது போல புலிகள் பயங்கரவாதிகள்தான் என உலக நாடுகள் அறிந்து கொண்டன” என்ற வடையை சுடுகிறார்.
லக்ஷ்மன் கதிர்காமரை கொன்ற பிறகுதான் விடுதலை புலிகள் அரசியல் கொலை எல்லாம் செய்பவர்கள் என உலக ஒழுங்கிற்கு தெரிய வருகிறது. அதற்கு முன்பு தெரியாது.
நம்மை போன்ற சாமானியர்களுக்கு கூட புலிகளின் எல்லா அரசியல் கொலைகளும் தெரிந்திருக்கிறது. ஆனால் விடுதலை புலிகள் செய்த அரசியல் கொலைகளை எல்லாம் இலங்கை அரசு உலகுக்கு சொல்லாமல் இரகசியமாக வைத்திருந்திருக்கிறது பாருங்களேன்.
சரி. விடயத்திற்கு வருகிறேன்.
அரசியல் கொலையை எப்படி உலக ஒழுங்கு அணுகுகின்றது?
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இது உங்களின் நாளாந்த வாழ்க்கையின் புரிதலில் சொல்லப்படும்
‘ கொலை ‘ அல்ல.
இது அரசியல் கொலை (political assassination) .
#இது நாடுகளுக்கிடையான ராஜதந்திர உறவு, நாடுகளின் தேசிய நலன், விடுதலை போராட்டம் , அதற்கான போர், புவிசார் அரசியல் போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய தளத்தில் நடக்கும் ஆட்டம். இதற்கான ஆட்டவிதிகளே வேறு. அதை உங்களின் நாளாந்த வாழ்க்கை புரிதலில் அணுகாதீர்கள்.
#சரி . ராஜீவ் காந்தி அரசியல்கொலை மட்டும்தான் நவீன அரசியல் வரலாற்றில் நடந்த ஒரே கொலையா?
கீழே சில உதாரணங்கள் தருகிறேன். இவை உலகத்திற்கே தெரிந்தவைதான். ஆனால் உங்களுக்கு ஞாபகமூட்ட இதை தருகிறேன்.
•#முதலாவது இணைப்பு அமெரிக்காவின் CIA உலகின் பல பாகங்களில் நடத்திய political assassination களை பற்றியது. guardian பத்திரிகையில் வந்த சிறு கட்டுரை. கூகிளில் தேடினால் இதை போன்ற நூற்றுகணக்கான கட்டுரைகள், தகவல்கள் வரும். அதிலும் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவை அரசியல்கொலை செய்ய CIA செய்த முயற்சிகள் உலகபிரசித்தமானவை.
https://www.google.co.uk/amp/s/amp.theguardian.com/us-news/2017/may/05/cia-long-history-kill-leaders-around-the-world-north-korea
•#அடுத்தது CIA வின் ‘ அளவுக்கு மீறிய ‘ அரசியல் படுகொலைகளுக்கு எதிராக உருவான விமர்சனத்தை தொடர்ந்து, அதை கட்டுப்படுத்துவதற்காக அன்றைய ஜனாதிபதி Gerald R. Ford இனால் கொண்டுவரப்பட்ட நேரடி சட்டம் Executive Order 11905 பற்றிய இணைப்பு கீழே .
https://en.m.wikipedia.org/wiki/Executive_Order_11905
•#அடுத்தது இஸ்ரேல் இன்றுவரை செய்துமுடித்த அரசியல்கொலைகளின் பட்டியல் இணைப்பு கீழே.
https://en.m.wikipedia.org/wiki/List_of_Israeli_assassinations
•#இவ்வளவு ஏன் 2001 இல் நேபாளத்தின் அரச குடும்பத்தை முற்றாக கொலை செய்தது இந்தியாவின் RAW தான் என நேபாளத்தின் முன்னாள் பிரதமர் Pushpa Kamal Dahal பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
#இன்று மேற்குநாடுகள் political assassination என்ற சொல்லாடலை தவிர்த்துவிட்டு targeted killing என்ற சொல்லாடலை சமயோசிதமாக பயன்படுத்துகின்றன.
Targeted killing is defined as a form of assassination carried by governments against their perceived enemies. Analysts believe it to be a modern euphemism for the assassination (prominent premeditated killing) of an individual by a state organization or institution outside a judicial procedure or a battlefield.
வல்லாதிக்க நாடுகள் political assassination ஐ பல பல வகைகளில் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் செய்கிறார்கள்.
உதாரணம் radioactive substance and nano poisonous substance . முன்னாள் வெனிசூலா நாட்டின் தலைவர் Hugo Chavez மரணத்திலும் அமெரிக்காவின் பங்கு உண்டு என இன்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதெல்லாம் ஒரு சின்ன சாம்பிள் மட்டுமே.
இந்த நிமிடம் வரை நாடுகளுகிடையிலான ராஜதந்திர உறவுகளை, போரியல் மேலாண்மையை அடிப்படையாக வைத்து பல அரசியல்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. காரணம் நீங்கள் அது துப்பாக்கி சூடு அல்லது குண்டுவெடிப்பாக மட்டும்தான் நடக்கும் என கற்காலம் போல் நினைத்துகொண்டுருக்கிறீர்கள். Update ஆக வேண்டியது தமிழ்மக்கள்தான்.
•#சரி. திருவாளர் மணி சொல்வது போல லக்ஷ்மன் கதிர்காமரை கொன்றதால்தான் உலக ஒழுங்கு விடுதலை புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்ததா?
ராஜீவ் காந்தி அரசியல் கொலை செய்யப்பட்ட ஆண்டு 1991.
இலங்கை ஜனாதிபதி பிரேமதாச அரசியல் கொலை செய்யப்பட்ட ஆண்டு 1993.
இதற்கு பின்பும் விடுதலை புலிகள் தமது இலக்கிற்கு தடையாக இருந்த பலரை அரசியல் கொலைகள் மூலம் அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.
அது ஒரு பட்டியலே இருக்கிறது.
ஆனால் இந்தியா மட்டுமே 1992 இல் விடுதலை புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது.
ஆனால் ஏன் உலக ஒழுங்கின் Great powers எதுவும் புலிகளை தடைசெய்யவில்லை?
சரி. இனி அடுத்து.
அமெரிக்கா புலிகளை தடை செய்த ஆண்டு 1997.
பிரித்தானியா தடை செய்த ஆண்டு 2001.
அமெரிக்காவும், பிரித்தானியாவும் புலிகளை தடை செய்த பின்புதான், 2002 இல் இதே மேற்குலகின் அனுசரனையுடன் CFA ( CeaseFire Agreement) நடந்தது.
அப்பொழுதெல்லாம் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் விடுதலை புலிகள் பல அரசியல் கொலைகளை நடத்தியிருக்கிறார்கள் என்பது தெரியாதா?
அடுத்து ஐரோப்பிய யூனியன் தடை செய்த ஆண்டு 2006.
ஏன் மேலே குறிப்பிட்ட இந்த உலக ஒழுங்கு புலிகளை தடை செய்ய இத்தனை ஆண்டுகாலம் எடுத்தது?
ஏன் அவர்கள் யாருக்கும் இது ‘மனித கொலை’ என தெரியாதா?
ஏன் சாமானியர் உங்களை போன்று ‘ மனித கொலை’ என்ற பார்வையில் அணுகவில்லை?
ஏனென்றால் ராஜதந்திர/போரியல்/புவிசார் அரசியல் ஆட்டம் இப்படித்தான் ஆடப்படும்.
•#இதன் பின்னே ஒளிந்துள்ள உண்மை என்ன?
உலக ஒழுங்கு அதனது நலனுக்கு ஏற்ப இந்த ராஜதந்திர/ போரியல் ஆட்டத்தை ஆடும். ஆட்டவிதிகளை மாற்றும்.
அவைகளின் நலனுக்கு ஒத்திசைவாக இருக்கும்போது ‘சுதந்திர போராட்டமாகவும்’, எதிர் நிலைக்கு போகும்போது ‘ பயங்கரவாதமாகவும்’ அது கட்டமைத்து காய் நகர்த்தும்.
#ஆக விடுதலை புலிகளுக்கு எதிரான காய் நகர்த்தலின் ஒரு பகுதியாக ஐரோப்பிய யூனியன் 2006 இல் தடைசெய்தது என்பது லக்ஸ்மன் கதிர்காமர் அரசியல் கொலையின் எதிர்வினை அல்ல.
அந்தநேரத்தில் உலக ஒழுங்கின் நலன் விடுதலை புலிகளின் நலனுடன் முரண்பட்டிருக்கிறது. அதாவது விடுதலை புலிகள் உறுதியாக தமிழீழம் மட்டுமே ஒரே இலக்கு என்று இருந்தது உலக ஒழுங்கின் புவிசார் அரசியல் நலனுடன் முரண்பட்டிருக்கிறது.
அது எப்படி முரண்பட்டது என்பதை ஆசிய பிராந்தியத்தில் சீன-அமெரிக்க போட்டி என்பதன் பின்னணியில் முன்னரே விரிவாக பதிவிட்டிருக்கிறேன்.
#திருவாளர் மணியின் அடுத்த பொய்களை மீண்டும் தருகிறேன்.
28:53 - “இரண்டாவதா என்ன பண்ணுனானுங்க ( விடுதலை புலிகளை குறிப்பிடுகிறார்). நீலன் திருச்செல்வம்னு ஒருத்தர். அவர் international intellectual. அவர் உலக நாடுகளிடம் “ புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுக்கு நீங்கள் ஆயுத உதவி வழங்குவது என்பது post 9/11 உலகில் அபாயகரமான விடயம்” என கூறுகிறார்.இவர போட்ட பிறகு (கதிர்காமர்) அவரையும் (நீலன் திருச்செல்வம்) போட்டுறாங்க.
29:31 - “ இந்த ரெண்டு death இனால் , இதுனால இதுக்கு முன்னால அவுங்களுக்கு (புலிகள்) இருந்த சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக கிடைத்த international support வெறும் support இல்ல. International இடம் இருந்து கிடைத்த arms, medicine என என்பவையாக இருந்த உதவிகள்”
எனது பதில்: அவர் கூறியதை திரும்பவும் தருகிறேன்.
“அவர் உலக நாடுகளிடம் “ புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுக்கு நீங்கள் ஆயுத உதவி வழங்குவது என்பது post 9/11 உலகில் அபாயகரமான விடயம்” என கூறுகிறார்.இவர போட்ட பிறகு (கதிர்காமர்) அவரையும் (நீலன் திருச்செல்வம்) போட்டுறாங்க.”
நீலன் திருச்செல்வத்தை விடுதலை புலிகள் அரசியல் கொலை செய்த திகதி 29-7-1999.
ஆனால் திருவாளர் மணி புலிகள் கதிர்காமரை கொன்ற பிறகு நீலன் திருச்செல்வத்தை கொன்றதாக கூறுகிறார்.
அதில் வேறு ‘நீலன் திருச்செல்வம் post 9/11 பிறகு புலிகளுக்கு நீங்கள் ஆயுத உதவி வழங்குவது அபாயகரமானது’ என கூறினாராம்.
திருவாளர் மணியின் இந்த அண்ட புழுகு கலாய்ப்பதற்கு கூட தகுதியில்லாதது.
“இந்த ரெண்டு death இனால் , இதுனால இதுக்கு முன்னால அவுங்களுக்கு (புலிகள்) இருந்த சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக கிடைத்த international support வெறும் support இல்ல. International இடம் இருந்து கிடைத்த arms, medicine என என்பவையாக இருந்த உதவிகள்” என மணி கூறுகிறார்.
உலக வரலாற்றிலேயே விடுதலை புலிகள் இயக்கம் மட்டுமே 1987- 2009 வரை எந்த இறையாண்மை அரசின் உதவியும் இன்றி போராடிய விடுதலை அமைப்பு.
அவர்களின் ஆயுத கொள்வனவு உலகின் கள்ள சந்தைகளினூடாக பெற்றுக்கொண்டது.
ஆனால் மணி international புலிகளுக்கு ஆயுத உதவி வழங்கியதாக கூறுகிறார்.
மணியும் டுபாக்கூர் சங்கரும் எந்தெந்த உலக நாடுகளின் அரசுகள் புலிகளுக்கு உதவியை வழங்கின என்பதை கூறினால் என்னை போன்றவர்கள் அறிந்து கொள்வோம்.
இவ்வளவு நீநீநீண்ட பதிவு முதல் 30 நிமிடங்களுக்காக எழுதப்பட்டதுதான்.
இன்னும் முக்கால் மணித்தியால காணொளி இருக்கிறது.
அதை அடுத்த பதிவில் தருகிறேன்.
No comments:
Post a Comment